நாவலில் நாயகன் மட்டுமல்ல; நாயகி என்று ஒருவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவள் தெரிசா. வேதமேறிய ஜான் கிட்டாவய்யன் – சிநேகாம்பாளின் புத்திரி. தெரிசாவின் நினைவலைகளாக வரும் பகுதிகள் படிக்க மிக சுவாரஸ்யமானவை. நாவலுக்குள் நம்மை அப்படியே இழுத்துக் கொள்பவை. அந்தக் கால பிராமண பாக்ஷையை மட்டுமல்ல; அந்தக் காலச் சென்னையையும் கண் முன் கொண்டு வந்திருக்கிறார் இரா.மு. அத்தியாயங்களை படிக்கப் படிக்க சுவாரஸ்யம் இம்மியளவும் குறைவதில்லை. விதம் விதமான கதாபாத்திரங்களுக்கும் குறைவில்லை. சாமா என்கிற சாமிநாதன், சங்கரன், கொட்டக்குடி தாசி, சுப்பம்மாள், கிட்டாவய்யன், ஜமீந்தார் (மகாராஜா), ஜமீந்தாரிணி (மகாராணி), ராஜாவைத் திட்டி வெறுப்பேற்றும் மாமனார் புஸ்தி மீசைக் கிழவன், பனியன் சகோதரர்கள், கண்ட இடத்தில் பெய்து வைக்கும் வயசன் என்று விதவிதமான கதாப்பாத்திரங்கள் அரசூர் வம்சத்தில் வந்து செல்வார்கள். விஸ்வரூபத்திலும் அவர்களில் சிலர் தொடர்கிறார்கள். குறிப்பாக ராஜா, ராணி, வேதத்தில் ஏறின ஜான் கிட்டாவய்யன், மருதையன், பகவதி போன்றோர். ஆனாலும் அரசூர் வம்சத்தைப் படிக்காமல் இதைப் படித்தாலும் புரிந்து கொள்வதில் ஏதும் குழப்பமிருக்காது என்பது இரா.முருகனது எழுத்தின் பலம். அதேசமயம் இந்த நாவலின் களமும், நடையும், கனமும், புரிபடாதவர்களுக்கு, இந்த வகை எழுத்திற்குப் புதிய வாசகர்களுக்கு மிகப்பெரிய மலைப்பை ஏற்படுத்தி விடும் என்பதும் உண்மை.
நாவலின் கதாநாயகன், வில்லன், நகைச்சுவைப் பாத்திரம், குணச் சித்திர வேடம் என்று முன்பு சொன்னேன் அல்லவா? அது வேறு யாரும் அல்ல; மகாலிங்கய்யன் எனும் கதாபாத்திரம் தான். ஆந்திர தாசியோடும், ரெட்டிக் கன்னிகையோடும், இன்ன பிறரோடும் அவன் அடிக்கும் கூத்துக்கள், வரதராஜ ரெட்டியாய் மாறி செய்யும் செயல்கள், கப்பலில் மொரீஷியஸ் போய் பாக்ஷை தெரியாத ஊரில் நாயகனாய் போடும் ஆட்டங்கள், பின் சொத்தை எல்லாம் கள்ளக் காதலியிடம் இழந்து, மனைவி லோலாவால் விரட்டி அடிக்கப்பட்டு மாறுவேடம் பூண்டு அலைந்து திரிவது, பிணத்தின் கையில் உள்ள ரொட்டித் துண்டுக்கு ஆலாய்ப் பறப்பது, பின் ஜெயிலுக்குப் போவது, விடுதலையாவது, சென்னைக்கு வருவது என காதல், சோகம், வீரம், நகைச்சுவை என எல்லாம் கலந்த கதாபாத்திரம் இந்த மகாலிங்கய்யன். சில சமயம் இந்த மகாலிங்கய்யன் சினிமா கதாநாயகன் போல் மாறுவேடம் எல்லாம் போட்டுச் சுற்றுகிறான். காதலிகளுடன் சல்லாபம் செய்கிறான். சளைக்காமல், அலுக்காமல் விதம் விதமாய் காமம் துய்க்கிறான். கடைசியில் கப்பலில் கேப்டனுக்கு ‘மூத்திரத் துணி’ தோய்க்கிறான்.
