அந்த முனிவரின் வாழ்க்கையெல்லாம் சரி. ரமணரின் உபதேசமும் சரி. ஆனால் திருமண பந்தத்தில் ஈடுபட்டு, குழந்தைகள் பெற்று பொறுப்புள்ள கணவனாக இருக்கின்ற நான் சுயம் என்பதை எப்படி இழக்க முடியும். ‘There are no others என்று எப்படி சொல்ல முடியும்’ என்ற மிகப் பெரிய கேள்வி படிப்போருக்கு நிச்சயம் எழும். கேள்வி எழத்தான் வேண்டும். கேள்வி எழ எழ கேள்வியின் மையத்தை தரிசனம் செய்ய முடியும்.
எங்கிருந்து கேள்வி எழுகிறது என்பதை கவனிக்க கேள்விகள் எழுந்தால்தான் சுகமாக இருக்கும். நியதிகளை எந்தக் கேள்வியும் அற்று ஒப்புக்கொண்டபிறகு ‘அது அசமந்தமான வாழ்க்கையாகத்தான் இருக்கு. அப்படித்தான் சொல்லியிருக்கு. பெரியவங்க அப்படித்தான் சொல்றாங்க’ என்று தப்பித்துப் போகின்ற மனோபாவனை ஒன்று ஏற்படும். யார் எது சொன்னாலும் எவர் வாய் எது கேட்டாலும் அது பற்றி கேள்வி கேட்டுத்தான் ஆகவேண்டும்.
இந்தக் கேள்வி கேட்பது விவாதத்துக்காக அல்ல. பேசி ஜெயிப்பதற்காக அல்ல. மற்றவருக்கு விளக்குவதற்காகவோ அல்லது தான் மேலும் விளங்கிக் கொள்வதற்காகவோ அல்ல. இன்னொருவர் துணையில்லாமல் தனக்குள்ளேயே தானே அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறபோது உண்மை இன்னும் பிரகாசமாக இருக்கும். நேர்மை இன்னும் திடமாக இருக்கும். அப்படி கேள்வி கேட்டுக்கொள்ளப் பழக வேண்டும். அதே விதமாக இந்தக் கேள்வியை அணுக வேண்டும்.
திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாகி, வயதான பெற்றோரையும் பராமரிக்க வேண்டி, உடன்பிறந்தாரோடு இணக்கமாகப் போக வேண்டி, நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டி, ஏதோ ஒரு கூட்டத்துக்கு நடுவே சொன்ன வேலையைச் செய்து திறமையாக உழைக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்க வேண்டிய நான் சாலையின் இடதுபுறமும் நிதானமாகப் போய் அங்கங்கு ஏற்படுகின்ற வழித் தடங்களின் நியதிகளுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள நான் செல்ஃப் என்பதை எப்படிவிட முடியும். சுயம் என்பதை எப்படி இழக்க முடியும்?

என் மனைவி கண்ணுக்கு இனிமையானவளாக இருக்கிறாள். அவள் நடவடிக்கைகள் சுகம் தருகின்றன. என் குழந்தை எதிர்வீட்டுக் குழந்தையைவிட கெட்டிக்காரியாக இருக்கிறாள். வகுப்பில் முதலாவதாக வருகிறாள். என் பையன் ஆட்டமும் பாட்டமும் சகலரையும் மெய்மறக்கச் செய்கின்றன. அது எனக்கு கர்வம் தருகிறது. என் பிள்ளை என்று இன்னும் இறுக்கிக் கொள்ளத் தோன்றுகிறது. இவற்றைவிட முடியுமா? எப்படி விட? ஏன் விட? என்கிற கேள்விக்குப் பதில் தெரிந்தாக வேண்டும்.
வளர்ச்சி என்பது நிரந்தரமின்மைக்கு எதிரான ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. ‘துறுதுறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்த குழந்தை நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு திசை மாறி கொஞ்சம் அழுக்காக, அமைதி குலைந்தவனாக, ஆரவாரம் மிக்கவனாக மாறிவிடுகிறான். என்ன காரணம் என்றே புரியவில்லை?’ என்று தாய் திகைக்கிறாள். ‘நல்லாதானே இருந்தே? ஏன் கெட்டுக் குட்டிச்சுவராய் போயிட்டே?’ என்று ஏசுகிறாள். இது என்ன வளர்ச்சியா, அல்லது தாழ்த்தியா? இல்லை. இது நிரந்தரமின்மை.
