Quantcast
Channel: Book Review – Balhanuman's Blog
Viewing all articles
Browse latest Browse all 178

தாமரை போலொரு மலர்ச்சி! -பாலகுமாரன்

$
0
0

 

இன்னும் ஆழ்ந்து மௌனத்துக்குள் போவோம்.

என்ன செய்கிறது இந்த மௌனம் என்று கவனிக்கத் தொடங்கினால் மௌனம் என்பது மனம் கவனித்தல் என்ற நிலைக்கு அழைத்துப்போவது என்பது தெளிவாகி அந்த நிலைக்கு போகும்போது கண்கள் மூடிக்கொள்ளும். பலருக்கும் இது ஏற்படும். பார்க்க விருப்பம் இருக்காது. அல்லது கண்கள் திறந்திருந்தால் பார்வை எதிலும் லயித்திருக்காது. ஒரு விஷயத்தை பார்ப்பதிலிருந்து ஒரு செய்தி, ஒரு வாக்கியம் வருமல்லவா. பார்வையே பதியவில்லையெனில் வாக்கியம் எப்படி வரும்? செய்தி என்ன உண்டு. எனவே, பதியாத பார்வையோடு கண்கள் திறந்திருக்கும். இது ஒரு விசித்திர அனுபவம். ஆனால் எளிதில் ஏற்பட்டு விடாது.

அதே மனம் சிலசமயம் இந்த மௌனத்தை தாங்காது உதறும். மறுபடியும் மனம் டக்கு புக்குவென்று ஓடத் தொடங்கிவிடும். பேசத் தொடங்கிவிடும். ஏதோ சில கணங்கள் இந்த வெறுமையை மனம் காட்டிவிட்டு போகும். இதற்குத்தானே ஆசைப்பட்டாய். இதை கவனி என்ற அந்த வெறுமையை சில கணங்கள் காட்டிவிட்டு ஓடி விடும். ஏதோ ஒன்று நிகழ்ந்ததே அது என்ன? சொல்லத் தெரிவதில்லை. அது வார்த்தையில் அடங்கவில்லை. சில நேரம் மௌனமாக இருந்தேன். மௌனமாக இருந்தபோது யோசிக்காது இருந்தேன். யோசிக்காது இருந்தபோது மௌனமாக இருந்தேனா அல்லது மௌனமாக இருந்தபோது யோசிக்காது இருந்தேனா. எது முன். எது பின். இரண்டுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல.

இந்த அனுபவம் மெல்ல அங்கங்கு ஏற்பட்டு பிறகு பெரிதாகும். வெகுநேரம் அந்த அமைதியில் இருக்க முடியும். இப்போது மூச்சு சீராகி விட்டதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.

அதிகம் ருசிக்காமல் குறைவாக உண்டு, அதற்கான வைராக்கியம் வளர்த்து பிறகு உணவு குறைத்தலின் விளைவாக அமைதியாக இருந்து, அதற்கு விருப்பம் வந்து, அந்த அமைதியின் விளைவாக தனியாகப் போய், தனியாகப் போனதின் விளைவாக மௌனமாக இருந்து, மௌனமாக இருந்ததின் விளைவாக ஒரு வெறுமையை தடக்கென்று உணருகிறபோது உள்ளே தாமரை பூத்தது போல ஒரு மலர்ச்சி தோன்றும். இந்த உவமானம் முற்றிலும் சரியல்ல.

ஆனால் வேறு எப்படியும் சொல்ல முடியவில்லை. சொல்லவும் கூடாது. ஏனெனில் உள்ளே தாமரை பூத்ததா தாமரை பூத்ததா என்ற யோசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். அது போல ஒரு மலர்ச்சி அந்த வெறுமையில் ஏற்படும். இதற்கு உவமானம், உவமேயம் தேடுவதை விட இதற்காக காத்திருந்து அனுபவிப்பது சிறப்பானது.

அதனால்தான் இதை வாய்வார்த்தையாக, உபதேசமாக சொல்வதேயில்லை. போய். நீயாக போய் உட்கார். ஏதோ ஒன்று ஏற்படும். அதை அனுபவி. அதை என்னிடமும் வந்து சொல்லாதே. உனக்கு வந்துவிட்டது என்பது எனக்குத் தெரியும் என்று ஒரு நல்ல குரு உன்னை நெறிப்படுத்துவார். எல்லாவற்றையும் உபதேசித்துக் கொண்டிருக்க முடியாது. வார்த்தைகளாக்காத ஒரு உபதேசம் ஒரு நல்ல குருவால் உனக்குள் கவிழ்த்துவிட முடியும். இதை ஒருவர் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும்.