விஸ்வரூபம்” நாவலின் கடைசியில் நம்மைச் சற்றே சோகத்தில் ஆழ்த்தினாலும் நாவலின் உண்மையான ஹீரோ இந்த மகாலிங்கய்யன் தான். அடேயப்பா, அவன் தான் எத்தனை எத்தனை கடிதங்கள் எழுதுகிறான். மனைவிக்குப் போய்ச் சேருமோ, சேராதோ என்ற சந்தேகம் இருந்தாலும் கடிதம் எழுதுவதில் ஒன்றும் குறைச்சலில்லை. அவனுக்கு முன்னால் அவ்வப்போது எதிர்ப்பட்டு குடைச்சல் கொடுக்கும் அம்பலப்புழை மகாதேவனின் ஆவி உருவம் வேறு அவனுக்கு பொறுக்க முடியாத துன்பத்தைத் தருகிறது. அதனையும் சகித்துக் கொண்டு ஸ்த்ரீ சம்போகம் சுகிக்க அவன் அலைவதைப் பார்க்கும் போது… மனித மனதின் விசித்திரங்கள் புலனாகின்றன. கடைசியில் மைலாப்பூரில் தான் சம்பாதித்துச் சேர்த்தை எல்லாம் இழந்து தான் வீழ்ந்த வீட்டின் வாசலிலேயே அவன் மரித்துக் கிடப்பதைப் பார்க்கும்போது, இத்தனையும் இதற்குத் தானா என்று தோன்றுகிறது.
அட மனித வாழ்வின் விசித்திரமே அது தானே! ஆனால் அது ஆரம்பத்தில் புரிந்து விடுகிறதா என்ன? (இருந்தாலும் மகாலிங்கய்யனை நீங்கள் சாகடித்திருக்கக் கூடாது முருகன் சார்!, மனசுக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு)
நாவலின் மிக நேர்த்தியான, முழுமையான பாத்திரப் படைப்பு இந்த மகாலிங்கய்யன். அவன் எழுதிய கடிதங்களை மட்டும் தொகுத்து தனி நூலாக்கினாலேயே அது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும் என எண்ணுகிறேன். பிஹெச்டி, எம்பில் செய்வோருக்கு மிகச் சரியான நூல் “விஸ்வரூபம்.” இதன் பாத்திரப்படைப்புகள் பற்றி, மேஜிக்கல் ரியலிசம் பற்றி, நாவலின் பன்முகத் தன்மை பற்றி என பல தளங்களில் ஆய்வு செய்யலாம்.
மனித மனம் – அதுவும் ஆணின் மனம் சுற்றிச் சுற்றி காம விசாரணையையே செய்து கொண்டிருக்கும் என்ற ஒரு உளவியல் கூற்றிற்கேற்ப நாவலில் ஒரு சிலர் தவிர காமம் பற்றிப் பேசாத ஆண்களே இல்லை எனலாம். அது நீலகண்ட அய்யரோ, அவன் ஃப்ரெண்ட் நாயுடுவோ, மலையாளத்து மனிதர்களோ எப்படி, எதைப் பேசினாலும் சுற்றிச் சுற்றி அங்கேதான் வந்து முடிக்கின்றனர். நல்ல வேளை எல்லா ஆண்களும் இப்படி இல்லை என்பது கொஞ்சம் நிம்மதியைத் தருகிறது.
நாவலின் விதம் விதமான மொழிநடைக்கும், சுவாரஸ்யமான உரையாடல்களுக்கும், சம்பவங்களுக்கும் சில உதாரணங்கள்:
”என் சகோதரனும் ஏற்கெனவே பிரஸ்தாபிக்கப்பட்டவனுமான நீலகண்டய்யன் மதராஸ் கலாசாலை ஏற்படுத்திய பி.ஏ.பரீட்சை கொடுத்து எம் தகப்பனார் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கியாதியோடு வகித்து வந்த நாவிகேஷன் கிளார்க் உத்தியோகத்தில் அமர்ந்து தற்போது நொங்கம்பாக்கத்திலேயே நூதன கிரஹம் ஏற்படுத்திக் கொண்டு பெண்டாட்டி, குழந்தைகள் சகிதம் சுகஜீவனம் செய்கிறான்.” – 1904ல் மகாலிங்கய்யன் சர்க்காருக்கு எழுதிய கடிதத்தில்…
***
”நேரம் உச்சை கழிந்து ஒரு மணீக்கூராவது ஆகியிருக்குமடா. நீ புனர்பாகமாக வடித்த அன்னம் கொஞ்சம்போல் கழிக்கிறயா? கோழிமுட்டைபோல் திடமான பெலத்தைத் தரும் வஸ்து வேணுமென்றாலும் ஆக்கித்தர காளன் வந்து பரம்பிலே காத்திருக்கான். தாரா முட்டையும் கொண்டு வரச் சொல்லியிருக்கேன்” – ஜான் கிட்டாவய்யன்.
