![]()
![மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal]()
இரவு பத்தரை மணிக்கு சொகுசுப் பேருந்து வந்தது. மெத்தை போட்டு உள்ளே குளிர்வித்த இருக்கைகளில் அத்தனை பெண்களையும், ஆண்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு தரமணிக்கு விரைந்து, கால் சென்டரில் கொண்டு போய்க் கொட்டியது.
அர்ச்சனா கையெழுத்துப் போட்டு விட்டு உள்ளே போனாள். வெல்கம் அமெரிக்கா என்று அறிவித்தது வாசல்படி.
டயட் பெப்சி, கோக், கேக், சாண்ட்விச், பெர்கர், நொறுக்குத் தீனி சமாச்சாரங்கள் நிறைந்திருந்தன. கை துடைத்துக் கொள்ள காகிதக் குட்டைகள் இருந்தன. பெரிய கண்ணாடி ஜாடிகளில் டிகேஃப், ரெகுலர் என்று காபி சதா சூடாக இருந்தது. ஹாலில் வரிசையாக டெர்மினல்கள். அருகில் காதில் மாட்டிய ஹெட் செட், உதட்டருகே மைக் வைத்து கீ போர்டில் பெண் விரல்கள் விளையாடின.
சாம்சுப்பு என்று சட்டைப் பையில் பெயர் எழுதிய சூப்ரண்ட் மேசையில், சிறிய அமெரிக்கக் கொடி வைத்திருந்தது. “எல்லாம் படிச்சுட்டியாம்மா மனப்பாடமா?”
“ஆச்சு சார்.”
“கால் மீ சாம். எங்கே முதல் வாக்கியத்தைச் சொல்லு?”
“அஜாக்ஸ் கால் சென்டர். மே ஐ ஹெல்ப் யூ?”
“அஜாக்ஸ் இல்லை. ஏஜாக்ஸ். ஏ. ஏ. தமிழை மற முதல்ல.”
“ஏஜாக்ஸ்”
“மெல்லப் பேசு. அங்க இருக்கறவங்கல்லாம் பொழுது போகாத கிழங்க. ரொம்பத் தனிமையான மனுசங்க. பணம் வச்சிருக்கறவங்க. ஆனா அவங்கக் கிட்ட ஒரு கனெக் ஷனோ, க்ரெடிட் கார்டோ, ஒரு விடுமுறையோ விக்கறத்துக்குள்ளே தாவு தீர்ந்துடும். நூறு கேள்வி கேட்பாங்க. முதல்ல உயிரோட இருக்கார்னு ஊர்ஜிதப்படுத்திக்கணும். இப்ப அங்க விண்டர், விபூதி கொட்டற மாதிரி ஸ்னோ பொழியும். மைனஸ் பதினெட்டு டிகிரி. உம்பேர் என்ன?”
“அர்ச்சனா.”
அவர் விழிகள் கோபத்தில் விரிந்தன. “எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்தக் கட்டடத்துக்குள் வந்த உடனே உம்பேர் அர்ச்சனா இல்லை. ஸேரா. உன் மொழி அந்த ஐம்பது வாக்கியங்கள்தான். அதுக்கு மீறி ஏதும் பேசக் கூடாது.”
“சாரி சார்.”
“மறுபடியும் ‘சார்!’ அமெரிக்காவில் யாரும் யாரையும் சார்னு கூப்பிடமாட்டாங்க தெரியுமா? உச்சரிப்பு தவறக் கூடாது. ‘லாஃப்’னு சொல்லக் கூடாது. ‘லேஃப், ‘லேஃப்’ சொல்லு!
“லேஃப்” என்று பயத்துடன் சிரித்தாள்.
“தட்ஸ் பெட்டர்.”
“சீட்ல உக்கார். சேர்ந்து எத்தனை நாளாச்சு?”
“பதினைஞ்சு நாள் சார்.”
“பரவாயில்லை. சில பேர் ஒரு நாள்லேயே ஓடிப் போயிடறா. போட்டிக் கம்பெனிக்காரங்க அதிக சம்பளம் குடுக்கறேன்னு டெம்ப்ட் பண்ணுவாங்க. நம்ம கம்பெனி மாதிரி பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கேயும் கிடையாது. எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லிட்டுப் போ. திடுதிப்புனு விலகக் கூடாது. ரைட்? ராத்திரி வீட்டுக்குப் போறப்ப செக்யூரிட்டி வரானோல்லியோ?”
டெர்மினலில் உட்கார்ந்து சாதனங்களை ஆபரணங்கள் போல மாட்டிக் கொண்டாள். திரையில் வரிசையாக எண்கள் தெரிந்தன. ஒவ்வொன்றாக கம்ப்யூட்டரே டயல் செய்து இணைத்து இவளிடம் கொடுத்தது. ஹாய் திஸ் இஸ் ஏஜாக்ஸ் கால்சென்டர். ஹவ் யு டுயின். என்ன பாஷை இது! எல்லாமே பொய், பெயர் பொய், தேசம் பொய், பேச்சு பொய், சம்பளம் மட்டும் நிஜம்.
ஜார்ஜ் மூன்றாவது க்யூபிகிள்ளிலிருந்து எழுந்து ஹாய் ஸேரா என்று கையசைத்தான். இயற் பெயர் சேஷாத்ரி.
“எனக்கென்னவோ இந்த வேலை பிடிக்கவே இல்லை அர்ச்சு. ராத்திரியெல்லாம் கண் முழிச்சா உடம்பு என்னத்துக்கு ஆறது. பகல்ல வேலை கிடைக்காதா? கண்ணெல்லாம் பாரு பொங்கிக் கிடக்கு.”
