தன்னை அறியும் இந்தப் போராட்டம் தொடர்ந்து தான் ஆக வேண்டும். மனிதன் இந்தப் பிடியைத் தளரவிட முடியாது. தளரவிட மாட்டான். எப்பேர்ப்பட்ட பரிணாம வளர்ச்சியை அவன் பெற்றிருக்கிறான்? எத்தனை மனவலிமை? எவ்வளவு பொறுமை? எத்தனை கடுமையான உழைப்பு? கேள்வி கேட்டு பதில் தெரிந்து அதை எல்லோருக்கும் பயனாகக் கொடுப்பதில் எவ்வளவு கர்வம் மனிதனுக்கு? தான் யார் என்று மனிதன் அறியாதா போய் விடுவான்? இந்த ஒரு சமாதானம் நெஞ்சுக்குள் ஏற்படத்தான் செய்கிறது. எல்லா நம்பிக்கைகளும் ஆரம்பத்தில் வெற்று நம்பிக்கைகள்தான்.
தன்னைப் பற்றி விசாரிப்பதற்கு முன்பு மேற் சொன்னவற்றையெல்லாம் நாம் முன்னிறுத்தி யோசித்து தனக்குள் மூழ்க வேண்டும். தொழிலாளர் சர்வாதிகாரம், வணிகவியல், இராணுவ முனைப்பு, மதங்களின் சத்தியங்கள், கடவுளர் கதைகள் அனைத்தையும் என்ன என்று விசாரித்து தெளியவேண்டும். இவை காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளவர்களோடு விவாதம் செய்யக்கூடாது.
ஒரு விஷயத்தை நிலைநிறுத்துவதற்கு மனிதர்கள் படும் பாடு வேடிக்கையானது. உண்மையை அணுகுவதற்கு முன்பு பொய்ப் படங்களைக் கண்முன் காட்டுவார்கள். ‘எட்டு மணி நேர உழைப்பு என்பது எப்படி வந்தது? சனி, ஞாயிறு விடுமுறை யாரால் கிடைத்தது’ என்று சிவப்புக் கொடிக்காரர்கள் உரக்க கத்த, ‘ஆமாம்’ என்றுதான் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால் அதுவா விடுதலை கொடுத்தது? அதுவா சிக்கல் இல்லாத வாழ்க்கையைத் தந்தது? அதனால் எல்லோரும் எல்லாவிதமாகவும் வளம் பெற்று விட்டார்களா? சர்வாதிகாரம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அது எதிர்க்கப்படும், எதிர்க்கப்பட்டது, இடிந்து விழுந்தது.
வணிகவியல் உலகத்தின் ஒரு பக்கம் வெற்றி பெற்றதால், தொழிலாளர் சர்வாதிகாரம் கேள்விக்குறியாயிற்று. ஆனால் வணிகவியலில் மனிதருடைய ஏற்றத்தாழ்வு பிரம்மாண்டமாக இருந்தது. ஜாதி வெறியால் ஏற்பட்ட தீமைகளைவிட உயர்வு தாழ்வு அதிகம் தெரிந்தது.
–
‘அந்த மதம் சரியில்லை’ என்று இந்த மதம் கிளற, ‘இந்த மதம் சரியில்லை’ என்று அந்த மதம் கிளற உலகத்தில் பல நூறு மதங்கள், பலநூறு வழிகள். ‘விதம் விதமான ஆறுகள் பெருகி விதம்விதமான இடத்தில் கடலில்தான் கலக்கிறது’ என்று வெற்று சமாதானம் சொன்னாலும் அந்த ஆறும் இந்த ஆறும் அடித்துக் கொள்வதும், இழித்துப் பேசுவதும், பழித்துக் கிடப்பதும் நடக்கத்தான் செய்கிறது. ஆறு என்கிற உபமானம் பொய்யாய் போயிற்று.
எல்லா ஆச்சார, அனுஷ்டானங்களும் அகந்தையை கொண்டு அகந்தையை வளர்க்க பாடுபடுபவை. காவி உடுத்தல் தனக்கல்ல; எதிராளிக்குத் தான் யார் என்று காட்ட. தாடி வளர்த்தல், மீசை மழித்தல் தனக்கல்ல; தான் இன்னார் என்று பிறருக்கு அறிவறுத்த. திருச்சின்னங்களும் உடைகளும் தொப்பிகளும் கோஷங்களும் மனிதரைப் பிளவுபடுத்தின. எதிரிகளாக நினைக்க வைத்தன.
