தலைப்பைப் பார்த்தவுடன் “பெருமாள் தானே விஸ்வரூபம் எடுத்ததாகப் படித்திருக்கிறோம், முருகன் எப்போது எடுத்தார், ஒருவேளை சூரசம்ஹாரம் பற்றிய பதிவோ” என யாரும் ஐயுற வேண்டாம். இது பெருமாளைப் பற்றிய பதிவல்ல. வழக்கமாக பாலஹனுமானில் இடம்பெறும் கடவுளைக் குறித்த வியாசங்களுமல்ல. இரா.முருகன் அவர்கள் எழுதிய ”விஸ்வரூபம்” எனும் பிரமாண்ட நாவல் பற்றிய கருத்துரையே இது.
தனக்கென ஒரு தனிப்பாணியில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும், கட்டுரைகளையும் இலக்கிய உலகுக்குத் தந்திருப்பவர் இரா. முருகன். வித்தியாசமான சொல்லாடல்களாலும், கதைப்பின்னல்களாலும், மொழி நடையாலும், நகைச்சுவையாலும் ”சின்ன வாத்தியார்” என்று அழைக்கப்படுபவர். (வாத்தியார் = சுஜாதா என்பது நான் சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரிந்திருக்கும்). முருகனது எழுத்தாளுமையின் முழுத்திறனுடனும் வெளிப்பட்ட நாவல் என்று “அரசூர் வம்சம்” நாவலைச் சொல்லலாம். ”மாந்த்ரீக யதார்த்தம்” என்பதைக் கையில் எடுத்துக் கொண்டு அநாயாசமாக அதில் புகுந்து விளையாடியிருப்பார். தமிழில் அப்படிப்பட்ட நாவல்களை எழுதுவதென்பது எளிதல்ல. எளிதில் சோர்வடைந்து போகக் கூடிய வாசகனை சுவாரஸ்யம் குன்றாமல் படைப்போடு பிணைத்து வைப்பது மிக முக்கியம். தனது மொழியாளுமையால் அதில் வெற்றி பெற்ற படைப்பாளியான இரா. முருகன் அடுத்து எய்திருக்கும் பிரம்மாஸ்திரம் தான் விஸ்வரூபம்.
பெயருக்கேற்றார் போல் உண்மையில் ”விஸ்வரூபம்” எடுத்து நிற்கிறது இந்த நாவல். (கூடவே இரா. முருகனும் தான்) 790 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலை, “ மிகப் பெரிய கான்வாஸில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய ஆச்சரியம்” என்கிறது கவர்ச்சியான முன்னட்டை. அது நிச்சயம் மிகையல்ல. நான்கைந்து பக்கங்கள் எழுதுவதற்குள்ளேயே இங்கே விரல்களும், மூளையும் களைத்து விடுகின்றன. 780 பக்கங்களில் ஒரு நாவல் – அதுவும் குழப்பமோ, அலுப்போ எதுவுமே நேராத ஒரு நாவல் – படைப்பது என்பது சாதாரண விஷயமில்லை. அரசூர் வம்சத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் விஸ்வரூபத்தை அரசூர் வம்சத்தைப் படிக்காமலேயே படித்தாலும் புரியும் என்பது முருகனின் குழப்பமில்லா நடைக்கு ஒரு சான்று. நான் கவனித்த வரையில் கிட்டத்தட்ட 8 மொழிநடைகள் (அதற்கு மேலும் இருக்கலாம்) இந்த நாவலில் இருக்கின்றன. இந்தியா, லண்டன், மொரீஷியஸ் என்று பயணக்கும் இந்த நாவலில் சென்னை, திருக்கழுக்குன்றம், புதுச்சேரி, குருவாயூர், அரசூர், மங்கலாபுரம் (மங்களூர்), எடின்பரோ, என்று எத்தனை ஊர்கள்… எத்தனை மொழிகள், கலாசாரச் சூழல்கள்…!!! ஐம்பதிற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் வந்து போகிறார்கள். ஆனால் படிக்கும் போது ஒரு குழப்பமும் நேரவில்லை. எப்படி என்று சற்று மலைப்பாகத் தான் இருக்கிறது. இதுவே இப்படி என்றால் இந்த எடிட் செய்யாத வடிவம் நிச்சயம் ஆயிரம் பக்கங்கள் கொண்டதாவது இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட பல்லாண்டு கால உழைப்பு இதில் இருக்கிறது. நிச்சயம் அசுர உழைப்புதான். அசுர எழுத்துதான்.