இடையறாது இந்த நிரந்தரமின்மையைப் பற்றி மனத்துக்குள் தேக்கியிருக்க வேண்டியிருக்கிறது. வளர்ச்சியைப் பற்றி பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுதே, இந்த வளர்ச்சி மாறுதலானது. நிரந்தரமின்மைக்கு அழைத்துச் செல்வது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எட்டாவது படித்த மகள் ஒன்பதாவது. பிறகு பள்ளி இறுதி. பிறகு கல்லூரி. பிறகு கல்யாணம். பிறகு குழந்தை பிறப்பு. பிறகு அந்தக் குழந்தையின் எட்டாவது படிப்பு என்கிறபோது எட்டாவது படித்த மகளும், அவள் பாட்டும் பேச்சும் அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்சியதும் எங்கே என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.
சில உறவுகளோடு இது நெருக்கமாகவும், கனமாகவும் இருக்கக்கூடும். ஆனால் காலம் இதையும் கரைக்கும். வயதானால் ஏற்படுகின்ற நினைவுக் குழப்பம், இயல்பான மறதி இந்த விநாடிக்கு விநாடி வாழ்ந்ததைக் காணாமல் போகச் செய்துவிடும். உடல் கூற்றை, இயற்கையை எல்லாவற்றையும் இறுக்கிக்கொள்ளாதே. தளர்த்தி தண்ணீரில் கரைத்து விடு என்பது போல உங்களுக்கு எச்சரிக்கை தரும். வாழ்ந்தது கனவாகத் தான் இருக்கும்.
ஆக, நீங்கள் சுயம் என்று இறுக்கிக் கொள்வது எதை? எந்த விநாடியை? எந்த மணித்துளியை என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகப் போய் விடுகிறது. எல்லாமும் கரைந்து காணாமல் போவதற்குத்தான் என்றால் சுயம் என்பது என்ன? என்ன அர்த்தம் அதற்கு? வளர வளர மாற்றங்கள் ஏற்படுகின்றன.

என் மகளும் எதிர் வீட்டு மகளும் ஒன்றே என்ற பிரமை உண்டாகிறது. அவளுக்குத் திருமணம் என்றதும் அடடா என்று எழுந்து சந்தோஷிக்கிறது. என்ன செலவு? எப்படி சமாளிக்கப் போகிறீர்? எந்த இடம்? யார் ஆண்மகன் என்கிற விசாரிப்பெல்லாம் நூறு சதவிகித அக்கறையோடு வருகிறது. ஏனெனில் அந்தப் பெண்ணும் உங்கள் பெண்ணும் ஒரே பெண் தான். ஒரேவிதமான நேசிப்புதான். ஒரேவிதமான உணர்வுதான். ஆள் மாறுகிறதே தவிர உணர்வு ஒரே விதமாக இருக்கிறது.
அவளைவிட என் மகள் சிறப்பு என்பது அடிபட்டுப் போகிறது. இன்னொருவிதமாகச் சொல்வதென்றால் செல்ஃப் என்பது சுயம் என்பது உறுதியாக இல்லை. பரந்துபட்டு விட்டது.
அவரது மகன் அமெரிக்கா. உங்கள் மகன் ஐரோப்பா. அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி ‘இன்று பொங்கல். என்ன செய்கிறானோ?’ என்ற ஏக்கம் இரண்டு பக்கமுமே ஒரேவிதமானது. அவர் ஏக்கம் நன்கு புரிகிறது. ஏனெனில் என் மகன் மட்டுமே என்கிற சுயம் உறுதியாக இல்லை.
உண்மையா? உறுதியாக இல்லையா? என் மனைவி என்கிற உறுதி எத்தனை வயதானாலும் தளரவில்லையே. என் உடைமை என்பது மாறவில்லையே. எனக்கு மட்டுமே என்பதுதானே உறுதியான கொள்கை. அதுதானே பெருமை. அப்படி அவள் வாழ்வதால் தானே அவள் மீது நேசமும், பாசமும். அதைத்தாண்டி நீங்கள் மாறினாலும் அவள் மாறினாலும் நிலைமை மோசமாகுமல்லவா. வாழ்க்கை குழப்பமாகுமல்லவா. அப்பொழுது செல்ஃப் என்பது எந்த விதத்தில் இயங்குகிறது? சுயம் என்ன செய்கிறது?
