G.K.V. – உடன் ஓயாத வேலை காரணமாக மாஸ்டரிடம் போக முடியாது. நேரம் கிடைக்கும்போது போய் அவரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போனால் இசையமைப்பாளர்களைத் திட்டிய அதே திட்டுக்கள் எனக்கும் விழும்.
“கோடம்பாக்கம் போயிட்டயில்ல? நீ உருப்பட மாட்ட! சினிமாவுல என்னடா செய்யிறீங்க? நீயாவது ஒழுங்கா இருந்து நல்ல விஷயங்களைக் கத்துக்கிருவேன்னு நெனைச்சிருந்தேன். நீயும் எல்லாப் பசங்களை மாதிரி போயிட்டீல்ல? நீ உருப்பட மாட்ட!” என்று விளாசித் தள்ளிக் கொண்டிருந்தார்.
“ஸார் இல்ல ஸார்! இனிமே நான் ஒழுங்கா நேரம் ஒதுக்கி வந்துட்டுப் போறேன் ஸார்” என்று அவரைச் சமாதானப்படுத்தி விட்டேன்.
“அவன் என்ன பண்றான் வெங்கடேஷ்?” என்றார். எல்லாம் ஏக வசனம்தான். ஆனால் திட்டுகின்ற ஆள் நேரில் வந்து விட்டால் பேச்சு வேற மாதிரி ஆகி விடும். திட்டிய திட்டல்கள் எல்லாம் சிறிதும் தலை காட்டாது.
கொஞ்ச நேரத்தில் சாந்தமாகிப் பின் அவர் Practical -க்கும், Theory -க்கும் Grade 8 -க்காக இந்த வருஷம் பணம் கட்டிட்டு வா என்றார். நானும் அடுத்த நாள் சென்று Trinity College of Music, London வருடந்தோறும் நடத்தும் அந்த Exam- மிற்குப் பணம் கட்டிவிட்டேன்.
அப்புறம் இரண்டு முறை ஒழுங்காக அவரிடம் போக முடிந்தது. மூன்றாம் முறை தவறி விட்டது.
அடுத்த தடவை அவரைப் பார்க்கப் போனால் கோபத்தின் எல்லைக்கே போய்விட்டார்.
“ராஸ்கல்! ஒனக்கு நான் சொல்லிக்குடுக்கப் போறதில்ல! நீ எவ்வளவு சொல்லியும் கேக்காம Class- ஐ மிஸ் பண்ணீட்டயில்ல? இனிமே இந்த Room- க்குள் வராதே போ!”
“ஸார் அதுல்ல ஸார்!”
“நீ என்ன பதில் சொன்னாலும் நான் கேக்கப் போறதில்ல. நீ எப்படி Exam - க்கு போறங்கிறத நான் பாக்குறேன்!” என்று மிகவும் திட்டவட்டமாக அவர் சொல்லிக் கொடுக்கப் போவதில்லை எனபதில் முடிவாகப் பிடித்த பிடிவாதத்தை விட்டு இறங்காது இருந்தார்.
கொஞ்ச நேரம் அப்படியே நின்றிருந்தேன். சற்று நேரம் சென்றவுடன் எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டு வந்தது. “ஸார் சொல்லிக் குடுக்க மாட்டீங்க இல்ல?”
“ஆமா!”
“யாரிடமும் கத்துக்காம நானா சொந்தமா ப்ராக்டீஸ் பண்ணிப் படிச்சு இந்த Exam- ல ஹானர்ஸ் (84- மார்க்ஸோட) வரலேன்னா நான் ஒங்களப் பார்க்கவே வரமாட்டேன். கண்டிப்பா பாஸாயிட்டுத்தான் வருவேன். ஒங்களப் பார்ப்பேன்” என்று சபதம் செய்துவிட்டுப் போனேன்.
அன்றிலிருந்து ஒரு வெறி! இடைவிடாது ப்ராக்டீஸ். தயாராகிவிட்டேன்.
ஆனால் Theory? ஒரு பெரிய கேள்விக் குறியாக எழுந்தது.
காரணம் எனக்கு இங்கிலீஷ் சரியாகத் தெரியாது! சரியாக என்ன ? தெரியவே தெரியாது! இருந்தாலும் சவால் ஞாபகம் வர சிலபஸில் குறிப்பிட்ட புத்தகங்களை வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.
முதலில் ஒரு வாக்கியத்தைப் படிப்பேன். ஒன்றும் புரியாது. இரண்டாம் முறை. ஊஹூம் புரியாது. மூன்றாம் முறை. இசை உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருப்பதால் விஷயம் புரிந்து விடும்.
இதில் முக்கிய விஷயம் எந்த டிக்ஷனரியும் வைத்துக் கொள்ளவில்லை.இப்படியே மாடல் கேள்வித் தாள்களை வைத்து, பதிலை எழுதிச் சரி பார்த்துக் கொண்டேன். தயார் ஆகி விட்டேன்.
–தொடரும்…