“பாரும்மா இந்தச் சம்பளம் கிடைக்காது. எல்லா சேஃப்ட்டியும் இருக்கு. செக்யூரிட்டி, எஸ்கார்ட் இல்லாம கடைசியா பெண்களைக் கொண்டு விடறுதுங்கற பேச்சே இல்லை. ஆம்பளைத் துணை இல்லாம அனுப்ப மாட்டா.”
“அதெல்லாம் சரிதான். அந்த ஆம்பளைத்துணையே.”
“பேக்கு மாதிரி பேசாதே. என் கூட வேலை செய்யற ‘கைஸ்’ (guys) எல்லாம் அப்பாவிங்க. நாங்க அவங்களை கலாட்டா செய்வோம். ஜார்ஜ் என்ன ஒரு மரியாதையா, பண்பாடா வெட்கப்பட்டுண்டு பேசறான், தெரியுமா?”
“வெள்ளைக்காரனா?”
“இல்லைம்மா, சேஷாத்ரீக்கு ஆஃபீஸ்ல ஜார்ஜ்னு பேரு. எல்லாருக்கும் வேற பேரு. என் பேரு ஸேரா.”
“என்ன எழவோ, எல்லாம் பொய்யா இருக்கு. எனக்கு எதுவும் பிடிக்கலை. சீக்கிரமா பகல் வேலையா பார்.”
“நமக்கு ராத்திரி, அவர்களுக்கு பகல்ம்மா. ஜெயந்தி கோர்ஸ் முடியற வரைக்குமாவது இருந்தாகணும்.”
“இந்தச் சம்பளம் பகல்ல கிடைக்காதா?”
“கிடைக்காதம்மா, பாதிதான் கிடைக்கும். ஜார்ஜ் கிட்டயும் சொல்லி வச்சிருக்கேன்.”
“என்ன ஜார்ஜோ, என்ன ஸேராவோ! எல்லாரையும் கிறிஸ்தவாளா மாத்தாம இருந்தா சரி.”
சொல்லி வைத்தாற் போல் வெள்ளிக்கிழமை ட்யூட்டி முடிந்ததும் சேஷாத்ரி, “உங்களுக்கு டே ஜாப் வேணுமா அர்ச்சனா?” என்று கேட்டான்.
“என்ன சம்பளம்?”
“இதே சம்பளம். இன் ஃபாக்ட் இதைவிட பெர்க்ஸ் அதிகம். மெடிகல் ரீ இம்பர்ஸ்மென்ட், பெட்ரோல் சார்ஜ்.”
“என்ன வேலை?”
ஒரு ஐடி கம்பெனியில் கஸ்டமர் கேர்ல கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்கற பெண்ணா வேணும்னாரு. கம்பெனி பேர் கேட்டா அசந்துருவீங்க.”
சொன்னான். “சென்னையிலேயே பெரிய ஐடி கம்பெனி. இன்ட்ரஸ்ட் இருந்தா காலையில சென்மேரிஸ் ரோடில அவங்க ஆபீசுக்கு கூட்டிட்டுப் போறேன்.”
அவனை வாத்சல்யமாகப் பார்த்தாள்.
“சேஷாத்ரி உங்க உதவிக்கு நான் என்ன, அது என்ன?”
“கைம்மாறா? பேசப்படாது. உங்களுக்கு இஷ்டமிருந்தா, நேரமிருந்தா, ட்யூட்டி விட்டு காலைல வீட்டுக்குப் போறதுக்கு முன்னால, எங்க வீட்டுக்கு வந்து என் சிஸ்டரையும், அம்மாவையும் சந்திச்சா போதும். அதுவே பாக்கியம்.”
“எதுக்கு?”
“சும்மாத்தான். உங்களைப் பத்தி அவங்ககிட்ட சொல்லிருக்கேன். பார்க்க விரும்பறா. பயப்படாதீங்க.”
“ச்சே பயம்னு இல்லை. தயக்கம்தான்.”
“என்ன வர்றீங்களா?”
“இன்னிக்கா?”
“உங்களுக்கு சௌகரியப்படும்னா இன்னிக்கே. வெள்ளிக்கிழமை நல்ல நாள்.”
யோசித்தாள்.
“சரி அட்ரஸ் சொல்லுங்க.”
“அட்ரஸ் கண்டுபிடிச்சு மாளாது. நான் கூட்டிட்டுப் போறேன். வேளச்சேரி பஸ் ஸ்டாண்டுக்கு அடுத்த ஸ்டாப்ல இறங்கிடுங்க. நான் பைக்ல வந்து அழைச்சுட்டுப் போறேன். காலைல வர்றீங்களா?”
“சரி.”
இந்த மாதிரி நல்லவர்களும் இருக்கிறார்களா என்ன என்று எண்ணினாள். மனசுக்குள் சின்னதாக ஒரு படபடப்பு. ஏன் என்று புரியவில்லை. பயமா, எதிர்பார்ப்பா?
–இதன் தொடர்ச்சி விரைவில்…
![மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal]()
இறுதி வரி சொடுக்குத் திருப்பம் என்பது சுஜாதாவுக்கே உரித்தான அநாயாச உத்தி. அம்மாதிரிக் கதைகளாகவே குமுதத்தில் 1986-ல் ‘தூண்டில் கதைகள்’ எழுதி, வாசகர்களின் மனத்தைக் கொக்கி போட்டு ஈர்த்த சுஜாதா, 1995-ல் ஆனந்த விகடனில் ‘புதிய தூண்டில் கதைகள்’ கதைக்கொத்து எழுதிக் கொள்ளையடித்தார். பிறகு 2006-ல் மறுபடியும் குமுதத்தில், ‘மீண்டும் தூண்டில் கதைகள்’ என அவர் வாசகர்களை வசீகரித்து வாய் பிளக்க வைத்த பத்து கதைகள் இந்நூலில்.