ஒரு ஜென் துறவி காட்டு வழியே போய்க்கொண்டிருந்தார். இரவு. நல்ல குளிர். வழியில் தென்பட்ட ஒரு பவுத்த மடாலயத்தில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்டு, படுத்தார். நள்ளிரவு குளிர் தாங்கவில்லை. மடாலயத்தில் இருந்த மரத்தாலான சில புத்தர் சிலைகளை எடுத்துக் கொளுத்திப் போட்டுக் குளிர் காயத் தொடங்கி விட்டார்.
அந்த மடத்தில் இருந்த துறவிகளுக்கெல்லாம் கோபம் வந்துவிட்டது. இதென்ன அக்கிரமம் ? நீயெல்லாம் ஒரு பவுத்தத் துறவியா ? புத்தர் சிலையை எரித்தா குளிர் காய்வாய் ?
போட்டுக் குதறிவிட்டார்கள் அந்தத் துறவியை.
அவர் சொன்னார்: “எனக்குள்ளே இருக்கும் புத்தருக்கு ரொம்பக் குளிர் வந்துவிட்டது. அதனால் இந்தக் கட்டைகளை எரித்து அவருக்கு வெப்பம் கொடுத்தேன். உங்கள் புத்தர் இந்த மரக்கட்டையில்தான் இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது!”
இறைவனோடு இரண்டறக் கலத்தல் என்பதை இதனைக் காட்டிலும் அழகாக வேறெப்படிச் சொல்ல முடியும் ? இதைத்தான் அகம் பிரம்மாஸ்மி என்று அத்வைதமும் சொல்கிறது.
இளையராஜாவின் இறைவன் இசையாக இருக்கிறபடியால் அவர் அதனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார். விளைவு, இசையின் உன்னதம்!
இப்போது நீங்கள் பதில் சொல்லவேண்டிய கேள்வி: உங்களுடைய இறைவன் யார் ? நீங்கள் அவனோடு இரண்டறக் கலக்க இதுவரை என்ன முயற்சி எடுத்திருக்கிறீர்கள் ? எத்தனைக் காலம் தவம் செய்திருக்கிறீர்கள் ?
இந்த இடத்தில இன்னொரு ரகசியத்தையும் சொல்லிவிடுகிறேன். உன்னதத்தை நோக்கிய பயணத்தில் ஆரம்பம்தான் பேஜார். வலிகளும் வேதனைகளும் சரிவுகளும் வீழ்ச்சிகளும் தோல்விகளும் அவமானங்களும் முதலில் கொஞ்ச காலத்துக்குத்தான்.
ஒரு முறை அந்த உயரத்தைத் தொட்டு விட்டீர்களென்றால் பிறகு கீழே விழ மாட்டீர்கள். அதாவது, நீங்கள் அடைந்த உன்னத நிலை உங்களை அத்தனை சுலபத்தில் கீழே விழ வைக்காது.
ஏனென்றால் முன்பே சொன்னது போல் உன்னதம் என்பது ஒரு மனப்பயிற்சி. ஒரு மாணவன் வருடம் முழுக்கத் தன கணக்குப் பாடங்களை தினமும் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து, தவறுகளைக் களைந்து, பலப்பல மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்த்து, ஃபார்முலாக்களை உருப்போட்டு, புத்தி முழுவதும் கணக்காகவே ஆகிவிடுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இறுதித் தேர்வில் அவனால் ஃபெயில் ஆக முடியுமா ? அவன் கணக்கைக் காதலிக்கவே தொடங்கி விடுவான். வேண்டுமானால் நூற்றுக்கு நூறு வாங்குவதற்கு பதில் தொண்ணூற்றொன்பது வாங்கலாம். கவனக் குறைவாக ஏதாவது அரைப் பிழை, கால் பிழை செய்யலாம். தோற்க மாட்டான் அல்லவா ?
அதுதான். அவ்வளவேதான். உன்னதத்தை நோக்கிய பயிற்சிகள்தான் கஷ்டமே தவிர, அடைந்துவிட்டால் அதன்பிறகு விழுவது அத்தனை சுலபமல்ல! தோற்றே தீர வேண்டும் என்று திட்டமிட்டுத் தோற்றால்தான் உண்டு.
உன்னதமானவற்றை மட்டுமே நாம் முயற்சி செய்வதன் மூலம் குறைந்தபட்சம் நல்லவற்றையாவது நம்மால் பெற அல்லது தரமுடியும். ஒரு “சுமார்” சரக்கை நாம் உத்தேசிக்கும்போது நிச்சயம் மோசமான ஒன்றைத்தான் நம்மால் உற்பத்தி செய்ய முடியும். எனவே உன்னதங்களை நேசிப்போம். உன்னதங்களைக் கனவு காண்போம். அந்த உயர்ந்த நிலையை அடைவதற்கான வழிகளை நமக்கு நாமே உருவாக்குவோம். நம்புங்கள். இது முடியாததல்ல. எப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. எதிலும் உன்னதம் என்கிற மகத்தான நிலையை அடைவதற்கு இந்தப் பயிற்சி உங்களைத் தயார் படுத்தும். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் மிகச் சிறந்த நிலையை, மிகப் பெரிய வெற்றியை, மிக உன்னதமான புகழை, பெயரை, கௌரவத்தை, பெருமையை, நிரந்தரமான நல்லதொரு தடத்தைப் பதிப்பதற்கான வழிகளை இந்தப் புத்தகம் முன் வைக்கிறது. சரியான விளைவுகளுக்கான வழிகளைச் சொல்லுவதல்ல இதன் நோக்கம். சிறப்பான விளைவுகளைத் தருவது மட்டுமே குறி.
