Quantcast
Channel: Book Review – Balhanuman's Blog
Viewing all articles
Browse latest Browse all 178

நூல் அறிமுகம்: நான் இராமானுசன் -சுஜாதா தேசிகன்

$
0
0

நண்பர் ஆமருவி தேவநாதன் எழுதிய ’நான் இராமானுசன்’ என்ற புத்தகம் பற்றி தொடர்ந்து இரண்டு வரி முகநூல் டீசர் மூலம் புத்தகம் எதைப்பற்றியது என்று ஒருவாறு தெரிந்தாலும் அதை படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்துக்கொண்டே இருந்தது. உடையவர் திருநட்சத்திரம் அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு வாங்கி சில நாள் முன் தான் படித்து முடிக்க முடிந்தது.

பிரமம் என்ன ? அதை எப்படி அணுக வேண்டும் என்ற கேள்விகள் பல நூற்றாண்டுகளாக இருந்துக்கொண்டே இருக்கிறது. ஆதிசங்கரர் தொடங்கி இராமானுசர் வரை அதை எப்படி அணுக வேண்டும் என்று தர்க்க ரீதியான காரணங்களையும் (logical reasoning) கொண்டு ஆராய்ந்துள்ளார்கள்.

பிரம்ம சூத்திரத்தில், சூத்திரம் ஒன்றாக இருந்தாலும், இருவரும் எழுதிய உரையில் வேறுபாடுகள் இருக்கிறது. இதுவே அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்ற சித்தாந்தமாக இன்றும் நிலவிவருகிறது. ’இதுவே உண்மையான பகுத்தறிவு.

நான் இராமானுசன்’, என்ற புத்தகத்தில் உடையவரே இந்த தத்துவங்களுக்கு விளக்கங்கள் அளிப்பது மாதிரி எழுதியிருக்கிறார் ஆமருவி தேவநாதன். பாராட்டுக்கள். “இராமானுசனும், உறங்காவில்லியும் ஒன்று. உறங்காவில்லியும் அவர் மனைவியும் ஒன்று. நாயும் தேங்காயும் ஒன்று. இதுவே நமது சித்தாந்தம்” என்கிறார். அதாவது உள்ளே இருக்கும் ஆத்மா ஒன்று!” மேலும் அசித்தான பானைக்கு கூட மோட்சம் என்று பல விஷயங்களை இந்த புத்தகத்தில் இராமானுசரே கூறுவது போல புனைவுப்படுத்தி சொல்லியுள்ளார். இந்த கருத்துக்கள் எளியோரை சுலபமாக சென்றடையும். பிரமம், ஆத்மா என்று குழம்பிக்கொண்டு இருக்கும் இளைய தலைமுறைக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் முதல் படியாக விளங்கும்.

இந்த புத்தகத்தை கொண்டு மேலெழுந்த வாரியாக இதைப் புரிந்துகொண்டாலும் ஆழ்ந்த கருத்துக்களை தத்வவிவேகம் (reduced absurdum) கொண்டு ஸ்ரீபிள்ளைலோகாசார்யர் போன்ற பெரியோர்கள் எழுதியதைக்கொண்டு அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதே என் ஆசை. ஆத்மா ஜீவாத்மா பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கம் அளித்திருக்கலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்.

எம்பெருமானார் தரிசனம் என்று போற்றப்படும் விசிஷ்டாத்வைதத்தில் சித்(அத்மா) அசித்(ஜடப்பொருள்) ஈஸ்வரன்(பெருமாள்) என்ற மூன்று தத்துவங்களே உள்ளன என்று நிர்ணயம் செய்யப்படுகிறது. ’காஞ்சி தேவபெருமாள் திருகச்சிநம்பிகள் மூலம் நமக்கு அருளிய ஆறு வார்த்தைகளில் ஒன்று ‘பேதமே தரிசனம்’ என்பது. அதாவது ’வேறுபாடே உண்மை’ என்பதாகும். வேத உபநிஷத வாக்கியங்கள் என்று ஸ்ரீபாஷ்யத்தில் மூலம் அறிகிறோம்.

மூன்று தத்துவங்களிடையே உள்ள வித்தியாசங்களை விளக்கும்போது, ஒரு ஆத்மாவுக்கும், மற்றொரு ஆத்மாவுக்கும் ஆத்ம பேதம் உள்ள வேறுபாடும் விளக்கப்படுகிறது. புரிந்துகொள்வது கஷ்டம். அடிப்படையில் எல்லா ஜீவாத்மாவும் ஒன்று என்றாலும் ஜீவர்கள் உயிரோடு இருக்கும் போது ஆத்மா வேறுபட்ட அனுபவங்களை பெறுகிறது. நெருப்பு ஒன்றானாலும், விளக்கின் நெருப்பு, காட்டுத் தீயின் நெருப்பு எப்படி வித்தியாசப்படுகிறதோ அதே போல ஜீவாத்மா வேறுபடுகிறது.

