பிச்சைக்காரர்களைப் புறக்கணிக்கலாகாது. முடிந்தவரை அவர்களைப் போற்ற வேண்டும் என்று என் குரு சொன்னதற்கு இதுதான் காரணமாக இருக்குமோ? ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டவருக்குச் சம்பாதிக்க முடியாதோ? சம்பாதித்தால் ஆன்ம விசாரத்தில் ஈடுபட முடியாதோ? அடுத்த வேளை உணவு பற்றி எந்தக் கவலையும் அற்று தனக்குள் மூழ்கிக் கிடக்கின்ற மனிதரை இந்தச் சமூகம் போற்றி பாதுகாக்க வேண்டுமோ? எதற்கு? அவரால் இந்த சமூகத்துக்கு என்ன உபயோகம்? ஒருவேளையும் செய்யாதவரால்? இந்தச் சமூகத்துக்கு உழைப்பு நல்காதவரால் மக்களுக்கு என்ன நன்மை? அவர் உழைப்பு நல்கவில்லையா என்ன? மனிதர்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்று அவர் அமைதி நமக்கு சொல்லாதா என்ன? அல்லது தவிக்கின்ற மனிதன் அவருக்கு அருகே போய் இவ்வளவு தெளிவாக இருக்கிறாரே இவரிடம் பேசுவோம் என்றால்; அவர் சொல்லும் நாலு வார்த்தை அவனை அமைதிப்படுத்தாதா என்ன? அவனை அமைதிப்படுத்தினால் அவன் குடும்பம், அவன் சூழ்நிலை அமைதியாகாதா என்ன? கொதிநிலையில் இருக்கின்ற மனிதர்களை அமைதிப்படுத்தும்போது சமூகம் அமைதிப்படுகிறது என்று நினைத்துக்கொள்ளலாமா?
இந்தச் சனாதான தர்மத்தில் ஒரு அழகான கதை உண்டு.
ஒரு கிராமத்தில் ஒரு முனிவர் அமைதியாக வசித்து வந்தார். அந்தக் கிராம மக்கள் அவருடைய சௌகரியங்களைக் கவனித்து வந்தார்கள். வெளியூரிலிருந்தும் மக்கள் வந்து அவரோடு பேசிவிட்டுப் போனார்கள். தங்கள் பிரச்னைகளைச் சொல்லி, அதற்குத் தீர்வு கண்டுப் போனார்கள். எந்நேரமும் கடவுளுடைய நினைப்பில் இருந்த அந்த முனிவருக்கு மக்களைப் புரிந்துக்கொள்வதும், அவர்கள் சங்கடங்களைத் தீர்ப்பதும் எளிதாக இருந்தது. பெரிய மனிதர்கள் கொடுத்த உதவிகளை அப்படியே கிராமத்தாருக்குக் கொடுத்துவிடுவார். தனக்கென்று அவர் எதுவுமே வைத்துக்கொள்ளாது மக்களிடம் பேசிய நேரம் போக, மற்ற நேரங்களிலெல்லாம் தனக்குள்ளே ஆழ்ந்து உறைந்திருந்தார். அந்தச் சாந்நித்யம் பெருகிக்கொண்டே இருந்தது. பதிலுக்கு எந்த உதவியும், எவரிடமும் எதிர்பார்க்காத தன்மை அவர் புகழைப் பரப்பிற்று.

வானத்தில் உள்ள தேவர்கள் வியந்தார்கள். என்ன ஒரு அமைதியான மனோநிலைமை என்று சந்தோஷப்பட்டார்கள். அவருக்கு மேலும் சக்திகள் கொடுக்கத் தீர்மானித்து, இரவு நேரம் அவரிடம் வந்து பேசினார்கள். அந்த முனிவர் சிரித்தார்.
எனக்கு எதற்கு உங்கள் உதவி? எதற்கு கூடுதலான சக்தி? இருப்பது போதுமே. எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்றால் இடையறாது கடவுள் நினைப்பிலேயே நான் இருக்க வேண்டும் என்பதைக் கொடுங்கள்” என்றார் முனிவர்.
அது உம்மிடம் இருக்கிறதே. அதை விட்டு நீர் நீங்கவேயில்லையே. உம்மால் நீங்கவும் முடியாதே. வேறு ஏதேனும் சக்தி கேளுங்கள் தருகிறோம்” என்று தேவர்கள் சொல்ல, இல்லை. எனக்கு எதுவும் வேண்டாம். அந்தச் சக்தி எனக்கு இருக்கிறது என்று தெரிந்தால் நான் அந்தச் சக்தியை நினைத்துக் கொண்டிருப்பேன். என்னுடைய கடவுள் நினைப்பு அப்போது நகர்ந்து போகும். அதைவிட சக்தி முக்கியமானதாகிவிடும். எனவே, அவ்விதமாக நீங்கள் ஏதும் தரவேண்டாம்” என்று சொன்ன பின்பும், ஏதாவது தந்துதான் ஆக வேண்டும்,” தேவர்கள் வற்புறுத்தினார்கள்.