உன் மௌனத்தை நீ உணர்ந்த பிறகு உன்னைப் பார்த்து குரு வாய்விட்டு சிரிப்பார். வாய் பொத்தி சிரிப்பார். மாட்டிக் கொண்டாயா, இதற்குள் சிக்கிக் கொண்டாயா. இனி மீள்வது அரிது. மறுபடி மறுபடி இந்த மௌனம் பின் தொடரும். வந்து நிற்கும். என்ன செய்யப்போகிறா? இதோ வெளியே இருக்கின்ற அந்த கூச்சலான வாழ்க்கையா அல்லது வேறு ஏதேனுமா என்ற கேள்வி உன் முன்பு சொல்லாமல் வைக்கப்படும். வார்த்தையாக்காமல் விசாரிக்கப்படும்.

நல்ல குருவின் அண்மையில் நீ உணர்ந்ததும், அதைப் பற்றி அவர் கேட்பதும், மேற்கொண்டு வழி நடத்துவதும் ஒரு சொல்கூட சொல்லாமல் உனக்குள் நிகழ்த்தப்படும். குரு அவசியமா என்று கேட்பது எவ்வளவு பெரிய முட்டாள் கேள்வி என்பது அப்போது புரியும். ஒன்றும் ஒன்றும் இரண்டு. இரண்டு இரண்டு நாலு என்று சொல்லித் தருவதல்ல குருவின் வேலை. சொல்லாமல் சொல்வது . வார்த்தைகளுக்கு அப்பால் பேசுவது.

சரி. பிரமாதம். இதெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்வது சொல்லுங்க? காசு சம்பாதிக்க உதவுமா. இதை வைத்து கல்யாணம் செய்ய முடியுமா? குழந்தை பெறலாமா? பண்ண முடியாதே. அப்ப எதுக்கு இது என்று அதிகம் படித்தவர், அதிகம் விசாரணை உள்ளவர், அறிவார்ந்து பேசுகிறவர் கேள்வி கேட்கலாம். இல்லை. இது பணம் சம்பாதித்தலோடு நெருக்கமான விஷயமல்ல. ஆனால் இப்படி இருப்பவர் பணமே சம்பாதிக்க முடியாது என்றும் சொல்வதற்கில்லை. அவர் பணம் சம்பாதிக்கும் வழி வேறாக இருக்கும். பணம் அவரைத் தேடி வரும். நல்ல நட்புகளும், அந்த நட்பினால் ஆதரவுகளும் வெகு எளிதாக வரும்.

அம்மாக்கு உடம்பு சரியில்லை. மனசு ரொம்ப கவலையா இருக்கு; ஒரு நட்பு கண்ணில் நீர் துளிக்கப் பேசும். தன்னை அறிந்தவன், தன் மௌனத்தோடு பழக்கம் உள்ளவன் தன் மனத்தோடு பேசுகின்ற திறன் உள்ளவன் சட்டென்று மௌனிப்பான். யார் அந்த தாய் என்று கவனிப்பான். அருகே கவலைப்படுகிறவருடைய மனத்தை அறிய முற்படுவான். அங்கு ஒரு ஒருமை நிகழும். மிகக் கடுமையான ஒரு ஒருமை, மிகத் தீவிரமான ஒருமை எந்த எதிர்பார்ப்பும் இல்லாது அருகே இருப்பவனுடைய கவலையை உள்வாங்கி.

இந்த ஒருமையை எந்த வார்த்தை கொண்டும் விவரிக்க முடியாது. அப்படியா? அம்மாவின் பிறந்த தேதி என்ன. என்ன நட்சத்திரம் இதெல்லாம் சாக்கு. அவரை பேச வைக்கின்ற முயற்சி. அவர் பேசப் பேச அவர் அம்மாவின் முகம் அல்லது அவர் அம்மாவைப் பற்றி அவர் உணர்கின்ற உணர்வு இவருக்கு அருகே வரும்.

நெஞ்சு வலியா? அடைப்பு இருக்கிறதா? தாடையிலும், தோளிலும் வலி இருக்கிறதா? இடது கை குடைகிறதா. மனதுக்குள்ளே அந்த மூதாட்டியை தடவிக் கொடுக்கலாம். நெஞ்சு வருடிக் கொடுக்கலாம். முதுகு பக்கம் கை போட்டு இறுக்கிக் கொள்ளலாம். நெற்றியில் முத்தமிடலாம். நலம் பெறு. திடம் பெறு. எழுந்து நில் என்று உள்ளே கட்டளை இடலாம். இது திட்டமிடல் அல்ல. இது திடுமென்று நெருப்பு பட்ட பூ வானம் போல சீறி எழுகின்ற உணர்வு. பிடுங்கிக் கொண்ட குழாய் போல பொங்குகின்ற நீர் பரப்பு. மனம் மிக வலிமையுடையது. மனம் ஒருமை ஏற்பட்டவரின் சக்தி மகோன்னத சக்தி.