ஒரு முறை உடையவருடைய காலக்ஷேபத்தில் இந்த கேள்வி எழுந்தது. அதற்கு நம்மாழ்வாரை தான் துணைக்கு அழைத்தார்!

திருவாய்மொழி ( 8-8-2 ) கொண்டு விளக்கம் அளித்தார் உடையவர்.

அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்

இதில் வரும் “அடியேன் உள்ளான்” என்ற சொல்லில் உள்ள ஒருமைச் சொல் ஜீவர்களிடயே உள்ள பேதத்தைக் காட்டுகிறது. ’அண்டத்தான் அகத்தான்’ என்று வரும் அடுத்த வரி இந்த ஜீவ – ஜீவ பேதக் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது. அடியேனுக்கு மட்டுமல்லாமல் அண்டத்தின் மற்ற ஜீவர்களுக்கும் கூட அந்தர்யாமியாய் உள்ளே இருக்கிறான் பரமாத்மா என்று பொருள் கூற வேண்டும். உடல் உள்ளான் என்று அதற்கு முன் வரும் வரியில் அசித்துப் பொருள்கள் எல்லாவற்றிலும் பரமாத்மா இருக்கிறான் என்று சொல்லிவிட்டார். அண்டகத்துக்கு வெளியேயும் அவன் தான் உள்ளான் என்பதை ‘புறத்துள்ளான்’ என்கிறார் ஆழ்வார். In a nut shell – இந்த இரண்டு வரியில் ஜீவ பர பேதமும், ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் என்ற மிக கடினமான கருத்தை எளிமையாக சொல்லிவிட்டார் ‘நம்மாழ்வார்’.

அத்வைதம், ஜைனம், பௌத்தம் முதலிய சமயங்கள் பற்றியும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

இராமானுஜ நூற்றந்தாதி ( 99) பாசுரத்தில்

தற்க சமணரும் சாக்கிய பேய்களும் தாழ் சடையோன்
சொல் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும்
நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள் நிலத்தே
பொன் கற்பகம் எம் ராமானுச முனி போந்த பின்னே .
என்கிறார் அமுதனார்.

அதாவது தர்க்கம் பண்ணுகிற சமணர்களும், பேய்போல பிடித்த பிடி விடாது நிற்கிற பௌத்தர்களும், ருத்ரனுடைய சொல்லாகிய சைவமத்தைக் கற்ற தாமஸ சைவர்களும் சூனியம் என்று பேசும் சூனியவாதியர்களும் நான்கு வேதங்களையும் கற்றும் அவற்றுக்குச் சேராத அபத்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளும் ஒழிந்தார்கள். எப்போது என்றால் சிறந்த கற்பகமரம் போலே நம் ராமானுச முனி விசாலமான இப்பூமியிலே அவதரித்த பின்பு என்று இவ்வளவு ஆணித்தரமாக அமுதனார் போல சொல்லவில்லை என்றாலும் நான் இராமானுசன் புத்தகத்தில் ஆமருவி கொஞ்சம் மென்மையாகவே சொல்லுகிறார்.

தமக்கு பிறகு வரப்போகும் தென்கலை, வடகலை பற்றியும் கடைசியில் கோடிட்டுக்காட்டுவது கொஞ்சம் நெருடலாகவே தெரிகிறது வேறுவிதமாக யோசித்து எழுதியிருக்கலாம் என்பது என் எண்ணம். சாதாரண மக்கள் தத்துவத் தேடல் இல்லாமையால் வெளித்தோற்றங்களில் மயங்கி நமது தத்துவத்தைத் தவறாகப் புரிந்துகொள்வர் என்னும் போது அது இராமானுசன் சொல்லாமல் ஆமருவி சொல்லுவது போல உள்ளது. ஆனால் படிக்க சுவாரஸியமாகவே இருக்கிறது.

ஒரு ஸ்ரீவைஷ்ணவன் எப்படி இருக்க வெண்டும் என்று சொல்லும் பகுதியில் கொக்கு போல, கோழி போல, உப்பு போல என்று பகுதி முன்பே தெரிந்திருந்தாலும் மீண்டும் படிக்க ஆனந்தமாகவே இருக்கிறது. இது அனந்தாழ்வான் சொன்னது என்று புத்தகத்தில் ஒரு வரி இருந்திருக்கலாம். அவரும் இரமானுசர் காலத்தில் வாழ்ந்தவர் என்ற தகுதியில்

