கவனித்து பார்க்கும்போது நாத்திகம் மிகப் பெரிய விடுதலை என்றுதான் தோன்றுகிறது. கடவுள் என்பதைச் சுமக்காமல் கீழே இறக்கி வைத்துவிட்டு மனிதனை மனிதனாகப் பார்க்கின்ற ஒரு கம்பீரம் வந்துவிடுகிறது. கடவுள் என்பதைத் துறந்துவிட்டால் மதம் என்பதையும் தூக்கிப் போட்டுவிடலாம். மதம் என்பதைத் தூக்கிப் போட்டுவிட்டால் மனிதனை நேரிடையாக அணுகலாம். உரிமையாகப் பழகலாம்.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள பிரச்னை படைபலமா? கலாசாரமா? மொழியா? இல்லை. மதம்தான் தன்னுடைய இஸ்லாமிய மதமே சிறந்தது என்கிறபோது இந்துக்கள் இழிவாகத்தான் தெரிவார்கள். இந்துக்களுக்கு இஸ்லாமியர்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கும். இந்தப் பிளவும் அற்று இஸ்லாமியரை கடவுளைத் துறந்தவர்கள் எனப் பார்க்க முடியுமா என்பது ஒரு நல்ல கேள்வி. ஆனால் கடவுளை நம்புபவர்களை இஸ்லாமியர்கள் இந்துக்களாக இருந்தால் எதிர்க்கிறார்கள். நாத்திகர்களாக இருந்தால் அணைத்துக்கொள்கிறார்களா? அப்படி அணைத்துக்கொள்வதாகத் தெரியவில்லை.
ஆக, இந்தியாவில் நாத்திகம் என்பது இந்துமதத்தை எதிர்ப்பதாகவே இருக்கிறது.
ஏனெனில் கடவுள் பற்றி அறுதியிட்டு உறுதிகூற இந்துமதத்தில் பல்வேறு விஷயங்கள் உள்ளன. ‘நீ வாயை மூடிக்கொண்டு என் பின்னால் வா. என்னை நம்பு’ என்கிற ஒற்றைவரி உன்னைச் சமாதானப் படுத்திவிடாது. ‘எங்கே கடவுள் எங்கே கடவுள்’ என்று தேடி ‘இல்லை’ என்று சொல்லுகின்ற அந்த நாத்திக மனத்துக்கு இது பதில் ஆகாது. கடவுள் என்று கண்டுபிடித்த பிறகு விவிலியமோ, திருக்குர்ஆனோ பதில் சொல்லாது.
புத்தரின் பேச்சும் வாழ்க்கை முறையும் பிடித்ததாக இருக்கலாம். ஆனால், அந்த புத்தர், உருவ வழிபாட்டுக்கான விஷயமாகப் போனபிறகு புத்தமதம் ஷீணித்தது நன்கு தெரியும். ஆகவே, கடவுளை இல்லை என்று மறுப்போர் நிலைமை அத்தனை ஆரோக்கியமானதாக இல்லை. மிகப் பெரிய கம்பீரம் என்பது உண்மையாயினும் அதைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினம். ‘மனைவி துர்க்கை கோயிலுக்குப் போகிறார். அவர் வணங்க நான் உடன் போகிறேன். அவளுக்காக கை கூப்புகிறேன்’ என்று சொன்னால் நாத்திகம் ஆட்டம் கண்டுவிட்டது என்றுதான் அர்த்தம். உன் மனைவியும் கடவுள் இல்லை என்றுதான் சொல்லியிருக்க வேண்டுமே தவிர, அவள் துர்க்கை கோவிலுக்கு போய்யிருக்கக் கூடாது. உன் தாயோ, தமக்கையோ, தம்பியோ, அண்ணனோ மத வழிபாட்டில் மிக முக்கியம் காட்டி நீ மறுப்பு உள்ள ஆளாக இருந்தால் ஏதோ குழப்பம் உள்ள குடும்பமாகத்தான் அது காணப்படுகிறது.

