பகவானை ‘ஸர்வ வ்யாபி’ என்று சொல்கிறோம்… ஆனால், அந்த வ்யாபகத் தன்மையை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. நம்முடைய நிலையை, “பொய்ந்நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும், அழுக்குடம்பும்” என்று பாடுவார் நம்மாழ்வார். அப்படிக் குறையறிவும், குறைபாடுகளும் கொண்டவர்களுக்கு அந்த நிறைஞானம் எப்படி வசப்படும்?
பகவானின் திருக்கல்யாண குணங்களையே எப்போதும் சிந்திக்கின்ற பெரியோர்களின் வார்த்தைகளாலே மட்டுமே அந்த ஞானம் வசப்படும். அப்படியொரு தெய்வீக ரஸத்தை, கல்கி வார இதழில் வழங்கினார் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள். ‘கண்ணனைத் தேடி’ என்ற தலைப்பில் வெளிவந்த அந்தத் தொடரின் நூல் வடிவம் இது.
உயர்ந்த தத்துவங்களையும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் விவரிக்கும் பாங்கு; திருத்தல தரிசனமாகவும் அமைந்த அழகு; ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களின் பெருமை… இப்படி வண்ண மின்னலின் தெறிப்புகளை இந்தத் தொகுப்பெங்கும் தரிசிக்கலாம்.
வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரை வெளியிடுவதன் மூலம், புத்தக வெளியீட்டிலும் கால் பதிக்கிறது உங்கள் கல்கி. நல்ல நூல்களைத் தேடிப் படிக்கும் உங்களுக்காகவே, இந்த ‘கண்ணனைத் தேடி‘…
ஆராதனை பல விதம்! பகவானையே நினைப்பது, பகவானைப் பற்றியே பேசுவது, பாடுவது… இந்த வகையைச் சேர்ந்ததுதான் பகவானைப் பற்றி வாசிப்பதும்! இப்படியொரு ஆராதனையை, நாம் செய்யும் வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கிறார் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள். சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள நெறிகளில் தேர்ச்சி; பகவானைப் பற்றிப் பேசும் நூல்களில் ஆழ்ந்த ஞானம்; உயர்ந்த தத்துவங்களை அனைவரும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் சுவை பட விவரிக்கும் அழகு… இவையெல்லாம் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு இயல்பாகவே கைகூடுகிறது. ஊடகங்களிலும், மேடைகளிலும் அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டவர்களுக்கு இந்த அறிமுகமே அதிகம். தேனாய் சுவை பேருக்கும் பகவானைத் தரிசிக்கச் செய்கிறது இந்நூல். வாசித்தால் உங்களுக்கும் இனிக்கும்!