***
“ஜாதியையும் வேதத்தையும் என் வயிறும் மனசும் பார்க்கறதில்லை மாமா. குரிசோ, பூணூலோ இருந்தாலும் அல்லாது போனாலும் எனக்கு ஒருபோலத்தான். என்னமோ ஒண்ணு என்னை வேதமண்ணாவை அண்டி இருக்கச் சொல்லி நச்சரித்துத் துரத்திக் கொண்டிருக்கு. இங்கே திண்ணையில் ஒதுங்கிக் கொண்டு மேலே என்ன காரியம் செய்யச் சொல்லி எல்பித்தாலும் சடுதியில் செய்து முடிக்கறேன்” – துர்கா பட்டன்.
***
விடுதிக்காரன் தெரிசாவிடம் மரியாதை விலகாமல் ஒரு அட்டையை நீட்டினான். இங்கிலாந்தில் தொட்டதற்கெல்லாம் மரியாதை பார்ப்பதைவிட காலே வீசம் அதிகம் ஸ்காட்லாந்தில் இந்த விஷயத்தில் அக்கறை செலுத்துகிறார்கள் என்று தெரிசாவுக்குத் தோன்றியது. ”அதிவிநயம் தூர்த்த லட்சணம் என்று இல்லையோ அம்மா சிநேகாம்பாள் சொன்னது” - எடின்பர்க் பயணத்தின் போது தெரிசா
***
”மெனோபாஸ். அதிலே ஏது ஓய் ஆம்பளைச் சமாச்சாரம்? இருந்தா சரிதான். நடேசன், கோணகத்தை ஸ்வப்னத்துல நனைச்சுக்கறது நிறுத்திட்டீரா? நம்மாலே அதொண்ணும் முடியலங்காணும்” – ஓர் மலையாளத்து ஆசாமி.
***
நீலகண்டய்யனின் மனைவி கற்பகம் : உங்க ஆபிசுல பத்து பாத்திரம் தேய்க்க பெண்கள் இருக்காளா என்ன?
நீலகண்டய்யன் : உண்டே. நாந்தான் தேடிப் போய் மடியில உக்காத்தி வச்சுத் தேய்க்கணும்.
***
நீலகண்ட அய்யன் : மேனகா ரிலீஸ் பண்ணச் சொல்ல ஞாபக இருக்கா?
நாயுடு : மேனகாவை எப்படி மறக்க முடியும்? உருண்டு திரண்ட தோளோடு அதே ராஜலட்சுமி. கூடவே ஒரு புதுப்பையன். உடம்பு முழுக்க முத்தம் கொடுத்துக்கிட்டே மூஞ்சிக்கு வருவானேப்பா அந்த நாகர்கோவில் பையன். ஷண்முகமோ ஆறுமுகமோ பேர்.”
நீலகண்ட அய்யன் : அம்புலுவுக்கும் ராஜலட்சுமிபோல் தோளெல்லாம் இருக்குமா?
***
”அய்யங்காரு வந்தாலும் வந்தாரு. மரம் ஏர்றவங்க அல்லாரும் குடும்பம் குடும்பமா தெருவுக்கு வந்துட்டாங்கப்பா. கள்ளை எத்தினி நாளைக்கு நிறுத்தி வக்க முடியும் சொல்லு. ஒரு மரத்துக் கள்ளு மாதா கையால ஊட்டுற கஞ்சித்தண்ணி மாதிரி. ராஜகோபால ஆச்சாரிகள் ஒரு தபா குடிச்சா விடுவாரா அய்யரே?” – நாயுடு
***
பைராகிகள் சேர்ந்து பாடுகிறார்கள். சேர்ந்து ஓடுகிறார்கள். பாடிக் கொண்டே ஓடுகிறார்கள்.
பாட்டுக்கு நடுவே சொல்லி வைத்தது போல் சேர்ந்து நிறுத்தி இரும்பு உலக்கைகளால் அவரவர்கள் மாரிலும் தொடையிலும் ஓங்கி அறைந்து கொள்கிறார்கள். – காசியில் ஒரு காட்சி.
***
அவள் கங்கைப் பிரவாகத்தில் நுழைந்தாள். ஆமைகளோ எரியும் உடல்களோ அவசரப்படுத்தும் புரோகிதர்களோ பைராகிகளோ இல்லாத பெருவெளியாக விரிகிற நீர்ப்பரப்பு. தான் தொடும் எதையும் எவரையும் கறை களைவித்து தூய்மையாக்கி நிறுத்தி ஓடும் நதி. மனதிலும் உடலிலும் எல்லா அழுக்கையும் கங்கையின் பிரவாகம் கழுவிக் களையட்டும்.