யாரோ அந்தக் குடும்பத்தில் ஒருவர் தனித்தன்மை காட்டப் போடுகின்ற நாடகமாகத்தான் ஆகிறது. அண்ணன், தம்பி அட்டகாசத்தை எதிர்த்து புத்தமும், சமணமும் தூண்டியது என்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் அவர்கள் கடவுள் மறுப்பு இயக்கமல்ல. கடவுளை அறிய வேறு வழியைக் கொண்ட இயக்கம்.
இந்தப் பலியிடுதலும், ஹோமமும் பெரும் செலவில் நடத்தப்படுகின்ற யாகமும், வர்ணபேதமும் அபத்தம் என்று அந்த மனு தர்மத்தையே எட்டி உதைத்து வேறு ஒரு தர்மத்தை நிலைநாட்டினார்கள்.
அவர்கள் அந்த தர்மத்தை கொண்டவர்கள் ஒரு சங்கமாக்கினார்கள். தன்னுள்ளே தன்னை நேசிப்பதும் தன்னைப்போல் பிறரை நேசிப்பதும் எல்லா உயிர்கள் மீதும் கருணையோடும் காதலோடும் இருப்பதும் அவர்கள் அடிப்படை கொள்கைகளாயிற்று. இதனால் மனிதகுலம் பரதகண்டத்தில் மென்மையாயிற்று. சத்திரியர்கள் க்ஷீணித்தார்கள். ‘கத்தி எதற்கு?’ என்று கீழே போட்டார்கள். அந்நியர் படையெடுப்புக்குச் சமண மதமும் புத்த மதமும் காரணமாக இருக்கலாமோ என்பது ஒரு விஷயம். அது விவாதத்துக்கு உரியது.
உள்ளே புகுந்து அடித்து நொறுக்குகின்ற வலிமையை இந்து மதம் கொடுத்திருந்தது. போர் என்று ஒன்று உண்டு. அதில் ஈடுபட்டுத்தான் ஆக வேண்டும் என்ற கொள்கையை பரத கண்டம் புறக்கணித்த போது எதிரிகளை மடக்கத் தெரியவில்லை. திரும்ப அவர்கள் தேசத்துக்கு விரட்டத் தெரியவில்லை. இந்து மதம் க்ஷீணித்ததால் பரதகண்டம் அவஸ்தைப்பட்டது.
இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால், நாத்திகமாக இருப்பது கம்பீரமோ அல்லது கபட நாடகமாகவோ இருப்பின் அது அதனுடைய நோக்கத்தை நோக்கி நகராது. கடவுள் இல்லை என்கிறபோது நாத்திக மனம் கடவுளாக வேண்டும். மிகப் பெரிய கருணையைத் தன்னுள்ளே தேக்கிக் கொள்ள வேண்டும். சகல உயிர்களும் சிறந்தவை. எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள். எல்லோரையும் அரவணைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் எனக்கு இருக்கிறது என்றுதான் நாத்திக மனம் கிளர்ந்து எழ வேண்டும்.
அப்படி எழாது ஒரு குறிப்பிட்ட மதத்தையே தாக்கிக் கொக்கரித்துக் கொண்டிருந்தால் உனக்கு புத்தி பேதலித்திருக்கிறது என்றுதான் அர்த்தம். சந்தர்ப்பவாதப் பேச்சு என்றுதான் அர்த்தம். ஆனால் நாத்திகத்தை ஆத்திகவாதி புரிந்துகொள்ள வேண்டும். கடவுளை மறுப்பது என்பது மிகப் பெரிய விஷயம்.