நான் என்ற அகந்தை அழிய மதங்கள் முயற்சிக்கவேயில்லை. என்ன செய்வது இனி? முயற்சித்துதான் ஆகவேண்டும். ‘நீ திரும்பு. நீ உள்ளுக்குள் போய். அடுத்தவரைப் பற்றி கவலைப்படாதே. நீ தொடங்கு’ என்று உத்தமமான ஆன்மிகம் பேசுகிறது.
‘நான் திரும்பினால் போதுமா? என்னை தூசாக நினைப்பார்களே’ என்ற பயம் வருகிறது. ஆனால் இந்தப் பயத்தின் அடிப்படையில்தான் பல்வேறு இஸங்களும் வளர்ந்திருக்கின்றன. விடியலிலிருந்து இரவு வரை இடுப்பு ஒடிய வேலை என்கிற வேதனையிலிருந்து மீட்டுக் கொடுத்தது உண்மை தானே. அது ஒரு பெரும் இயக்கமாக, கொள்கையாக, பேச்சாக, சட்ட திட்டமாக, ஒரு வரலாறாக, ஒரு வடிகாலாக வளர்ந்தது உண்மைதானே?
அது வளரமுடியும் எனில் உண்மையை அறிவது ஏன் வளர முடியாது? உண்மையைப் பற்றி சத்தியத்தை நோக்கி நடப்பது, குழுவாகப் பயணிப்பது, மிகப் பெரிய கும்பலாக மாறுவது, ஜனத்திரள் அத்தனை பேருக்கும் சத்தியம் தெரிவது நடக்காதா போய்விடும்? வேதகாலம் வராதா போய்விடும்?
வணிகவியல் கைகோர்த்துக் கொண்டுதான் வளர்கிறது. இராணுவம் பல தனிமனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஒழுக்கத்துக்கு வந்து ஒரு கட்டுப்பாடு, ஒரு கட்டுக்கோப்பு ஏற்படுத்தித் தான் நகர்கிறது. மதங்களும் அப்படித்தான் ஆட்கள் சேர்க்கின்றன. அடையாளங்கள் தனித்தனியாக வைத்துக் கொள்கின்றன. அதேபோலத்தான் சத்தியத்தை நோக்கி சகலரும் பயணிப்பது நடைபெற வேண்டும். நடைபெறும் என்ற தெளிவு மனத்தில் இருந்தால்தான் தனக்குள் புகமுடியும்.
இந்தத் தனக்குள் புகுவதைச் சொல்லித் தருவதற்கு விதவிதமான பொய்கள் இருக்கின்றன. உடம்பு பற்றிய கவனமே அதாவது ‘யோகமே உன்னை காட்டும்’ என்று உரக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல.
நோயற்று வாழ யோகம் உதவி செய்கிறதே தவிர வேறு எதுவும் செய்துவிடவில்லை. நோய் இருப்பின் தன்னை அறிதல் என்பது இயலாத விஷயம்தான். வயதான பிறகு தன்னுள் மூழ்குவதில் சிக்கல் இருக்கிறது. தன்னைப் பற்றி விசாரிக்க இளமையே மிகச் சரியான காலம். அந்தப் பக்குவம் ஏற்பட்டுவிட்டால் வயதான பிறகும் அந்த வழி, தெளிவு மறக்காது. அப்படியானால் யோகம் அறிய வேண்டுமா, கூடாதா? யோகம் அறிந்து கொள்ளலாம். ஆனால் அது தன்னை அறியும் வழி அல்ல. தன் உடம்பை நேர்படுத்திக் கொள்ளும் விஷயம், அவ்வளவே.
மூச்சு குறித்த பிரக்ஞை ஏற்படுகிறபோது மனம் குறித்த சிந்தனை நிச்சயம் வரும். அட இது யோகம் தானே. ஆமாம். இது ஹடயோக விஷயம்தான். இந்தப் பயணம் மிக நீண்டது. ஆறு கடக்க படகு உதவி செய்யுமே தவிர, ஆறு கடந்த பிறகு படகை விட்டு இறங்கி தொடர்ந்து நடக்க வேண்டியதுதான்.
