அந்த நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர், கண்களின் சிகிச்சைக்காக வெளிநாடு போவதாக ஒரு செய்தி இருந்தது.
அது, நாளடைவில் வெளிநாட்டில் இருக்கும் நாட்களை ஏன் வீணாக்க வேண்டும் என்று ஒரு திரைப்படம் எடுக்கும் திட்டமாக மாறிவிட்டது. அந்தப் படத்தில் இசையமைக்க என்னைக் கேட்டுக் கொள்ள ஸ்ரீதர் சார் வந்தார்.
ஏற்கனவே, நான் எடுத்திருந்த முடிவைச் சோதித்துப் பார்க்க, ஒரு சரியான சந்தர்ப்பம். அவரோ பெரிய டைரக்டர், உள்ளே (அதாவது மனதிற்குள்ளே) இப்படிப்பட்டவரைக்கூட வேண்டாம் என்று விட்டுவிட்டேன் என்று பெருமைப்பட ஒரு நல்ல வாய்ப்பு! விட்டு விடாதே! என்றொரு குரல்.
ஆனால், எப்படி ஸ்ரீதர் சாரிடம் சொல்வது ? என்று தயக்கமேற்பட்டது. எடுத்த முடிவு என்னவோ முடிவுதான் என்பதில் நான் மிகவும் பிடிவாதக்காரன்.
என் தயக்கத்திற்குள்ளேயே இரண்டு மூன்று முறை வந்து போய் விட்டார் டைரக்டர். மேலும் இரண்டு முறைகளும் தேடி வந்துவிட்டார். பதில் என்னவோ ஒன்றுதான். சொல்லும் வார்த்தைகள்தான் மாறியது.
“சார் நிறையப் படங்கள் ஏற்கனவே ஒத்துக் கொண்டதால், குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்குப் பாடல்களைப் பதிவு செய்து கொடுக்க முடியுமோ முடியாதோ? என்று சந்தேகமாக இருக்கிறது” என்றேன்.
“அது பரவாயில்லை ராஜா!” என்றார்.
“நாம ஒரே Composing – ல் எல்லாப் பாடலையும் முடித்து விடலாம்” என்றார்.
“சார், நாளைக்குச் சொல்கிறேனே…” என்று இழுத்தேன்.
மறுநாள், A.V.M – ல் recording – ல் இருந்தேன். ரிகர்சல் முடியும்வரை ஸ்ரீதர் சார் காத்திருந்தார்.
“ராஜா, இதுவரை என் Life – ல் யாரையும் தேடித் போனது இல்லை. ஏன் ? எம்.ஜி.ஆர். கிட்டேயும், சிவாஜி கிட்டேயும் கூட நான் ஆறு தடவை போனது இல்லை. இது 6th time உங்களைப் பார்க்க நான் வந்திருக்கிறேன். என்ன சொல்றீங்க ?”
அவரிடம் நான் சாதாரணமாய்ச் சொன்னேன். ” 6 தடவை நான் உங்கள வரச் சொல்லலியே சார்!…”
அவர் அதிர்ந்து போனாலும், தனது கோபத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “ராஜா, ஒரே Composing நான்கு மணி நேரம் போதும்” என்று தொடங்கினார்.
நான் இடைமறித்தேன். “சார், உங்கள் படத்தில் பாடல் சரியில்லையென்றால், ரசிகர்கள் ஸ்ரீதர் பாடல் சரியில்லை என்பார்களா ? என் பாடல் சரியில்லை என்பார்களா ?”
“இல்ல ராஜா!”
“சார் இதுவரைக்கும் 58 படங்களுக்கு M.S.V. அண்ணன் உங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதில் ஒரு பாடும் சோடையில்ல! அப்படி இருக்க உங்க குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாற முடிக்கிறத்துக்காக, எதையோ Record பண்ணிக் குடுத்து ரசிகர்கள் கிட்ட இருந்து திட்டு வாங்க நான் தயாராக இல்ல. தயவு செய்து, இந்தப் படத்துக்கு வேற யாரையாவது வச்சு முடிச்சுக்குங்க. என்ன மன்னிச்சிருங்க” என்று சொல்லி மறுத்துவிட்டேன்.”
பாஸ்கரும், அமரும், பாரதிராஜாவும், “ஒனக்கு ரொம்ப மண்டைக் கர்வம்” என்று திட்டினார்கள். ஆமாம் கர்வம்தான். அன்று இரவு மகிழ்ச்சியாகத் தூங்கினேன்.
இது, அண்ணன் M.S.V. அவர்களுக்குத் தெரியாது. இந்த நவராத்திரியின் போது வீட்டுக்கு வந்த அவரிடம் இதைப் பற்றிச் சொன்னேன். “அப்படியா? அப்படியா ? என்று கேட்டுக் கொண்டார்.
இப்போதும் அந்தக் குணம் அப்படியே தொடர்கிறது. எதற்க்காக ஒரு வேலையை ஒத்துக் கொள்வேன் அல்லது தள்ளி விடுவேன் என்பது யாருக்கும் தெரியாது! ஏன் ? எனக்கே தெரியாது!
படத்தை ஒத்துக் கொள்வதில்தான் எப்படி நடந்து கொள்வேன் என்று சொல்ல முடியாது என்பதில்லை!
எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வேன்? ஏன் அப்படி ? என்றெல்லாம் எனக்கே விளங்காத பல சம்பவங்கள்.