‘வீடு கட்டுவோம்’ என்கிற எண்ணம் வருகிற போதே ‘கட்டி முடிக்காமலும் போய்விடுவோம்’ என்ற எண்ணத்தையும் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. அப்படியானால் அவநம்பிக்கை கொண்டதா வாழ்க்கை? இல்லை. நம்பிக்கையோடே அவ நம்பிக்கையும், அவநம்பிக்கையோடே நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இந்த இரட்டை நிலைதான் வாழ்க்கை. இந்த இரண்டு தன்மைகளும் சேர்ந்து ஒருவரிடம் இருப்பதுதான் இயல்பு. மனித வாழ்க்கையின் மிகப் பெரிய அவலம் இதுதான். எந்நேரமும் எது பற்றியும் சந்தேகத்தோடே வாழ்வதுதான். அல்லது எனக்குச் சந்தேகமே இல்லை. கடவுள் என்னைக் காப்பாற்றுகிறார் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருப்பதுதான். அது ஆட்டம் காணும் வரை அது பற்றி சிந்திக்க மறந்திருப்பது தான். மறதி. இது மிகப் பெரிய விஷயம். நல்லவை நினைவில் இருந்து அல்லவை மறந்து போகும்.
இவர்கள் ஒருவகை மனிதர்கள். நல்லவை மறந்து போய் அல்லவை முன்னாடி நிற்கும். இவர்கள் ஒரு வகை மனிதர்கள். வாழ்க்கை துவந்தமயமானது. இரண்டானது. மேல் கீழ்; இடது வலது; சரி, தவறு என்று எப்பொழுதுமே இரண்டாகப் பேசப்படுவது. அதனால்தான் ஏகன் என்பது மறந்துபோ அனேகன் என்கிற எண்ணம் வருகிறது.
அப்போது இந்த உலகம் காலம் காலமாய் சொல்லி வைத்திருக்கின்ற தர்மங்களெல்லாம் என்ன? சிரிப்போடு ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். முற்பகல் செயின் பிற்பகல் விளையும். என்ன விளையும் என்பதுதான் தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று விளைந்து கொண்டேதான் இருக்கிறது. அது விதையா, உமியா என்று தெரியாதுகூட மனிதன் அறுவடை செய்துகொண்டிருக்கிறான்.
மிகப் பெரிய அவநம்பிக்கைதான் வாழ்க்கை. அதுதான் உலகம். ஆனால் அதைத் தாங்கவே முடியவில்லை. பயம் கொல்லுகிறது. அடுத்தபடியான செயலுக்குப் போகவே முடியவில்லை. எல்லாமுமே அபத்தம் என்று ஆகிவிட்டால் இங்கு வாழ்வது என்பது எப்படி என்ற கேள்வி வரும். இப்படி அவநம்பிக்கை கொள்வதற்குப் பதில் நம்பிக்கை கொண்டுவிட்டால் நடக்கப்போவது என்னமோ ஒன்று நடக்கத்தான் போகிறது. அவநம்பிக்கையோடு வருவதை எதிர்கொள்வதற்குப் பதிலாக நம்பிக்கையோடு வருவதை எதிர்கொண்டுவிட்டால் அவநம்பிக்கையும் நம்பிக்கையும் ஒன்றுதானே. ஒரே விஷயம் தானே. வெள்ளையாக இருத்தல், கறுப்பாக இருத்தல் இரண்டு விஷயங்கள். இருத்தல்தானே முக்கியம். வெள்ளையாக இருந்தால் என்ன, கறுப்பாக இருந்தால் என்ன? நம்பிக்கையோடு இருப்போமே என்ற எண்ணம் பலமாக எழும்.
