
திருவண்ணாமலை மகான் ரமண மகரிஷியைப் பற்றி எத்தனையோ சுவையான ஆன்மிக அனுபவங்கள். இப்போது பா.சு. ரமணன் தொகுத்து வழங்குகிறார்.
பிராமண சுவாமியாகவும், இன்னும் பலவாறாகவும் இருந்தவரை உலகை ரமிக்க வந்த ‘ரமணர்’ என்று அடையாளம் காட்டியவர் சத்தியமங்கலம் வேங்கடராம அய்யர் என்பவர். பகவான் விரூபாக்ஷி குகையில் இருந்தபோது நான்கு நாட்கள் அவரோடு தங்கியிருந்து ஒரு நாளைக்கு ஒரு கும்மிப் பாடல் வீதம் நான்கு பாடல்களைப் பாடினாராம். ஐந்தாவது பாடலை ஊர் போய்ச்சேர்ந்து தபாலில் அனுப்பியிருக்கிறார். பிறகு அவரைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லையாம். ‘ரமண ஸ்துதி பஞ்சகம்’ என்பதே இவை.
விலங்குகளிடமும் அளவற்ற பிரியம் உடையவர் பகவான். ஒரு சமயம் குரங்கு ஒன்று தன்னுடைய குட்டிகளுடன் பகவான் இருந்த அறைக்குள் நுழைய முயன்ற போது அங்கிருந்தவர்கள் அதை விரட்டியடிக்க முயன்றார்கள். நீங்கள் உங்கள் குழந்தையை என்னிடம் கொண்டுவந்து காட்ட வரும்போது யாராவது தடுத்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்? அது மாதிரிதானே இந்தக் குரங்கும்? இது மட்டும் தம் குட்டிகளைக் கொண்டுவந்து காட்டக்கூடாதா?” என்று அவர்களைக் கண்டித்தாராம் ரமணர்.
பகவானின் பரம பக்தையான சூரி நாகம்மாள் என்பவர் ஒரு சமயம் கட்டிலில் அமர்ந்திருந்த பகவானை வணங்கி அவரைச் சுற்றிவரத் தொடங்கினார். அதைக் கவனித்த பகவான் சரிதான்!. நீயும் சுத்த ஆரம்பிச்சுட்டையா? ஒருவர் சுத்த ஆரம்பிச்சா அதைப் பார்த்து எல்லாரும் அப்படியே ஆரம்பித்து விடுகிறார்கள். இதனாலெல்லாம் என்ன பயன்? உண்மையான பிரதட்சிணம் ஆத்ம பிரதட்சிணம்தான். நாம் ஆன்மா. நமக்குள் எண்ணற்ற கோணங்கள் சுழல்கின்றன என்பதைப் புரிந்து அறிவதுதான் உண்மைப் பிரதட்சிணம்” என்றாராம்.
மலையேறிவர முடியாத பக்தை சௌபாக்கியத்தம்மாளுக்காகக் குன்றின் அடிவாரத்துப் பாறையில் போய் அமர்ந்து கொட்டும் மழையானாலும், பனியானாலும் காத்திருந்து அருள் பாலித்த கருணை, ‘ராஜ ஸர்ப்பம்’ என்று தம்மைப் புகழ்ந்துரைத்த ஸ்ரீ நாராயண குருவின் இறுதிக் காலத்தில் தம்முடைய நான்கு சீடர்களை அவருக்கு உதவியாக அனுப்பித் தொண்டுசெய்தது போன்ற பல சுவையான செய்திகள். ஆனந்த மயமான ரமண தரிசனம் தருகிற அழகான நூல்.
ரமணர் ஆயிரம், பா.சு. ரமணன், சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, சென்னை, 600004, விலை Rs.125. தொ.பே. 044 – 4220 9191
–நன்றி கல்கி
இந்தப் புத்தகம் பற்றி அரவிந்த் சுவாமிநாதன் கூறுகிறார்…
இது கேள்வி – பதில் தொகுப்பல்ல. அவரது வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு. அதில் கேள்வி – பதில்களும் அடக்கம்.
இதற்கு முகப்போவியம் வரைந்திருப்பவர் நண்பர் மணியம் செல்வன்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!