நீ பார்க்கின்ற வைத்தியர் சரியில்லை. இந்த டாக்டரிடம் போய். பிரச்சனை இருக்கிறது.

ஆனால் அதிகம் பயப்படுகிறாய். இவர் தெளிவாக உதவி செய்வார் என்று வேறு ஒரு மருத்துவரை சிபாரிசு செய்ய மனம் ஒருமைபட்டவர் முயல்வார். அது உடனடியாக நிறைவேறவும் செய்யும்.

தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துப் போகவே பல்வேறு காரணங்கள் காட்டி தள்ளிப் போட்டவர் இந்த ஒரு செயலை எதனாலேயோ விரைந்து செய்வார். விரைந்து செய்யும்படி உங்கள் மனம் அவருக்கு கட்டளை இடும். அதாவது, மனத்தால் அவரை துரிதப் படுத்துவீர்கள். மருத்துவரை நோக்கி நகரும்படி வலியுறுத்துவீர்கள். இது சொல்லாலோ, செயலாலோ இருக்காது. உங்கள் மன ஒருமை அவர் மீது கவிழ்ந்து அந்த நினைப்பையே அவருக்கு அதிகம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

வழக்கம்போல ஒரு மாத தாமதம் இல்லாது நீங்கள் சொன்ன மருத்துவரிடம் அவரை உடனே அழைத்துப் போய் விடுவார். சோதனைகள் நடைபெறும். இரண்டு நாளில் மாத்திரை மருந்துகளில் சரிசெய்து விடலாம் என்ற தெளிவு தீர்ப்பு அழகாக வரும். இந்த செய்தியே பாதி வியாதியை குணப்படுத்திவிடும். ஒரே வாரத்தில் அந்த அம்மாள் ஆட்டோ பிடித்து சினிமா தியேட்டருக்குப் போய் புதுப்படம் பார்த்துவிட்டு அட்டகாசமாக வருவார்கள்.

அம்மா ரொம்ப நாள் இருக்க மாட்டாங்கன்னு ஒரு டாக்டர் சொன்னார்” என்று அழுதவர் அதை மறுபடியும் நினைக்க மாட்டார். மறந்து போயிருப்பார். சொன்ன டாக்டர் தவறா? இல்லை. எங்கோ ஒரு பிசகு நேர்ந்து விட்டது. தவறாக கணிக்கப்பட்டுவிட்டது. அந்த விஷயம் சரி செய்யப்பட்டது. உங்கள் பிரார்த்தனையா, ஆமாம் என்றும் வைத்துக் கொள்ளலாம். இல்லை என்றும் சொல்லலாம்.

ஒரு மனத்தின் வலிமை நோயைத் தீர்க்கவல்லது. பிறரை குணப்படுத்தவல்லது என்று சொல்வதற்காகவே இங்கு குறிப்பிடப்படுகிறது. அவ்வளவு உயரம் ஒரு மனிதரால் போக முடியும் இதை அனுபவப்பட்டவர்கள் உண்டு.

மௌனம், தனிமை, குறைந்த உணவு போன்றவைகளை கைக்கொள்வதற்கு இம்மாதிரியான விஷயங்களைச் சொல்வது உங்களை அதில் மூழ்க துரிதப்படுத்தும் என்ற நம்பிக்கையின் பாற்பட்டும் இது பேசப்படுகிறது. இதைத் தொடர்ந்து இன்னொரு விஷயம் நடைபெறும்.

அந்த நண்பர் நன்றியே சொல்லவில்லையே? அந்த அம்மாள் இது குறித்து பேசவேயில்லையே? அந்த அம்மாளிடம் உங்கள் பிரார்த்தனை பற்றி அந்த நண்பர் சொல்லவில்லை. நீங்கள் பிரார்த்தனை செய்தீர்கள் என்று அந்த நண்பரும் நம்பவில்லை. ஏதோ ஆறுதலான வார்த்தைகள் சொன்னீர்கள். அந்த நேரத்தில் அது இதமாக இருந்தது என்றே அவர் நம்புகிறார். உங்களுக்கு அவருடைய நன்றி வேண்டுமா? தேவையே இல்லை. அதை எதிர்பார்த்து செய்யவேயில்லை. அதை நெல் முனையளவும் எதிர்பார்க்காது செய்கிற போது தான் பலன் தருகிறது. அதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாதபோது அது துரிதமாகிறது. அந்த நண்பர் நன்றி சொல்லவில்லையே என்ற எண்ணம்கூட எழாது போகிறது.

உங்கள் வாழ்க்கையில் இயல்பாக மனம் குவித்து ஒரு நோயை நீக்குவது என்பது மிகச் சாதாரணமாக, எளிதான விஷயமாக நடைபெறுகிறது. இது உண்மையிலும் உண்மை.ஒரு சத்தியம். பொய்யான வாக்குறுதி அல்ல.

