மனித மனம் எப்படிப்பட்டது என்பதில் தொடங்கி திட்டமிடுதல், வித்தியாசமாகச் சிந்தித்தல், கனவு காணுதல், விடாமுயற்சி, பாஸிட்டிவ் சிந்தனை, ரிஸ்க் எடுப்பது, விட்டுக்கொடுப்பது, ஈகோ, பொறாமை, பர்ஃபெக்ஷன், கோபம், அடுத்தவர்களுக்கு உதவுவது, தகவல் தொடர்பு, உறவுகள், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது, பணம் சம்பாதிப்பது, தலைமைப் பண்புகள் என்று சகலத்தையும் குட்டிக் குட்டிக் கட்டுரைகளாக அமைத்துக் கொடுத்திருக்கிற அருமையான புத்தகம், ஹல் அர்பன் எழுதிய ‘லைஃப்’ஸ் க்ரேட்டஸ்ட் லெஸன்ஸ்’ (Life’s Greatest Lessons).
ஹல் அர்பன் முப்பத்தைந்து வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றியவர். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தன்னுடைய குழந்தைகளுக்குச் சொல்ல விரும்பிய வாழ்க்கைப் பாடங்களைக் கட்டுரைகளாக எழுதினார். பின்னர் இவை எல்லோருக்கும் பயன்படும்வண்ணம் நூல்வடிவம் பெற்றுப் பல லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. ஏராளமானோரின் வாழ்க்கையையே தடம் மாற்றி வழிகாட்டியிருக்கின்றன.
நூற்றைம்பது பக்கங்களுக்குள் பலநூறு கதைகள், அனுபவக் குறிப்புகள், சின்னச் சின்ன வாழ்வியல் சிந்தனைகள், தத்துவங்கள் என்று கொட்டி நிரப்பியிருக்கும் இந்தப் புத்தகத்திலுள்ள இருபது வாழ்க்கைப் பாடங்களில் சில…
நீங்கள் விரும்பும் ‘வெற்றி’ எது என்று தெளிவாக வரையறுத்துக்கொள்ளுங்கள். வெறுமனே பணம் சம்பாதிப்பது மட்டும் வெற்றியாகிவிடாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
ரொம்பச் சிரமப்பட்டு எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேறியாகவேண்டும். அதேநேரம், உங்களைப்போல் கஷ்டப்பட்டு உழைக்காமல் முன்னுக்கு வருகிறவர்களும் இருப்பார்கள். அவர்களைப் பார்த்துப் புலம்பாமல், உங்கள் முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
உங்களுடைய வெற்றி, தோல்வி இரண்டுமே எதேச்சையாக வருபவை இல்லை. அதிர்ஷ்டத்தாலோ துரதிருஷ்டத்தாலோ நிகழ்பவை இல்லை. எல்லாம் நீங்கள் எடுக்கும் முடிவுகளில்தான் இருக்கிறது.
வெற்றிக்குச் சில பழக்கங்கள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் அவசியம். ஜெயித்தவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்களிடம் உள்ள எந்தெந்தப் பழக்கங்கள் உங்களிடம் உள்ளன? எவையெல்லாம் விடுபடுகிறது? ஏன்? யோசியுங்கள்.
உங்களுக்கு சின்னச் சின்ன உதவி செய்தவர்களுக்குக்கூட மனமார நன்றி சொல்லப் பழகுங்கள்.
திறமை உள்ளவர்களுக்கு மரியாதை கொடுங்கள். மற்றவர்களைவிட நீங்கள்தான் உசத்தி என்கிற அகம்பாவம் வேண்டாம்.
உங்களை உழைக்கத் தூண்டுவதற்கு இன்னொருவரை எதிர்பார்க்காதீர்கள்.
சில சமயங்களில் ஒன்றைப் பெறுவதற்காக நீங்கள் இன்னொன்றை இழக்க வேண்டியிருக்கலாம். அதுமாதிரி தருணங்களில் எது முக்கியம் என்று நன்றாக யோசித்து முடிவெடுங்கள்.
எல்லோருக்கும் 24 மணி நேரம்தான். ஆகவே ‘எனக்கு நேரமே போதலை’ என்று புலம்பாதீர்கள்.
வெற்றியைத் துரத்தும் அவசரத்தில் உங்கள் உடம்பை மறந்துவிடாதீர்கள். தோல்வியே இல்லாத வாழ்க்கை போரடிக்கும். பெரிய வெற்றியாளர்கள்கூட அவ்வப்போது தோற்றிருக்கிறார்கள். நீங்களும் எப்போதாவது தோற்கலாம். தப்பில்லை.
நீங்கள் எவ்வளவு ஜெயித்தாலும் சரி, எத்தனை உயரத்துக்குச் சென்றாலும் சரி ‘நல்ல மனிதர்’ என்று பெயர் எடுக்காவிட்டால் அவை எல்லாம் அர்த்தம் இழந்துவிடுகின்றன. வெற்றிக்காகக் குணத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். ‘நான் நல்லவனாக வாழ்ந்தேன்’ என்கிற திருப்திதான் மற்ற எல்லாவற்றையும் விட மிகப் பெரியது!.
–நன்றி குமுதம்
நூலின் தலைப்பு : வெற்றிக்கு சில புத்தகங்கள்
நூலின் ஆசிரியர் : என். சொக்கன்
பதிப்பகம் : மதி நிலையம் , சென்னை 86
மொத்த பக்கங்கள்: 184, விலை ரூ 120
வெற்றிக்கு சில புத்தகங்கள் (சுய முன்னேற்ற வகையைச் சேர்ந்த முப்பது ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றிய சிறு அறிமுகக் கட்டுரைகள், நூல் சுருக்கம், குமுதம் வார இதழில் இரண்டரை ஆண்டுகள் வெளிவந்த ‘வெற்றிக்கு ஒரு புத்தகம்’ தொடரின் முதல் பகுதி)
புத்தகம் படிக்கும் பழக்கமே குறைந்துவரும் காலகட்டம் இது. என்னதான் பயனுள்ள விஷயங்களைப் புத்தக வடிவில் தந்தாலும், ‘அதையெல்லாம் உட்கார்ந்து படிச்சுகிட்டிருக்க முடியாதுங்க. சுருக்கமா அஞ்சு நிமிஷத்துல சொல்லுங்க சார்’ என்று கேட்கிறவர்கள் ஏராளம்.
-
குமுதம் இதழில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியான ‘வெற்றிக்கு ஒரு புத்தகம்’ தொடர் இதனைச் சாதித்துக் காட்டியது. பல பிரமாதமான புத்தகங்களை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு வாரமும் நான்கே பக்கங்களுக்குள் அதனைச் சுருக்கமாகவும், சுவை குறையாமலும் அறிமுகப்படுத்திய விதம், லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்தது. இதைப் படித்துவிட்டு அந்தப் புத்தகங்களைத் தேடிச் சென்று முழுப்பலன் பெற்ற வாசகர்களும் ஏராளம்
-
அந்தத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் அறிமுகங்களை இங்கு தொகுத்து அளித்திருக்கிறோம். ஒரு அலமாரி முழுக்க நிரம்பக்கூடிய புத்தகங்களை ஒன்றிரண்டு மணி நேரத்துக்குள் படித்துப் புரிந்துகொள்ளக்கூடிய அபூர்வமான வாய்ப்பை இது உங்களுக்குத் தரும்!