மேஜிகல் ரியலிசம் என்பது தற்கால வாசகர்கள் பலருக்கு புதிதாகத் தோன்றினாலும் அது காலம் காலமாக நம்முடன் இருப்பதுதான். உரைநடை என்று எடுத்துக் கொண்டால், ஆயிரத்தோரு இரவு கதைகள், பட்டி-விக்கிரமாதித்தன் கதைகள் என பலவற்றிலும் இருப்பதுதான். இலக்கிய வகையில் பார்த்தால் ”சிலப்பதிகாரம்” மேஜிகல் ரியலிசத்திற்கு சிறந்ததொரு உதாரணம். பாசண்ட சாத்தன் குழந்தையாக வருவது முதல் கோவலன் மற்றும் கண்ணகியின் தாயினது ஆவிகள், கண்ணகி போன்றோர் ஆலயக் கால்கோள் விழாவில் சேரனுடனும், இளங்கோவடிகளுடனும் பேசுவதும் ஒருவிதத்தில் ”மாந்த்ரீக யதார்த்தம்”தான். தேவந்தி, மாதரி, கோவலன் மற்றும் கண்ணகியின் தாய் போன்றோரின் ஆவிகள் மூன்று சிறுமிகளின் மீது ஆக்கிரமித்தலை சிலம்பில் நாம் காண்கிறோம். கண்ணகியே இளங்கோவடிகளுக்கு ஆவியுருவில் காட்சி தந்தாள் என்றும் ஆசி கூறி வாழ்த்தினாள் என்றும் இளங்கோவடிகளே நூலின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார். சிலம்பில் மட்டுமல்லாது மணிமேகலை, முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி போன்ற தமிழின் பண்டை இலக்கியங்கள் பலவற்றிலும் “இயற்கைப் பிறழ்ந்த நிகழ்வுகள்” பேசப்பட்டிருக்கின்றன. அந்த இயற்கைப் பிறழ்ந்த நிகழ்வுகளே நவீன இலக்கியத்தில் ”மாந்த்ரீக யதார்த்தம்” என்று சொல்லப்படுகிறது.
அந்த வகையில் ஒரு மாந்த்ரீக யதார்த்த நாவல் விஸ்வரூபம். ஆனால் இதனை மாந்த்ரீக யதார்த்த நாவல் என்று மட்டும் சொலவதை விட அதி புனைவு (hyper fiction) என்று சொல்லலாம் என்றே நான் நினைக்கிறேன். படிக்க ஆரம்பித்த பின் முடிக்காமல் வைக்க முடியாது என்று சொல்வார்கள். அதற்கு இந்த நாவல் ஓர் உதாரணம். காலத்தை முன்னும் பின்னும் பயணிக்கும் கால இயந்திரத்தில் தானும் ஏறி கூடவே நம்மையும் ஏற்றிக் கொண்டு பயணிக்கிறார் இரா.முருகன். என்ன ஒரு சுவாரஸ்யமான பயணம் அது. சற்றேனும் அலுக்காத பயணமும் கூட. நாவலின் கிண்டலும் கேலியுமான நடை நம்மை ஈர்க்கிறது. ஆங்காங்கே புன்னகையை வரவழைக்கிறது.
ஏப்ரல் 12, 1899ல் ஆரம்பிக்கும் இந்த நாவல் பல ஆண்டுகளைக் கடந்து 1939 பிப்ரவரி ஆறில் முடிகிறது. அதுவும் எந்த அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலில் ஆரம்பிக்கிறதோ அங்கேயே. ஆரம்பித்தும் முடித்தும் வைப்பவன் நடேசன். ஆனால் அவன் இந்தக் கதையின் நாயகன் அல்ல. இந்தக் கதையின் நாயகன் என்று தனியாக யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுதான். ஆனால், அப்படியும் சொல்ல முடியாது. ஒருவர் இருக்கிறார். அவர் தான் இந்தக் கதையின் நாயகன், வில்லன், நகைச்சுவைக் கதாபாத்திரம், குணச்சித்திர வேடம் எல்லாம். அவர் யார் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.
(தொடரும்)
தொடர்புடைய பதிவு:
இரா.முருகனின் ‘அரசூர் வம்சம்’
இரா.முருகன் — ஓர் எளிய அறிமுகம்
இந்தக் கட்டுரையாளர் அரவிந்த் சுவாமிநாதன் பற்றி ஓர் சிறிய அறிமுகம்…
அமெரிக்காவிலிருந்து வெளி வரும் தென்றல் மாத இதழின் Associate Editor திரு. அரவிந்த் சுவாமிநாதன் (ரமணர் ஆயிரம் மூலம் நமது வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான் இவர்.