என்ன விதமான நம்பிக்கை? வெற்று நம்பிக்கை. உடனே பதில் கிடைக்கும். வெற்று நம்பிக்கையைக் கொள்வதற்குத்தான் மிகப் பெரிய சாமர்த்தியம் தேவையாக இருக்கிறது. மிகுந்த நம்பிக்கை கொண்டு எதிர்பார்த்தது நடக்காமல் அடிபட்டு சரிவதற்குப் பதில், மிகுந்த அவநம்பிக்கை கொண்டு ஏதோ நடந்து உள்ளுக்குள் புன்னகை பூத்ததற்குப் பதில் ஒரு வெற்று நம்பிக்கை கொண்டுவிட்டால் நடக்கும், நடக்காமலும் போகலாம் என்ற தன்மையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், அடேய் நடக்கவில்லையா? தோல்வியா? சரி. அடுத்தபடி முயற்சிப்போம். இது இரட்டையாக இருப்பதா? இல்லை. வெற்று நம்பிக்கை என்று ஒருமையில் இருப்பது. இரண்டு வித குணங்களோடு அலைவதா? இல்லை. எது நடந்தாலும் நடக்கும். நடக்காமலும் போகும். ஆக, வெற்று நம்பிக்கையோடு இரு.
இன்னும் ஆழமாகப் பகுத்துப் போக முடியாதா? போகலாமே. என்ன? வருவதை எதிர்கொள்ளடா என்பதுதான் அந்தத் தன்மை. உறங்காத மனத்துக்கு இது இல்லை. மனம் விழித்தபடி இருக்கும். எந்த நேரமும் எதுவும் திரும்பும். எதுவும் விளையும் என்கிற எண்ணத்தை மனம் இறுகப் பற்றிக்கொண்டிருந்தால் பதற்றங்கள் நிச்சயம் குறைந்துவிடும். பதற்றமற்றபோது வருவதை எதிர்கொள்ள முடியும். வருவதை எதிர்கொள்கிற தன்மை வரும்போது பதற்றம் இல்லாது இருக்கும்.
‘விஷயத்தின் முடிவை என்னிடம் விட்டுவிடு’ என்பதுதான் எல்லா மதத்தின், எல்லா கடவுள்களின் கடைசி கட்டளையாக இருக்கிறது. ‘எல்லாவற்றையும் விடுத்துவிட்டு. மேலே போய். அங்கு ஒரு விசாரணைக் கூடம் இருக்கிறது. அந்த விசாரணைக் கூடத்தில் நீ விசாரிக்கப்படுவாய். அப்பொழுது நீ என்ன லட்சணம் என்பது புரிந்து விடும்.’
வாழ்வு பூமியிலிருந்து வீழ்ச்சி பெற்றதுமல்லாமல் ஒரு முடிவுக்கும் வரவில்லை. எது சரி, எது தவறு என்று தெரியவில்லை. வாழ்க்கையை இன்னும் தெளிவோடு எதிர்கொள்ள வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? கடவுளை மறுத்துவிட வேண்டும்.ஏனெனில் இந்தக் கடவுள் சிந்தனைதான் மிகக் குழப்பமாக இருக்கிறது. கடவுளை இவர்கள் காட்ட மாட்டேன் என்கிறார்கள். கடவுளும் வரமாட்டேன் என்கிறார். அதே நேரத்தில் கடவுள்தான் வாழ்க்கையினுடைய மையப் புள்ளியாக இருக்கிறது. இல்லாத ஒன்று எப்படி மையப்புள்ளியாக இருக்கும். எனவே, அது இல்லை என்பதை உணர்ந்துகொண்டு அதை உதறிவிடு.
