”Neuroscience of Regret” ட்டும் ராஜராஜத்தேவ உடையாரும்
——————————————————
” Regret is rated more favorably than unfavorably by youngsters, primarily because of its informational value in motivating corrective action.”
Neal Roese of the Kellogg School of Management
“உங்கள உள்ள கொண்டு வந்ததே அந்த டிவிஷனை எனர்ஜைஸ் பண்ணத்தான்.
க்ரூப் எம் டி சொல்லிக்கொண்டிருந்தார்.
எஸ் சார்!
”இத்தன நாளா ஈடிபி டிபார்ட்மெண்ட்டா இருந்துட்டு இப்ப தனி கம்பெனியானதால இன்னும் அந்த பழைய அப்ரோச் மாறவே இல்லை. லாப நோக்கு வரவேயில்ல. முன்ன மாதிரியே ஏனோதானோன்னு ஓட்டிண்டு இருக்காங்க!”
”ஆமாம் சார்! இதுக்கு ஒரு மைண்ட் செட் சேஞ்ச் தேவை!”
”எஸ்! நீங்க உங்க எக்ஸ்பீரியன்சை வெச்சு இத ஒரு ப்ராஃபிட் சென்டராக்கணும். உங்களுக்கு இந்த டிவிஷனோட பி அண்ட் எல் பொறுப்பும் கொடுக்கறேன்!”
”நிச்சயமா சார்!”
”என்ன ஹெல்ப் வேணுன்னாலும் எங்கிட்ட வரத்தயங்காதீங்க. எல்லாரும் பழைய பெருச்சாளிங்க! கொஞ்சம் தண்ணி காட்டுவாங்க. Come to me for any intervention!”
”நான் பாத்துக்கறேன் சார்!”
வெளியே வந்தவுடன் சந்தோஷமும் பயமும் சேர்ந்து என் வயிற்றில் அமிலப்ரவாகம்.
அருள்மொழிவர்மர் என்னும் ராஜ ராஜ சோழர் தஞ்சையில் கோவில் கட்ட ஆரம்பித்து விட்டார். அதற்கான திட்டங்களும் செயல்களும் மிகப்பெரிய அளவில் நடக்கின்றன தனக்கு எப்படி அமண்குடி கிருஷ்ணன் ராமன் பிரம்மராயராக இருந்தாரோ அதே போல ராஜேந்திரனுக்கும் உற்ற துணையும் தோழமையுமான ஒருவன் தேவை என்பதால் கிருஷ்ணன் ராமனின் மகன் அருள்மொழியைத்தயார் பண்ணி யிருந்தார்.
அப்போது அந்த பெரிய கார்ப்பரேட் க்ரூப்பில் ஐ டி கம்பெனியில் வைஸ் பிரெசிடெண்ட்டாகச்சேர்ந்த புதிது. கம்பெனியை இந்திய அளவிலும் உலக அளவிலும் கொண்டு போகவேண்டும் என்கிற உத்வேகம் எனக்கு நெறய இருந்தது. கூடவே அந்த க்ரூப்பின் எம் டி யே தன் தனிப்பட்ட ஆதரவைத் தருவதற்குத் தயாராய் இருந்தார்.
கோவில் கட்டுவதற்கான மிகப்பெரிய திட்டங்கள் தயாராக, பொன்னும் பொருளும் ஆகம சாஸ்திர விற்பன்னர்களும், புரோஹிதர்களும், சிற்பிகளும், தச்சர்களும், கருமார்களும், மற்ற வேலை ஆட்களும், அவர்களுக்கு உதவியாக சமையல்காரர்களும், மாலைப்பொழுது போக்கிற்கு தேவரடியார்களும், சங்கீதக்காரர்களும் தஞ்சையை சுற்றிக்குழும, ஊரே அல்லோலகல்லோலப்பட்டது.
எம் டி தாம் சொன்னதைப்போலவே சமயோசிதமாக உதவினார். வாரம் ஒரு முறை என்னைக்கூப்பிட்டு பேசிவிடுவார். சில நல்ல ஆலோசனைகளும் தருவார். கார்ப்பரேட் பாலன்ஸ் கெடாதபடி, அதே சமயம் எனக்கு இடைஞ்சல்கள் இருந்தால் அதை ஸ்மூத்தாக விலக்க உதவுவார். “வாங்க” என்று ஆர்வத்துடன் கூப்பிட்டு விலாவரியாக நான் பேசுவதை கேட்பார். சில யோசனைகள் சொல்வார். எனக்கு எம் டியின் இந்த positive disposition மிகுந்த ஆர்வத்தை தூண்டி கடுமையாக உழைக்க வைத்தது. எனக்கு அடுத்த மேல் நிலை டைரக்டர், அதான் என் நேரடி பாஸ், மிகவும் நல்ல மாதிரியாகவே இருந்தார். நெறய வாய்ப்புகள் கொடுத்தார். தலையீடு அதிகம் இல்லாமல் வாராவாரம் ரெவ்யுவோடு முடித்துக்கொள்வார். பின்னாலிருந்து எம் டி எனக்கு பக்க பலம் என்கிற வெளிப்படை ரகசியம் அவர் காதுக்குப் போயிருக்கும்.
