Quantcast
Channel: Book Review – Balhanuman's Blog
Viewing all articles
Browse latest Browse all 178

6-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

$
0
0

இதன் முந்தைய பகுதி…

நண்பன் S.P. பாலசுப்ரமண்யம் அவனுக்கு என்று இருந்த இசைக்குழுவைக் கலைத்துவிட்டு என்னை வைத்து ஓர் இசைக்குழுவுடன் சினிமாப் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த நேரம். அப்போதுதான் அவன் சினிமா உலகில் நுழைந்திருந்தான்.

Exam – மிற்கு முதல்நாள் பொள்ளாச்சியில் நிகழ்ச்சி இருக்கிறது என்று சொன்னான். ஐயோ – அடுத்த நாள் Exam Attend பண்ண முடியாது. நான் வரவில்லை, எனக்கு Exam தான் முக்கியம் என்றேன்.

“நீ இல்லாட்டி எப்படிடா?”

“நான் எப்படியாவது இரவோடு இரவாக உன்னை சென்னையில் சேர்த்து விடுகிறேன். தயவு செய்து வா” என்று கூற, அன்றிரவு பொள்ளாச்சியில் நிகழ்ச்சி முடிந்தவுடன், ஒரு காரில் நானும் இன்னும் மூவரும் பாலுவும் கிளம்பி விட்டோம். டிரைவரை சும்மா உட்கார வைத்து பாலு வண்டியை ஓட்ட, சேலம், உளுந்தூர் பேட்டை, சென்னை என்று வர வேண்டியவன், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி என்று ரூட் மாறிப் போய் விட்டான்.அப்புறம் எப்படியோ வேலூர் அருகில் வந்து டிரைவரிடம் வண்டியைக் கொடுத்துவிட்டுப் பின்னால் வந்து உட்கார்ந்தான். நான் வலதுபுறக் கதவுக் கண்ணாடியில் தலை சாய்த்துத் தூங்கிக் கொண்டிருந்தேன். பின்னால் வந்தவன் என்னருகில் உட்கார்ந்து என் மடியில் படுத்துத் தூங்க ஆரம்பித்தான்.

ஓரிரு நிமிடம் ஆகியிருக்கும். வலது புறத்தில் சாலையில் ஒரு சிறு குழந்தை குறுக்கே வர, குழந்தையைத் தவிர்க்க இடது புறமாக வண்டியைத் திருப்ப வண்டி ரோடு விட்டு இறங்க, மணலில் சறுக்கி, எதிரே இருந்த தந்திக் கம்பத்தில் மோதி – பக்கத்திலிருந்த குடிசைகளைத் தாண்டி- அங்கிருந்த சிறு பலத்திற்கு முன் உள்ள சாலையை ஒட்டிய பள்ளத்தில் வண்டி உருள ஆரம்பித்தது. ஒரு நொடியில் நிலைமையை உணர்ந்து கொண்டேன்.

உருண்ட வண்டிக்குள் இருந்த நான், “சரி, இப்பொழுது உடம்பில் அடி விழப் போகிறது. முதுகில் விழுமா? கையில் விழுமா? முகத்தில் விழுமா?” என்று ஒவ்வொரு நொடியும் எதிர்பார்க்க எதிர்பார்க்க வண்டி ஒரு முப்பது அடிப் பள்ளத்தில் மூன்று நான்கு பல்டி அடித்து சக்கரங்கள் மேலே தூக்கியவாறு தலைகீழாக விழுந்து நின்றது.

ஆனால் நாங்கள் இருந்த சீட் மட்டும் நாங்கள் அமர்ந்திருந்த நிலையிலேயே இருந்தது. எனக்கு முன் இருந்த டிரைவர் சீட்டின் முன் கண்ணாடியில், ஆயில் வண்டியில் பட்ட தூசுடன் கலந்து இரத்தக் கலரில் வடிந்து கொண்டிருந்தது கண்டு திகீரென்று ஆயிற்று!

முன்னால் எத்தனை பேர் காலியோ? தெரியவில்லை! திறந்திருந்தது டிரைவர் சீட் கதவுக் கண்ணாடி மட்டும்தான். தலை கீழாயிருந்த அதன் வழியாக ஒவ்வொருவராக வெளியே வந்து மேலே பார்த்தால், ஒரு பட்டாளம் போல் ஜனக் கூட்டம். பாலத்தின் மேலும் ரோட்டின் மேலும் நின்று கொண்டிருந்தது. எல்லோரும் கத்தினார்கள்.

என்னய்யா ? என்ன ஆச்சு ? நல்லாப் பாருங்கையா என்பன போன்ற குரல்கள்…

சீக்கிரம் மேலே வந்துருங்க- கார் வெடிச்சாலும் வெடிக்கும் என்ற சத்தங்கள் வேறு.

மேலே ஏறி வந்தோம் – அழுத்தமான காயம் முன்னால் இருந்த இருவருக்கு மட்டும்தான்.

கண்ணாடியில் தலை வைத்துத் தூங்கி வந்த எனக்குக் கண்ணாடி தூள்தூளாக நொறுங்கியும் என்மீது ஒரு காயம்கூட எங்கும் ஏற்படவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு ஃபேக்டரிக்குள் சென்று வேலூர் சரஸ்வதி Transport முதலாளிக்கு பாலு ஃபோன் செய்துகொண்டிருந்தான்.

வெளியே வந்தவுடன் அவனுடன் கையைக் கோத்துக்கொண்டு காலை ஐந்தரை மணிக்கு “நான் செத்துப் பொழச்சவன்டா” என்ற பாடலைப் பாடி சிரித்துக் கொண்டிருந்தோம்.

சிறிது நேரத்தில் பாலுவின் நண்பரான அந்த பஸ் முதலாளி வந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, எங்களை ஒரு ‘இம்பாலா‘ காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

சென்னை வந்து Exam எழுதிவிட்டேன். ரிசல்ட் இரண்டு நாள் கழித்து வந்தது. நான் தன்ராஜ் மாஸ்டரிடம் சபதம் செய்தது போலவே 85 மார்க் With Honour என்று வந்திருந்தது.

எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

கார்டை எடுத்துக் கொண்டு சாயி லாட்ஜ் சென்றேன். அவரிடம் காட்டுவதற்காக விரைப்பாக நீட்டினேன். விறைப்பாக நீட்டியதை வெடுக்கென்று பிடுங்கிய அவர், மெதுவாக அதைப் பார்த்து விட்டு மௌனமானார்.

சிறிது நேரம் கழித்து, “ராஜா யூ ஆர் கிரேட்டுடா!” என்றார்.

“ஸார்! நான் கிரேட்டோ இல்லியோ? ராஜாவாகவே இருந்தாப் போதும் ஸார்!” என்றேன்.

என்ன சொல்றீங்க? அப்படித்தானே?

–தொடரும்…

பால் நிலாப்பாதை



Viewing all articles
Browse latest Browse all 178

Trending Articles