மையப் புள்ளியாக, வாழ்க்கையின் அடிநாதமாக வேறொன்று கொள். என்ன அது? தொழிலாளர் சர்வாதிகாரம். யார் உழைக்கிறாரோ அவர்தான் உண்ண வேண்டும். யார் உழைக்கவில்லையோ அவர்கள் பின்னுக்கு நிற்க வேண்டும். கடுமையாக உழைப்பவர், உழைப்பதற்குக் காலையிலிருந்து போய்கிறவர், மாலையில் கடுமையாக உழைத்துவிட்டு அயற்சியோடு வருபவர். அவர்தான் இங்கு தலைமை. அவரால்தான் இவ்வுலகம். உழுகிறவனும், இரும்புப் பட்டையைச் சரி செய்கிறவனும், நிலக்கரி அள்ளுகிறவனும், நெருப்பில் நின்று தாமிரம் உருக்குபவனும், பூமியைக் குடைந்து வெள்ளியும் தங்கமும் தோண்டுபவனும், மரத்தை வெட்டுகிறவனும், மரத்தினால் சாமான்கள் செய்பவரும் என்று பல்வேறு வேலைகள் அடுக்கப்பட்டன. ஆனால் இந்த வேலையாட்களை நேர் படுத்த ஒரு குழு உண்டாயிற்று. அந்தக் குழு வெள்ளைச் சட்டையும், வெள்ளை பேன்ட்டுமாய் குளுமையான அறையில் உட்கார்ந்து கொண்டது.
ஒரு ஆள் ஒரு நாளைக்கு ஒரு டன் மரம் அறுக்க வேண்டுமென்றால் பத்தாயிரம் டன் மரம் அறுக்க என்ன என்பதை அவர்கள் கணக்குப் போட்டார்கள். கொண்டுபோய் மரம் அறுப்பவர்களிடம் காட்டினார்கள். அவர்கள் வாழ்வுமுறை வேறுவிதமாக இருந்தது. மரம் குறைவாக அறுத்தால் நாடு முன்னேறாது.
யார், யாரைப் பற்றித் தீர்மானிப்பது என்ற கேள்வி வந்தது. அந்த இடமும் தடுமாறிற்று. ஆமாம் அய்யா, தடுமாறத்தான் செய்யும். மரம் அறுப்பவரா முக்கியம். மரம் அறுப்பதைத் திட்டமிடல் முக்கியம்.
இவ்வளவு மரம் வேண்டும், இன்ன காரணத்துக்காக. இந்த வேலை செய்ய வேண்டும், இந்தக் காரணத்துக்காக. இத்தனை உழ வேண்டும், இந்தக் காரணத்துக்காக என்று கணக்குப் போடுகிறதே, அங்குதான் வாழ்க்கை தொடங்குகிறது. அங்குதான் செயல் ஊக்கம் பிறக்கிறது. அதன் விளைவுதான் நல்ல செயலாக வருகிறது.
எனவே, இதைத் தீர்மானம் செய்வது யார்? யார் இதைச் சொல்கிறாரோ அவரே இதை வாங்கி யாருக்குத் தரவேண்டுமோ அவருக்குத் தந்தால் இது ஒரு நல்ல வட்டமாக இருக்காதா? இருக்கும், இருக்கும். அதற்கு என்னவென்று பெயர்? வணிகம் என்று பெயர்.
எனவே, வணிகரின் முதுகில் உலகத்தைச் செலுத்து. அந்த வணிகர்களிடமிருந்து வணிகருக்கு ஒரு கூட்டம் உருவாயிற்று. அவர்களுக்கு அரசியல்வாதிகள் என்று பெயர்.
நமக்குக் கடவுள் இல்லை. நம்மை நாமே ஆட்சி செய்கிறோம். நம்மை நாமே மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதில் தவறுகள் நடக்க வாய்ப்பு இருப்பினும் நாம் இந்த முறையைத்தான் கையாள வேண்டும். அரசியலும், வணிகமும் கைகோர்த்து உலகத்தை நடத்த வேண்டும். இதில் கடவுள் என்கிற தன்மை தேவையில்லை. இருப்பினும் மக்கள் அதை முக்கியமாகக் கருதுவதால் அதற்கு ஒரு சிறிய இடம் கொடுத்து ஒரு மரியாதை கொடுத்து, ஒரு ஓரமாக வைத்துவிடுவோம். ஆனால் நடப்பது நம்முடைய திறமையால் நடக்கப்படவேண்டும். நாம் கடவுளையும் வளர்ப்போம் என்று சொன்னார்கள். வாழ்க்கை பெரும் குழப்பமாய் போயிற்று.
இஸங்கள் பேசும் நாத்திகம் மனிதரை எங்கும் அழைத்துப் போகவில்லை. தடுமாறிற்று.
ஒவியம் ; ரவி
உடுமலை பதிப்பகத்தில் கிடைக்கிறது…
PRICE: Rs. 310.00