ராஜராஜர் அருள்மொழியை ஊன்றிக்கவனித்து, அவனுக்குத்தேவையான வீர தீர பயிற்சிகளுக்கு அனுப்பி, நாகை புத்த விஹாரத்தில் மனப்பயிற்சிக்கு அனுப்பி, ராஜேந்திரனுக்குப்பிற்காலத்தில் வலது கையாய் உதவும் தகுதிக்குள்ளாக்கும் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வைத்தார்.
ஆனால் இரண்டே வருடங்களில் கம்பெனியில் நிலமை மாறினது எனக்கு லேசு பாசாக புரிய ஆரம்பித்தது. சில நாட்களாக எம் டி ஏனோ என்னைப் பார்க்க நேரம் ஒதுக்கவேயில்லை. டைரக்டரும் பட்டும் படாமலேயே இருக்க ஆரம்பித்தார். என்னுடைய ப்ரபோசல்கள் எதுவுமே அப்ரூவும் ஆகாமல் ரிஜெக்டும் ஆகாமல் எங்கோ தேங்கிவிடும். என் திட்டத்தை அனுப்பிவிட்டு நான் பாட்டுக்கு என் வழியில் கொண்டிருந்தேன். சில நாட்களாக இன்னொரு புது அம்சம் புலப்பட ஆரமித்தது.
கோவில் என்னும் பிரம்மாண்ட முயற்சியின் நடுவே வர்ஜ்யா வர்ஜ்யமில்லாத ஆயிரக்கணக்கான செயல்பாடுகளின் ஊடே கூடவே எல்லாவித மார்ச்சரியங்களும் மெதுவாக ஆரம்பிக்கின்றன. போர் செய்து சோழ சாம்ராஜ்யத்தை விஸ்தாரம் பண்ணாமல் இப்படி கோவில் அது இது என்று தந்தை ஒடுங்குகிறாரே என்று மகன் ராஜேந்திரனுக்கு கோவம், இதை விசிற விடும் சில சேனாதிபதிகளும் படைத்தலைவர்களும் ராஜேந்திரனுக்கு ஜால்ரா. ஆக அப்பன் மகன் இருவரும் பிரிகிறார்கள் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்புகின்றன. அந்தணர்கள் ஒரு பக்கம், மறவர்கள் ஒரு பக்கம், கருமார்கள் இன்னொரு பக்கம் என்று ஆளாளுக்கு தங்களின் சொந்த சௌகரியத்துக்குக் கேடில்லாமல் இருக்க உள்ளடி வேலைகள் செய்கின்றனர். கோவில் கட்டுவதில் தனக்கு என்ன லாபம் பார்க்கலாம் என்கிற மனப்பாங்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிய ஆரம்பித்தது.
எனக்கு அடுத்த நிலை மானேஜர்,” இந்த பாம்பே டூருக்கு என்னையும் போகச்சொல்லியிருக்கார் டைரக்டர்!” என்று கூடவே வருவார். நான் கொடுத்த வேலையை முடிக்காமலே இருப்பார். கேட்டால், டைரக்டர் வேற ஒரு அஸைன்மெண்ட் கொடுத்து பண்ணச்சொல்லிவிட்டார் என்பார். முக்கியமான மீட்டிங்கிற்கு என்னை விடுத்து அந்த மானேஜரை அழைத்துக்கொண்டு போவார்.
ஒரு சந்தர்ப்பத்தில் ராஜராஜர் சட்டென்று தானே புறப்பட்டு மகன் ராஜேந்திரன் இருக்குமிடத்திற்கு வருகிறார். ராஜேந்திரனோடு கூட உற்ற நண்பனும் ராஜராஜரின் பிரம்மராயரான அன்பில் அநிருத்தரின் மகனுமான சின்ன அருண்மொழி கூட இருக்கிறான், . சோழ தேசத்திற்காக உயிரையே துச்சமென மதித்து தீரச்செயல்கள் புரிந்து ராஜேந்திரனின் உற்ற நண்பனானவன். சக்ரவர்த்திக்கும் பிடித்தமானவன். ஆனால் இந்த மீட்டிங்கில் சக்ரவர்த்தி ராஜேந்திரனை தோளில் கை வைத்து அழைத்து, இவனிடம், ” அருள்மொழி நீ வரவேண்டாம். நாங்கள் மேலை சாளுக்கிய போர் ஆயத்தம் பற்றி கொஞ்சம் ரகசியமாக பேச விழைகிறோம்” என்று ஒதுக்கி விடுகிறார்
நேரே போய் எம்டியைப்பார்க்க முற்பட்டபோது ” நீ கொஞ்சம் வெயிட் பண்ணு ” என்று சொல்லி என்னுடைய டைரக்டரைக்கூப்பிட்டு பேசிவிட்டு பிறகு என்னை விளிப்பார். அதிலும் நான் சொல்வதை ஏனோ தானோ என்று கேட்டுவிட்டு ” சரி, நீ டைரக்டர் கிட்ட பேசேன்” என்று முடித்து விடுவார்.