அப்படியானால் நான் நடந்து போகின்ற இடமெல்லாம் நல்லது நடக்க வேண்டும்; நான் பார்க்கின்ற இடமெல்லாம் நல்லது நடக்க வேண்டும்; என் சுவாசம் பட்ட இடமெல்லாம் நல்லது முகிழ வேண்டும்;
இது எனக்கு தெரியாது நடக்க வேண்டும்; நான் இதை அறியக்கூடாது; என்னால் நல்லவைகள் நடக்கின்றன என்று எனக்குத் தெரியக்கூடாது; அவை தெரியாது என்னைச் சுற்றி இருக்கட்டும்” என்று சொன்னார். தேவர்கள் வியந்தார்கள். அவ்விதமே ஆகட்டும்” என்றார்கள்.
அந்த முனிவர் தன்னால் நன்மை விளைகிறது என்ற எண்ணமே இல்லாது வாழ்ந்து அமைதியாக மறைந்தார். அவர் இருந்த இடம் சிறப்புற்றது. நடந்த இடம் செழிப்புற்றது. பார்த்த இடம் பளபளத்தது. இதுதான் மனிதருடைய வாழ்க்கையாக இருக்க வேண்டும். தன்னால் ஏற்பட்டது என்ற நினைப்புதான் தடுமாற வைக்கும். அவரால் அவர் இருப்பு உணரப்படவேயில்லை. தான் இருக்கிறோம் என்ற நினைப்பற்று வெறுமே இருந்திருக்கிறார். இந்த இருப்பு எப்பொழுது வேண்டுமானாலும் குலைந்து போகும் என்ற நினைப்பில் இருந்திருக்கிறார். வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால் ஏதோ ஒரு நாள் மரணம் வரும். அப்பொழுது இந்த உடலை நீத்துவிட்டு உயிர் வேறு எங்கோ பறக்கும் என்ற எண்ணத்தில் இருந்திருக்கிறார். அதுவரை தன்னைச் சுற்றி நல்லவை நிகழட்டுமே, அது தனக்குத் தெரியாது இருக்கட்டுமே என்றும் உணர்ந்திருக்கிறார். ஒரு சிறிய அளவுகூட தான் என்கிற உத்வேகம் இல்லாமல் தன்னுடையது, தன்னால் என்கிற எண்ணம் இல்லாமல் வாழ்ந்து மறைந்திருக்கிறார். இதுதான் சனாதன தர்மம் சொல்லிக்கொடுக்கிற வித்தை.

அவருக்கு பெயர் உண்டா? தெரியாது. அப்படி பெயர் இருந்தாலும் அவர் சொல்லியிருக்க மாட்டார். அந்த கிராமத்து மக்களே ஏதாவது பெயர் சூட்டி அழைத்திருப்பார்கள். ஒரு அடையாளத்துக்காக வைத்திருப்பார்கள். ஆனால், அந்தப் பெயரைக் கூப்பிட்டால் அவர் திரும்பிப் பார்த்திருக்க மாட்டார். எதிரே போய் வணக்கம் சொன்னால் நின்று வணக்கம் சொல்லியிருப்பார். அவர் தனக்கு பெயர்கூட சூட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தவர்.இப்படி பல மகான்கள் இந்த பூமியில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.
செல்ஃப் என்பது இருந்தால்தான் செல்ஃப்பிஷ்னெஸ் என்பது இருக்கும். ஒருமுறை மேலைநாட்டு தத்துவம் ஒன்று என் குருநாதரால் பகுத்துத் தரப்பட்டது. மிகப் பெரிய வெளிச்சம் எனக்குள் புகுந்தது.Selfishness is a virtue sacrification is fraudulent word என்கிற மேலைய தத்துவவாதி அயன்ராண்ட் என்ற பெண்மணியின் எழுத்துக்கள் என்னுள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இதை என்னுள் இருப்பதைக் கண்டுகொண்டு என் குருநாதர் பேச்சு கொடுத்தார்.
