அந்த இளைஞர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். அவருடைய கை விரல் நகங்களெல்லாம் காணாமல் போய்க்கொண்டிருந்தன.
சும்மாவா? இந்திய விமானப்படையில் சேரும் அபூர்வமான வாய்ப்பு. இந்த இண்டர்வ்யூவில் மட்டும் ஜெயித்துவிட்டால் போதும், தரையில் கால் பதிக்காமல் ஆகாயத்திலேயே உலகைச் சுற்றி வரலாம்.
ஒருவர் இருவர் அல்ல. எட்டுப் பேருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கப்போகிறது. அவர்களில் ஒருவராகத் தன்னாலும் இடம் பிடிக்கமுடியும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருந்தார் அவர்.
இதற்காக, அவர் இந்தியாவின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்குப் பயணம் செய்து வந்திருந்தார். அவருடைய அற்புதமான திறமை, புத்திசாலித்தனத்துக்கு, இதுபோன்ற இண்டர்வ்யூக்கள் சர்வ சாதாரணம். இருந்தாலும் மிகுந்த ஆவலுடன் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
சில நிமிடங்களுக்குப்பிறகு, விமானப்படை அதிகாரி ஒருவர் உள்ளேயிருந்து வந்தார்.மொத்தம் இருபத்தைந்து பேர் கலந்துகொண்ட இண்டர்வ்யூவில், எட்டுப் பேரைத் தேர்வு செய்திருப்பதாக அறிவித்தார்.
அவர் ஒவ்வொரு பேராகப் படிக்கப் படிக்க, அந்த இளைஞரிடம் பதட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு.
அவ்வளவுதான். எல்லாம் முடிந்து விட்டது.
வெற்றிபெற்றவர்களின் பெயர்ப் பட்டியலில், அந்த இளைஞருக்கு இடம் இல்லை. அவர் நிராகரிக்கப்பட்டுவிட்டார்.
இமய மலையின் உச்சியிலிருந்து கீழே விழுந்ததுபோல் மனம் உடைந்தார் அவர். என்ன ஆயிற்று? எல்லாக் கேள்விகளுக்கும் ஒழுங்காகத்தானே பதில் சொன்னேன், பிறகு ஏன் என்னை நிராகரித்து விட்டார்கள் ?
இப்போது புலம்பி என்ன பிரயோஜனம்? ‘உனக்கு இங்கே வேலை இல்லை’ என்று நிராகரித்துவிட்டார்கள். இன்னும் சிறிது நேரம் இங்கேயே உட்கார்ந்திருந்தால், இழுத்து வெளியே தள்ளிக் கதவைச் சாத்திவிடுவார்கள்.
விரக்தியுடன் அந்த அறையிலிருந்து வெளியே வந்தார் அவர். கடவுளே, இனிமேல் என் எதிர்காலம் என்ன ஆகப் போகிறது ?
‘இந்திய விமானப் படையில் உனக்கு வேலை இல்லை‘ என்று நிராகரிக்கப்பட்ட அந்த இளைஞர் என்ன ஆனார் ?
அடுத்த சில தினங்களுக்குள், அவருக்கு இன்னொரு வேலை கிடைத்தது. அங்கிருந்து தனது திறமை, உழைப்பின்மூலம் படிப்படியாக வளர்ந்து, பெரிய நிலைக்கு முன்னேறினார். ஒரு கட்டத்தில், தொடக்கத்தில் அவரை நிராகரித்த அந்த ‘இந்திய விமானப் படை‘க்கே தலைவராக உயர்ந்தார்.
அந்த இளைஞரை உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், ‘பாரதரத்னா’ டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்’தான் அவர்!
துறைக்கு ஏற்றத் தகுதியை வளர்த்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், உங்கள் தகுதிக்கு ஏற்ற துறையைத் தேர்வு செய்வதும். உங்களுக்கான எம்ப்ளாய்மெண்ட் வழிகாட்டி இந்தப் புத்தகம். இண்டர்வியூவுக்குத் தயாராவது எப்படி என்று தொடங்கி ஒரு வேலையில் அமர நீங்கள் என்னென்ன தகுதிகளை வளர்த்துக்கொள்ளவேண்டும், எப்படி என்பது வரை அனைத்தையும் படிப்படியாக விவரிக்கிறது இந்தப் புத்தகம். இந்த வேலை எனக்குக் கிடைக்குமா என்று இனி நீங்கள் ஏங்க வேண்டியதில்லை. இவர் நமக்குக் கிடைப்பாரா என்று நிறுவனங்கள் உங்களுக்காக ஏங்கப் போகின்றன. காத்திருங்கள்.
–என்.சொக்கன்