நான் இந்து. அந்தணன். அதனால் மூக்கைப் பிடித்துக்கொண்டு காலை, மதியம், மாலையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் என்று நினைப்பீராயின் இது நிர்மூடம். மூக்கைப் பிடித்துக் கொண்டு சுவாசத்தைச் சரிசெய்வதற்கு அப்பால் மந்திரஜெபம் ஓடி மனம் ஒருமைப்பட்டதற்கு அப்பால், ஒருமைப்பட்ட மனம் கடவுள் எங்கே என்று தேடுவதற்கு அப்பால் நீ பயணப்பட வேண்டும்.
‘கடவுள் எங்கே?’ என்று தேடப்படுவதே கடவுளை அறிவதாகாது. பயணம் பூர்த்தியாகவில்லை என்றே அர்த்தம். பிரம்மச்சரியம் கடைப்பிடித்த பிறகு இல்லறம் ஏற்பது, இல்லறம் ஏற்று பிள்ளைகள் பெற்றபிறகு மனைவியோடு வனத்துக்குப் போவது, வானப்பிரஸ்தத்துக்குப் பிறகு மனைவி இறந்த பிறகு அல்லது விட்டு அகன்ற பிறகு சன்னியாசம் கொள்வது, வெறுமே பிச்சை எடுத்து உண்பது. கிடைப்பதை உண்பது, கடவுளைப் பற்றியே எண்ணிக்கொண்டே வாழ்நாளில் மரணமடைவது என்கிற அழகிய ஒரு வழிமுறையைச் சொல்கிறது.
இந்த சன்யாசமும் கடவுளைக் காட்டும் என்று சொல்வதற்கில்லை. அப்படியானால் எப்பொழுதுதான் கடவுளை அடைவது என்ற கதறல் ஏற்படின் அடுத்த ஜென்மம்தான் என்று மறுபிறவியை இந்துமதம் குறிக்கிறது.
‘ஒரு வினை இருப்பின் அதற்கு எதிர்வினை உண்டல்லவா! ஒரு ஊஞ்சல் இடப்பக்கம் போனால் அது வலப்பக்கமும் வருமல்லவா!’ என்றுதான் இந்து மதம் சொல்கிறது.
நாகர்கோவிலுக்கு அருகே சுசிந்திரம் என்ற ஒரு கோயில் இருக்கிறது. அந்தக் கோவில் முதற்கதவை தாண்டுகிறபோது வலப் பக்கக் கருங்கல் சுவரில் ஒரு சிற்பம் இருக்கும். மிகப் பெரிய மரம். அந்த மரத்தில் ஒரு ஊஞ்சல் இருக்கிறது. அந்த ஊஞ்சலில் பார்வதி தேவி அமர்ந்து கொண்டிருக்கிறார். மரத்தின் உயரத்துக்கு சிவபெருமான். மரத்தில் பாம்பு சுற்றிக்கொண்டிருக்கும். பழங்கள் இருக்கும். கொடிகள் படர்ந்து பூக்கள் மலர்ந்திருக்கும்.
பாம்பைக் காமம் என்றும், சுற்றியுள்ள கொடிகளைச் சுவைகள் என்றும் மரத்தின் கனிகளை அமிர்தம் என்றும் கொள்ளலாம். அந்த மரத்தை இடக்கையால் சிவபெருமான் அலட்சியமாக அசைத்துக் கொண்டிருப்பார். அவருடைய ஒரு அசைவில் ஊஞ்சல் சற்று மேலே எழும்புவது போல சிற்பம் இருக்கும்.
‘அந்த முதல் அசைவை ஏற்படுத்தியது யார்? எந்த மீன் முதன் முதலில் நிலம் ஏறி வெட்டவெளியை சுவாசித்தது? எப்போது பாம்பாயிற்று? எப்போது மிருகமாயிற்று? எப்போது பறவையாயிற்று? எப்போது மனிதனாயிற்று? எங்கிருந்து ஆரம்பமாயிற்று?’ என்ற விஞ்ஞானக் கேள்விகளுக்கு அந்த ஒற்றை அசைவு பதில் சொல்கிறது.