அருள்மொழி கிடந்து மறுகுகிறான். தாழ்த்தப்பட்டவன் போல துடிக்கிறான். ஒதுங்கி அன்பிலுக்கே போய்விடலாமா எல்லாவற்றையும் விட்டு விட்டு என்றுகூட யோசிக்கிறான்
எனக்கு பின்னால் கம்பெனியில் ஒரு சதி வலை பின்னப்பட்டு அதில் சிக்க வைக்கப்படுகிறேன் என்பது புரிய ஆரம்பித்தது, நான் குமைந்தேன். சரியான காரணம் புரிபடவில்லை. ஒதுக்கப்படுவதைப்போல தோன்றியது. சில முடிவுகளில் யாரும் என்னைக்கேட்கவே இல்லை.
தந்தையும் மகனும் என்ன பேசினார்கள், தன்னை ஏன் ஒதுக்கினார்கள் என்றெல்லாம் அருள்மொழிக்குத்தெரிவதே இல்லை. இருந்தும் அடுத்து வரும் நாட்களில் ஒன்றும் பேசாமல் தன்னை முழுவதுமாய் தேசப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டு கடுமையாக உழைப்பதில் எந்த சுணக்கமும் இன்றிச் செயல்படுகிறான்.
இந்த நடவடிக்கைகள் பொறுக்காமல் நான் அந்த க்ரூப்பை விட்டு வெளியே வந்து, கூடவே வெளியேறிய சிலருடன் சேர்ந்து கம்பெனி ஆரம்பித்தது , அது மிக நன்றாக வளர………….
அருள்மொழி பிற்காலத்தில் ராஜேந்திரனுக்கு பிரம்மராயராகி மேலும் மேலும் உயர்ந்து ராஜேந்திரனின் முழ் அன்பையும் நம்பிக்கையையும் பெற்று, பெரும் பதவிகளூம் புகழும் செல்வங்களும் அடைகிறான். ராஜராஜர் ஏன் அவனை ஒதுக்கினார்? தவறு ஏதும் செய்துவிடுகிறானா? இதுதான் அரசியலா? முதன்மை நிலையில் இருப்பவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களா? இல்லை, இது ஒரு சோதனையா?
நானும் ஒரு வேளை பொறுமையாக இருந்திருக்க வேண்டுமா? அவசரப்பட்டு வெளியே வந்து விட்டேனா? எனக்கு அந்த பெரிய க்ரூப்பின் பிரம்மராயராகும் வாய்ப்பு தவறிப்போய்விட்டதா?
எது எப்படியோ, காலம் நகர்ந்துவிட்டது.
மீண்டும் உடையாரும் கங்கை கொண்ட சோழனும் படித்தேன். நானும் நானுமே பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்.
“உன்னோட அனாலிஸிஸ் தப்பு!”
“ ஏண்டா என்ன தப்பு?”
“அந்த க்ருப்புலேர்ந்து வெளில வந்ததும் நீ என்ன பண்ணினே?”
“தனியா கம்பெனி ஆரமிச்சேன். என்னோட கூட இன்னும் சில பேர் சேர்ந்துண்டா?”
“கம்பெனி சக்ஸஸ் ஆச்சா இல்லியா?”
“தாறுமாறான சக்ஸஸ் ஆச்சு! நாலே வருஷத்துல இன்னொரு பெரிய கம்பெனிக்கு அத வித்துட்டேன்!”
“இப்ப சொல்லு, நீ அந்த க்ரூப்புலேயே இருந்திருந்தா இப்ப ஒரு சீனியர் வைஸ் ப்ரெசிடெண்ட்டா இருந்திருப்பே, அவ்வளவுதானே?”
”ஆமாம் ! நீ சொல்றது சரிதான்!”
“இப்ப புரியறதா ! நீ கம்பேர் பண்ணிக்க வேண்டியது அருள்மொழி பிரம்மராயனோட இல்ல! ராஜராஜ சோழரோட!
“ என்ன சொல்றே?”
“நான் சொல்லல! பாலகுமாரன் சொல்லுகிறாரே!”
“வெளில வந்ததுனால தானே நீயே தொடங்கிய கம்பெனிக்கு தலைவனாக, அதாவது ராஜரஜ சோழனாவே ஆயிடலையா? அப்ப ஏன் பிரம்மராயர் ஆகலைன்னு கவலைப்படணும்? கதையில முதல்ல எழுதியிருக்கியே Neal Roese, அந்த கொட்டேஷனை மறுபடி படிச்சுப்பாரு!”
ஒவ்வொரு முறை படிக்கும்போதும் உடையார் நாவலில் பாலகுமாரன் சொல்லும் வாழ்க்கைப்பாடங்கள் மேலும் மேலும் தெளிவாகின்றன என்பதை மறுக்கவே முடியாது.
Thank you my dear Bala Kumaran Sir!