மனமும்தான் எதற்கு? உடலும்தான் எதற்கு? எதுவும் வேண்டாமே? நீ ரெண்டுமில்லையே? – பகவதி கங்கையில் இறங்கும் முன் அவளது நினைவலைகள்.
***
காசியில், கங்கை நதியில் ஸ்தாலிச் செம்போடு பகவதி இறங்கும் போது நாமும் அல்லவா இறங்கி விடுகிறோம்!!. துர்காபட்டனையும் பரசுவையும் படிக்கும் போது எனக்கு ஏனோ ’பசித்த மானுடம்’ கணேசனும் ஜமீந்தாரும் நினைவுக்கு வந்தார்கள். அங்கேயும் ஹோமோ செக்ஸ். இங்கேயும்…
நாவலில் படித்த நியாயமார்கள் ஒய்ஜா போர்டு வைத்து ஆவிகளுடன் பேசுகிறார்கள். ஆவிகள் நடமாடும் இடங்களுக்கு சுற்றுலாச் செல்கிறார்கள். நம்மூரில் கோயில்களைச் சுற்றி ’நல்லவர்கள்’ அசிங்கம் செய்து வைப்பது போல லண்டனில் சர்ச் வாசலிலேயே போதை வயசன்கள் பரிசுத்த நீர் மழை பெய்விக்கிறார்கள்.
அரசூர் வம்சத்தின் இறுதி அத்தியாயத்தில் வரப் போகும் நாவலுக்குக் கொக்கி போட்டு சில சம்பவங்களைச் சொல்லி முடித்திருப்பார் இரா. முருகன். ஆனால் விஸ்வரூபத்தில் அப்படி இல்லை. எல்லாம் முழுமையாக இருக்கின்றன. இதன் அடுத்த பாகம் (அச்சுதம் கேசவம்) எப்படி இருக்கும் என்ற ஆவலை இப்போதே தூண்டி விட்டார் முருகன்.
நாவலில் குறைகள் என்று பார்த்தால் பெரிதாக எதுவும் இல்லை. நாவலின் பிற்பகுதியில் தாமஸ் மெக்கன்ஸி, பீட்டர் மெக்கன்ஸி ஆகி விட்டார். ஆனால் இது ஒன்றும் பெரிய பிழை என்று சொல்ல முடியாது. அது போல ஸ்காட்லாண்ட் பயனியர் பத்திரிகையில் வந்த விஷயங்களை நாம் தமிழில் – அதுவும் அந்தக் காலத் தமிழில் – படிப்பது ஏனோ கொஞ்சம் ஒட்டாதது போல் தோன்றுகிறது. ஆனால் அதிலும் சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லை.
நாவலில் சிருங்கார ரசம் மிக மிக அதிகம். அதுவும் இந்த மகாலிங்கய்யன் அடிக்கும் கூத்து இருக்கிறதே அப்பப்பா… மஹாராஜா தோற்றார். ”கம்ப ரசம்” எழுதியது போல் யாரும் “முருக ரசம்” எழுதாமல் இருக்க வேண்டும்.
அழகான ஓவியம். மிக நேர்த்தியான, அச்சு. மொத்தத்தில் விஸ்வரூபம், ஒரு சுவாரஸ்யமான அனுபவம். இது வெறும் மாஜிகல் ரியலிச நாவல் மட்டும் அல்ல; ஒரு வாழ்க்கை. ஜஸ்ட் வாழ்ந்துதான் பாருங்களேன்!
நாவலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
https://www.nhm.in/shop/Kizhakku/ மற்றும் http://www.dialforbooks.in/ மூலம் புத்தகத்தை வாங்கலாம்.
ஹேட்ஸ் ஆஃப் முருகன். ஜமாய்ச்சுட்டீங்க.
***
தொடர்புடைய பதிவு:
இரா.முருகனின் ‘அரசூர் வம்சம்’
இரா.முருகன் — ஓர் எளிய அறிமுகம்
இந்தக் கட்டுரையாளர் அரவிந்த் சுவாமிநாதன் பற்றி ஓர் சிறிய அறிமுகம்…
அமெரிக்காவிலிருந்து வெளி வரும் தென்றல் மாத இதழின் Associate Editor திரு. அரவிந்த் சுவாமிநாதன் (ரமணர் ஆயிரம் மூலம் நமது வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான் இவர்.