’உண்ண வேண்டிய பழம்’ என்ற பகுதியில் சரணாகதி தத்துவத்தை கீதையின் மூலம் விளக்குகிறார். அங்கே ராமாயணத்தையும் பற்றியும் ஒரு குறிப்பு வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். திருமலையில், திருமலை நம்பியின் திருமாளிகையில் இருந்து ஸ்ரீராமாயணத்தை நம்பியிடம் பயின்றார் இராமானுசர். அதே போல இந்த பகுதியில் இராமானுசன் சாதாரண மக்களுக்கும் மோட்சம் போவதற்கு என்ன வழி என்று யோசித்து ‘பிரபத்தி’ என்னும் வழிமுறையை உருவாக்கினேன் என்கிறார். இது தவறு, நமது பூர்வாச்சாரியர்கள் வகுத்த வழியை இவர் அடுத்த நிலைக்கு கொண்டு சென்றார் என்பது தான் உண்மை. ”நான் தான் செய்தேன்” என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். எல்லாம் ஆசாரியன் என்பது தான் அடிப்படை.

‘கோயிலில் நடந்தது’ என்ற பகுதியில் ‘பதின்மர் பாடும் பெருமாளாகிய’ நம் திருவரங்கம் முன்பு வைகாசன ஆகமத்திலிருந்து பாஞ்சராத்ரம் மாறியது என்று எழுதியிருக்கிறார் ஆசிரியர். ஸ்ரீரங்கம் கோயில் பாஞ்சராத்ர ஆகமத்தில் தான் இருந்தது. இடைப்பட்ட காலத்தில் வைகாசன முறைக்கு மாறியது, பிறகு பாஞ்சராத்ரம் முறைக்கு மீண்டும் மாறியது என்று படித்திருக்கிறேன்.


அதே பகுதியில் எளிய மக்கள் கோவிலுள் வர வேண்டும் என்று இராமானுசர் பாஞ்சராத்ரம் முறைக்கு மாற்றினார் என்று கூறுவதும் தவறு என்று நினைக்கிறேன். ஆமருவி ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் போன்ற பெரியவர்களிடம் சரிபார்த்துக்கொள்ளலாம். ( ஸ்ரீபெரும்புதூர் உடையவர் மூர்த்தி வைகாசன முறையில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டது!. )

யார் பிராமணன் ? என்ற பகுதியை மீண்டும் ஒருமுறை ஒழுங்காக படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதில் பல விஷயங்களை சுலபமாக தந்திருக்கிறார் ஆமருவி..

உடையவர் 120 வயது எந்த உபாதையும் இல்லாமல் வாழ்ந்தார். ஸ்ரீவைஷ்ணவர்களின் மூன்று ரகசியங்கள் என்ற பகுதியில் உடையவர் “கொஞ்சம் வார்த்தை சொன்னாலே மூச்சு வாங்குகிறது” என்கிறார். இது கொஞ்சம் நெருடலாகவே தெரிகிறது.

”நாளை வேறு ஒரு தத்துவம் வரும். அது மிலேச்ச தத்துவம் தற்போது பாரசீகம் தாண்டி வலிமை வாய்ந்த குதிரைகளில் வந்து நமது கோயில்களைக் கொள்ளை இடுகின்றனரே இந்த மிலேச்சர்கள் இன்னொரு பரிணாமவாதிகள் அவர்கள் அவர்களது கொள்கைப்படி அவர்களது சித்தாந்தம் மாறாதது, அதனுடன் வாதிட முடியாது. வாதிடுவது தவறு. தெய்வக்குற்றம். வாதிடுவோர் அழிக்கப்படுவர். “என் தெய்வமே உயர்ந்தது; என் தெய்வத்தையே வணங்க வேண்டும்; என் ஸ்வாமியை நீவீர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நீவீர் உயிர்வாழ உரிமை இல்லை” என்று சொல்லுகிறார். இந்த பகுதி நேற்று நடந்த அமெரிக்க அமெரிக்க துப்பாக்கிச்சூட்டைத்தான் தான் நினைவுப்படுத்துகிறது!.

புத்தக அட்டைப்படம் மிக அருமையாகவும், உள்ளே வடிவமைப்பு படிக்க கூடிய பெரிய எழுத்தில், விலை வெறும் 60/=. பதிப்பகம் விஜயபாரதம். நிச்சயம் வாங்கிப் படியுங்கள்.

-சுஜாதா தேசிகன்

புத்தகத்தின் பெயர்: நான் இராமனுசன்
ஆசிரியர் : ஆமருவி தேவநாதன்
விலை : ரூ 60/- மட்டும்
பதிப்பாளர் : விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை – 600031 தொலைபேசி: 044 28362271.

Desikan Narayanan's Profile PhotoAmaruvi Devanathan's Profile Photo



Viewing all articles
Browse latest Browse all 178

Trending Articles