சலசலத்து ஓடுகின்ற ஒரு இழுப்புடன், சுழலுடன் நடக்கின்ற நதியைக் கடக்கின்ற பக்குவம் போலத் தான் ஹடயோகம் உபயோகப்படுகிறது. மலையில் ஏற, சரிவில் இறங்க படகு வைத்து என்ன செய்வது? மூச்சு சீரான பிறகு உடம்பின் உறுப்புகளுக்கு அமைதி கொடுத்த பிறகு, குடலையும் நுரையீரலையும் இதயத்தையும் சுகமாக வைத்துக்கொண்ட பிறகு கத்தி வெட்டோ, கரு ரத்தக் கட்டியோ வலி தராதபோது தன்னை அவதானித்தல் எளிதாக நடைபெறும்.
இது மந்திர ஜபம் அல்ல. வெறுமே கேள்வி அல்ல. இது கவனிப்போடு இருப்பது. இதை வார்த்தையாக்குகிறபோது, மற்றவரோடு பகிர்ந்துகொள்கிற போது நான் யார் என்று விசாரித்தல்தான் அழகு என்று சொல்லப்படும். நான் யார், நான் யார் என்கிற வாக்கியம் எங்கேயும் அழைத்துப் போகாது. அது ஒரு கவனம். சிதறாத கவனம். அசையாத கவனிப்பு.
மனம் என்ன செய்கிறது என்று கவனிக்கத்தொடங்க மனம் அடங்கத் தொடங்கும். மனம் என்ன செய்கிறது என்று மனத்தால் மனத்தைக் கவனிப்பதுதான் இதன் ஆரம்பம். மனம் உள்ளே இருக்கின்ற மனத்தை கவனிக்கிறது. ஆனால் மனம், உள்மனம் இரண்டும் ஒன்றே. இது ஒரு செயலைப்போல ஆரம்பத்தில் நடந்தாலும் இது செயலற்று போவதற்கு உண்டான முயற்சி.
இதைச் சொல்லால் விளக்க முடியவில்லை. ஆனால் கவனிக்கிறபோது இது பிடிபட்டுவிடும். இது முயற்சியால் அடையப்படுவது அன்று. முயற்சி நிற்கும் இடத்தில் இது தொடங்கும். இதைச் சொல்லாக்குகிற போதுதான் இவ்வளவு குழப்பம் வருகிறது. வெறுமே இருப்பதற்கு முயற்சி என்பது தேவையே இல்லை. ஒவ்வொன்றாய் நழுவவிடவேண்டியதுதான். தானாக நழுவும். கவனிக்க கவனிக்க, மெல்ல கரைந்து காணாமல் போகும்.
இதை இப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். கண்மூடிப் படுத்துக் கொண்டிருக்கிறோம், தூங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், தூக்கம் வர இப்படியும் அப்படியும் புரள்கிறோம். ‘ஏன் தூக்கம் வரவில்லை?’ என்று கேட்கிறோம்.
தூக்கம் வருவதற்கு உடம்பை நன்கு தளர்த்திக் கொள்கிறோம். ஏதோ ஒரு பாட்டு, அல்லது ஏதோ ஒரு ஆட்டம் மனத்துக்குள் நடந்து கொண்டிருக்க அதையே கவனித்துக்கொண்டு இருக்கிறோம். எப்போது தூங்கினோம்? தெரியாது. அதாவது தூங்குவதற்குண்டான எல்லா முயற்சிகளையும் விட்டுவிட தூக்கம் வந்துவிடுகிறது. ஆனால் தூங்குவதற்கு உண்டான முயற்சிகள் ஆரம்பத்தில் நடைபெற்றுத்தான் ஆக வேண்டும். முயற்சி நடைபெறும். ஆனால் முயற்சியால் தூங்கவில்லை. முயற்சி எங்கோ முட்டி நின்றது. தூக்கம் வந்துவிட்டது.
ஒவியம் ; ரவி
உடுமலை பதிப்பகத்தில் கிடைக்கிறது…
PRICE: Rs. 310.00