என்ன படிக்கிறாய்? என்ன புரிந்தது? எது உன்னை ஆட்டி படைக்கிறது? என்கிற விதமாகக் கேள்வி கேட்டு, இந்தத் தத்துவத்தில் நான் லயித்திருப்பதைப் புரிந்துக்கொண்டு மேலும் பேச வைத்தார். ஒரு மெழுகுவர்த்தி கூட தன் முதல் சொட்டை வாங்கி தனக்கு அடியில் வைத்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, அதற்குப் பிறகு தான் வெளிச்சத்தைத் தருகிறது. உன் தாய் தியாகத்தோடு உன்னை பெறவில்லை. நீ இல்லாது போனால் அவளுக்கு மரியாதை இல்லை. தான் மலடி என்கிற எண்ணத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, தனக்கு பின்னால் தன்னை நேசிப்பதற்கும், ஆதரிப்பதற்கும் ஆள் வேண்டும் என்பதற்காக உனக்கு பாய்ந்து பாய்ந்து உதவிகள் செய்திருக்கிறார். உன்னை இறுக்கி வைத்திருக்கிறார். அன்பால் பிணைத்துப் போட்டிருக்கிறார். அவருக்கு நீ செய்துதான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உனக்கு அவர் ஏற்படுத்தியிருக்கிறார். இவை மொத்தமும் அவர் தன்னைக் குறித்த அக்கறையால் ஏற்படுத்தப்பட்டவை. உன்னை பிணைத்து போடப்பட்டிருப்பவை. நீயும் அந்தப் பிணைப்பை தாய் பாசம் என்று சொல்லி, தலையில் ஏற்றி எனக்கு உதவிய அன்னைக்கு நான் உதவ வேண்டாமா? என்னை சுமந்த அன்னைக்கு நான் தர வேண்டாமா? என்று வாரி கொடுக்கிறாய். இப்படி பந்தம் என்பது ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு காரணத்துக்காக ஏற்படுகிறது என்றபடி அந்த தத்துவம் விரிந்திருந்தது.
ஆக, உலகம் முழுவதும் சுயநலம் என்பதில்தான் இயங்குகிறது. சுயநலம் அற்று தியாகம், பரோபகாரம் என்கிற வார்த்தைகளெல்லாம் பொய் மிகுந்தவை. அநியாயத்துக்குப் பொய் சொல்பவை, ஏமாற்றுபவை என்றும் அவருடைய தத்துவம் விரிந்திருந்தது. நியாயம்தானே என்று எனக்கும் தோன்றியது .
ரமணருடைய ஆசிரமம் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் நிரந்தரமாக பலபேர் வந்து சேர்ந்து கொண்டார்கள். அவரவருக்கான இருப்பிடங்களும், சமையற்கூடமும் தோன்றிவிட்டது.
ரமணரை சந்திக்க ஒரு ஐரோப்பியர் வந்திருந்தார். ரமணரைப் புரிந்துகொள்ள ஆசைப்பட்டார். அந்த ஆசிரமத்தில் தங்கினார். ஆசிரமத்தில் ஒருவர் அரிசி களைந்து கொண்டிருக்க, இன்னொருவர் காய்கள் நறுக்கிக் கொண்டிருக்க, வேறொருவர் ரமணருடைய துணிகளைத் தோய்த்துக் கொண்டிருக்க, வேறொருவர் சமையற்கூடங்களை, பார்வையாளர் இடங்களை பெருக்கிக் கொண்டிருக்க, இன்னொரு இளைஞர் ஆசிரமத்தில் உள்ள பொருள்களைத் துணியால் தூசு போகத் துடைத்துக்கொண்டிருக்க, வேறொருவர் தோட்டத்தைப் பராமரிக்க, சகலரும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அமைதியான அந்தக் காலை நேரத்தில் ரமணர் ஒரு மரபெஞ்சில் அமர்ந்தபடி தொலைதூரம் வெறுமே பார்த்துக்கொண்டிருந்தார். அசையாது அமைதியாய் அமர்ந்திருந்தார். நேரம் கடந்தது. வேலைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. ரமணர் அசையாது அமர்ந்திருந்தது ஐரோப்பியருக்கு ஆச்சரியமாக இருந்தது. மெல்ல ரமணரை அணுகினார். கை கூப்பினார். ஏதோ கேட்க விரும்புகிறார் என்பது அந்தச் சைகையில் தெரிந்தது. ரமணர் என்ன? என்று தலை அசைத்தார்.
When every others are working why are you idling ? (இங்கு அனைவரும் வேலை செய்து கொண்டிருக்க நீங்கள் மட்டும் ஏன் சும்மா அமர்ந்திருக்கிறீர்) என்று கேட்டார். சிறிது நேரம் அமைதியாக இருந்த ரமணர் மெல்ல தலைதூக்கி There are no others என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னார். மற்றவர் என்று இங்கு யாரும் இல்லை என்று அதற்கு அர்த்தம் தொனித்தது. இங்கு வேலை செய்பவர் அனைவரும் நானே. எனக்கும், அவர்களுக்கும் எந்தப் பிரிவும் இல்லை. நான் என்ற இடத்தை தக்க வைத்துக்கொள்ளவில்லை. நான் இல்லாததால் அந்த இடத்தில் மற்றவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். மற்றவர்கள் நிரம்பியிருப்பதால் நான் அங்கு இல்லை என்கிற அர்த்தம் அதில் தொனித்தது. There are no others. எல்லாமும் நானே என்கிற தத்துவம் அங்கு வெளிப்பட்டது.