யார் அசைத்தார்கள்? அவரை கடவுள் என்கிறது. எல்லோருக்கும் புரியும் வண்ணம் சிவம் என்று சொல்கிறது. அசைவதை சக்தி என்று சொல்கிறது. அசைய வைத்ததை சிவம் என்று சொல்கிறது.
கச்சை கட்டிய பெண்ணும், தோலாடை அணிந்த ஆணும் குறியீடுகள்தான். சிவம் என்பதும், சக்தி என்பதும் புரிந்துகொள்ள உதவும் பெயர்கள்தான். ஏதோ ஒன்று சொல்லித்தானே அவற்றை அழைக்க வேண்டும். மீன் கரையேறி முதலையாயிற்று. முதலை பாம்பாயிற்று என்று பெயர் சொல்லித்தானே பெயர்களைப் புரிந்து கொள்கிறோம்.
இந்து மதத்தின் கடவுள் பற்றிய பெயர்கள்யாவும் குறியீடுகளே. இந்தக் குறியீடுகளை வைத்து கதைகள் பல பின்னப்பட்டன. கடவுளருக்கே குறைகள் உண்டு என்று எழுதப்பட்டன. கவனம் சிதறி மயில் மீது போனதால் ‘நீ மயிலாகப் பிற’ என்று சக்தியை சிவன் சபிக்க, மயிலாபுரியில் வந்து பிறந்து புன்னை மரத்தடியில் வளர்ந்த சக்திதேவி சிவனை மயிலுருவாய் வழிபட்டு வளர்ந்த இடம் மயிலாப்பூர் என்று சொல்லப்படுகிறது.
புன்னை மரங்கள் மிகுந்திருந்தால் எறும்பு இருக்கும். எறும்பு இருந்தால் புற்றுகள் இருக்கும். புற்றுகள் இருந்தால் பாம்புகள் இருக்கும். பாம்புகள் இருந்தால் மயில்கள் வரும். ஆகவே புன்னை மரமும், கரையானும், புற்றும், பாம்புகளும், மயிலும் நிறைந்த கடற்கரை நகரம் மயிலாப்பூர்.
இதை உள்வாங்கி இதற்கு ஒரு கதை வைத்தார்கள். நிலத்தன்மையும், கடவுள் கதையும் ஒன்று கலந்து வைத்தார்கள். முக்கிய விஷயம், கவனம் சிதறக்கூடாது என்பதுதான். மயில் என்பது வண்ணமும், அழகும் கொண்டது. அதன் நடையும் சிலிர்ப்பும் பார்த்துக் கொண்டேயிருக்கத் தூண்டுவது. கண்களை இழுப்பது. அதனிடம் மனம் செலுத்தாதே என்பதுதான் கதையின் நோக்கம்.
இம்மாதிரி ஆயிரம் கதைகள் சேர்ந்தால் ஒரு மதம். நூறு வருடத்தில் ஆயிரம் கதைகள் வெகு எளிதில் உருவாகிவிடும். கதைகளாலேயே அழகாக நெய்து போர்வையாக யார் கடவுளைத் தேடுகிறாரோ அவர் மீது போர்த்தப்படும்.
குமரியிலிருந்து இமயமலை வரை பயணப்பட்டு இந்துமதம் வடக்கும், தெற்குமாக சில கடவுள்களை, தீய சக்திகளை பார்த்துவந்து அவற்றை மிகப் பெரிய கதைகளாக, காவியமாக மாற்றப்பட்டிருக்கின்றன. இமயமலைக்கு அப்பால் போனதில்லை. போனவர்கள் வந்ததில்லை. ஒருவேளை நியூசிலாந்துக்கோ, அமெரிக்கத் துணைக் கண்டத்துக்கோ போயிருந்தால் கடவுள் இன்னும் விஸ்தீரணப்பட்டிருப்பார். நடந்தும், குதிரையில் ஏறியும் பயணப்பட்டோருக்கு இவ்வளவுதான் முடிந்திருக்கிறது. எனவே, இதிகாச, புராணக் கதைகள் வடக்கே இமயமலையிலிருந்து தெற்கே இலங்கை வரை தான் சொல்லப்பட்டிருக்கிறது.