அதேநேரம் இதைக் கருத்தில் கொண்டு நீங்கள் செயலில் இறங்க ஆரம்பித்தால் மிக மோசமாக அடிபடுவீர்கள். அதிகமாகப் பேசிவிடுவீர்கள். திறமையின்மை, மன ஒருமையின்மை உங்களை சந்தியில் கொண்டு வந்து நிறுத்தும். மன ஒருமை இருக்கும் பொழுது அதை பெரிதாக கொண்டாடிக் கொள்ளத் தோன்றாது. வெளிப்படுத்தவே மனம் முற்படாது. அந்த ஒருமையோடு நின்று விட்டு போகும்.

ஆனால் இந்த இடம் வருவதற்கு, இந்த வலிவு ஏற்படுவதற்கு, இந்த பலம் பெறுவதற்கு உங்களுக்கு நீண்ட நெடுங்காலம் ஆகும். மௌனத்தோடு புரண்டு புரண்டு அதில் ஆழ அமிழ்ந்து திக்கித் திணறி, அடே போதுமே என்ற ஒரு அவஸ்தைக்கு ஆளாகிறபோது இது உங்களுக்கு ஏற்படும்.

முதல் நாள் எங்கேனும் தனிமையில் போய் மௌனமாய் இருத்தல் என்ற நிலைக்கும்; மனம் குவித்து ஒருவர் நோயை தீர்க்கின்ற நிலைக்கும் இடையில் என்ன ஏற்படும்? என்னவெல்லாம் ஏற்படும் என்ற கேள்வி ஒன்று வரவேண்டும்.

பேச்சு அறு. பேச வேண்டிய விஷயத்துக்குக்கூட பேச முடியாது போகும். சடேர் என்ற ஒரு கார் இன்னொரு காரில் மோதி தெருவில் பெரிய குழப்படி நடக்கும். அத்தனை பேரும் அதற்கு பதறுவார்கள். குரல் கொடுப்பார்கள். இவர் தவறு, அவர் தவறு என்று உடனடியாக கட்சி பிரிவார்கள். இந்த தெருவே மோசமாயிடுச்சு சார் என்பார்கள். அரசை குறை கூறுவார்கள்.

உங்களுக்கு எதுவும் சொல்லத் தோன்றாது. மிகத் திடமான ஒரு அமைதி அந்த நேரத்தில் உங்களிடம் இருக்கும். இது நிகழ்ந்து விட்டது. மேற்கொண்டு என்ன என்ற எண்ணம்தான் ஏற்படும். யாருக்கு காயம்? என்ன விளைவு. என்று சிந்திக்க தோன்றும். எவருக்கும் காயம் இல்லை. அதிர்ச்சியும், கோபமும் தான் என்று தெரியவர, மனம் ஆசுவாசப்படும். இது பொருள் நஷ்டம். ஆனால் இதை சரி செய்து கொள்ள முடியும். இன்னும் கவனமாக இரண்டு பேரும் ஓட்டியிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். குறுக்கே போய் மத்தியஸ்தமோ, கத்தி செறுகுதலோ, அரசாங்கத்தை குறை கூறுதலோ எதுவும் நடக்காது. அமைதியாய் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்..

‘சொரணை கெட்ட முண்டமா இருங்கன்னு சொல்ற’ என்று படிப்பவர் எவருக்கேனும் கோபம் வரலாம். உரக்ககத்தினால்தான் அந்த இடத்தை மிகப் பெரிய களேபரமாக செய்தால்தான் நமக்கு திருப்தி. அப்படித்தான் வழக்கம். உங்களையெல்லாம் வெட்டி போடணும்டா” என்று பொதுப்படையாக கூச்சல் போடுவது மிகப் பெரிய சந்தோஷம். இப்படி இருப்பவருக்கு அமைதியாக இருப்பது சொரணை கெட்ட விஷயமாகத்தான் இருக்கும்.

ஆனால், உண்மையில் இதை சொரணைகெட்ட விஷயமாகக்கூட செய்து கொள்ளலாம். உடனடியாக திடுக்கிடாது, உடனடியாக எகிறாது உடனடியாய் வம்புகளுக்கு போகாது பின்னடைந்து நிற்றல் என்பது மிகச் சரியான நிலைமை என்று தெரிந்துகொள்ளும் வரை அது சொரணை கெட்ட விஷயம்தான். வாழ்க்கை என்பது ஊர் அபிப்ராயமா, அல்லது உங்கள் அபிப்ராயமா என்ற கேள்வியை கேட்டுக் கொள்ளுங்கள்.

(தொடரும்)

ஒவியம் ; ரவி

உடுமலை பதிப்பகத்தில் கிடைக்கிறது…

PRICE: Rs. 310.00



Viewing all articles
Browse latest Browse all 178

Trending Articles