குரு சற்று நேரம் பொறுத்து பேசினார். செல்ஃப் என்பது இருந்தால்தான் செலஃப்ஷ்னெஸ். சுயம் என்று இருந்தால்தான் சுயநலம். சுயநலமற்ற ஞானிகள் பலபேர் இந்த பரத கண்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். சுயமற்று இருப்பதுதான் இந்த சனாதன தர்மத்தின், பரத கண்டத்தின் உலக உபதேசம்.
இது என்னுள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எது பேசினாலும், என்ன செய்தாலும் சுயம் பற்றிய தெளிவோடு நான் இருந்தேன். செல்ஃப் என்ன செய்கிறது. செல்ஃப் என்ன பேசுகிறது . சுயம் என்னவிதமாக இயங்குகிறது என்ற உணர்வோடு, துடிப்போடு இருந்தேன். என்னை அறியாமல் செய்வது என்பது முற்றிலும் அழிந்து போயிற்று.
என்னை அறியாமல் கோபித்துக் கொள்வதோ, என்னை அறியாமல் அழுவதோ, என்னை அறியாமல் ஆனந்தப்படுவதோ இல்லாது போயிற்று. அடேய், என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று ஒரு ஆள் உள்ளே கவனிக்கத் தொடங்கிவிட்டான். என்னுடைய உணர்வு மட்டும் இல்லாது, என்னுடைய சொந்த பந்த உறவுகள் மீது காட்டுகின்ற உணர்வுகள் மட்டுமல்லாது என்னுடைய கலை வியக்தியில் அது பெரும் பங்காற்றியது.
இந்தத் தெளிவும், அமைதியும், என்னை நான் இடையறாத அவதானிக்கின்றக் குணமும் ஏற்படுகையில் எழுதுகிற எனக்கே நான் பாடமாகிறேன். என் வாழ்க்கை தெளிவாகிறது.
விழிப்பும், துடிப்பும் இன்னும் அதிகமாயின. தூக்கத்திலும் தெளிவாக இருக்க முடிந்ததால் விழிப்பில் அந்தத் தெளிவு இன்னும் அதிகம் இருந்தது. மிக அற்பமான பொறாமையில் ஈடுபடுவோரைக் கண்டு வியக்க முடிந்தது. என்ன இயக்குகிறது? என்ன பேயின் ஆட்டம் அது என்று கூர்மையாகக் கவனிக்க முடிந்தது. சொன்னால் புரியும் என்றால் சொல்லத் தோன்றியது.சொன்னாலும் புரியாது என்றால் சிரித்து மழுப்ப முடிந்தது.
மனத்தின் கவனிப்பில்லாமல் ஒரு ஆட்டம்கூட நடைபெறவில்லை. மனம் இயங்காதபோது மனம் உள்ளுக்குள்ளே மடிந்து சுருங்கி அமைதியாக இருக்கும்பொழுது இது தொடர்ந்தது. அதற்கு நல்லது, கெட்டது என்ற பாகுபாடே இல்லை. அமைதிதான் அங்கு ஆட்சி செலுத்தியது. அந்த அமைதி ஆட்சி செலுத்துகிறபோது அந்த நேரத்தில் கிளம்பிய மன அதிர்வு உடம்பை, முகத்தை மாற்றியது. சுற்றுச் சூழ்நிலையைச் சிறக்க வைத்தது. சட்டென்று மனத்தில் ஏற்படுகின்ற பாதிப்பைப் புரிந்துக்கொண்டு அவற்றை உடனடியாக நேர் செய்கின்ற நிலைமைக்குப் போயிற்று.
உலகம் பிரம்மாண்டமானது. இந்த வாழ்க்கையின் தொடர்ச்சி உலகத்தைக் காட்டிலும் இன்னும் பிரம்மாண்டமானது. எங்கு ஆரம்பித்தது எங்கு முடியப் போகிறது என்று தெரியாத ஒரு நீள்வட்ட பாதை அது. ஒரு தூசுபோல பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று புரிகிறபோது என்னைச் சுற்றி எப்பொழுதுமே நல்லது நடக்கட்டும். அது எனக்குத் தெரியாது இருக்கட்டும் என்றுதான் சொல்ல முடிகிறது. அது மிகச் சிறந்த, விவேகமான ஒரு சொல், ஒரு செயல்.
ஒவியம் ; ரவி
உடுமலை பதிப்பகத்தில் கிடைக்கிறது…
PRICE: Rs. 310.00