கடவுள் எண்ணங்களோடு வாழ்ந்து மறைந்த அடியார்கள் ஏராளம். எந்தக் கதையிலும் வராது காணாது போய் அடங்கியவர்கள் பல கோடி இருக்கும். அவர்களுக்கு மறு பிறவி இல்லை. இறைவனடி சேர்ந்து விட்டார்கள் என்றும் இந்தக் கதைகள் சொல்கின்றன.
மனம் என்கிற ஒரு விஷயம் இயங்குகிறபோது அந்த மனம் உயிரோடு தொடர்புகொண்டு அந்த உயிரோடே நகர்கிறது என்று இந்து மதத் தத்துவங்கள் சொல்கின்றன. உடம்பு நினைவோடே உடம்பு இருக்கிறது என்ற நினைவோடே, அந்த உடம்போடு செய்த விஷயங்களின் கனத்தோடே உயிர் பிரிகிறது. சக்தி உடம்பிலிருந்து வெளியேறி கரைந்து காணாமல் போவதில்லை. இடப்பக்கம் போன ஊஞ்சல் வந்துதான் ஆகவேண்டும். வலப்பக்கம் போன ஊஞ்சல் இடப்பக்கம் வந்துதான் ஆகவேண்டும். ஒரு பிறவி எடுத்து ஒரு வினை செய்தபோது அந்த வினைக்கு எதிராக இன்னொரு வினை செய்துதான் ஆகவேண்டும். ஒரு கொலை மறு ஜென்மத்தில் தண்டனைக்குரிய விஷயமாக வரும். கை, கால் முடங்கிய வாழ்க்கையாக இருக்கும். அல்லது கண் தெரியாமல் போகக்கூடும். அல்லது அதே விதமாக அநியாயமாகக் கொலையாகக் கூடும்.
இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் ஆத்மா என்ற சுடரைச் சுற்றி மனம் என்ற குமிழ் இருக்கிறது. அந்த ஆத்மா என்பது உடம்பைவிட்டு நகருகிறபோது மனம் என்கிற குமிழும் போகிறது. அந்த மனம் என்ற குமிழ் உடல் என்ற ஒரு உணர்வையும் கொண்டிருக்கிறது. சில சமயம் அது உடல் போன்றும் காட்சியளிக்கிறது. அரசனைப் போன்றும், அடிமையைப் போன்றும் நடந்துகொள்கிறது. உடலை விட்டு கிளம்பிப் போய் அழுகிறது. பயப்படுகிறது. ‘இது என்ன இடம்? யார் இவர்கள்?’ என்று கலவரப்படுகிறது.
உங்களுக்கு இதை உணர்விக்க, இந்துமதம் இறந்தோருக்கான சடங்குகளைத் தெளிவாகச் சொல்கிறது. இறந்தோருக்குப் பயம் இருக்கும். எனவே ‘விளக்கு தானம் கொடு, மணி அடி, அவர்களுக்கு குளிரும், போர்வையைக் கொடு, அவர்களுக்குக் கால் நோகும், செருப்பு தானம் செய், அவர்கள் உஷ்ணத்தில் பாதிக்கப்படுவார்கள், குடை கொடுத்தல் நல்லது’ என்று இறந்தோர்களைக் குளிர்விக்க அந்தணர்கள் சடங்குகளைச் சொன்னார்கள். இது அந்தணர் நிகழ்ச்சியல்ல. பொருள் பறித்தல் அல்ல. இறந்தோரை இழந்துவிட்டு மனம் பெரும் அமைதியை இந்தத் தானத்தால் அடையும்.
ஒவியம் ; ரவி
உடுமலை பதிப்பகத்தில் கிடைக்கிறது…
PRICE: Rs. 310.00
