நரேந்திர மோடி, குஜராத்தில் அப்படி என்னதான் செய்திருக்கிறார்? மற்ற மாநிலங்களைப் போலவே குஜராத்திலும் மின்சாரத் திருட்டு, மின் கட்டண பாக்கி போன்றவை நடைமுறையில் இருந்தன. இதற்காகத் தனியாகக் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 500 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான திருட்டு இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டன.
நர்மதை நதியை 17 வறண்ட ஆறுகளுடன் இணைத்து அவை அனைத்தையும் ஜீவநதி ஆக்கியுள்ளார். இவற்றின்மூலம் பொட்டல் காடான 7 மாவட்டங்கள் செழிப்படைந்துள்ளன. 332 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாயம் விசாலமாகியுள்ளது.
உலகின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தின் அவசியத்தைப் புரிந்து கொண்ட மோடி, இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து குஜராத்தின் சந்து பொந்துகளில் எல்லாம், இளைஞர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளித்தார். இதன்மூலம் கிராமத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு எளிதாகியது.
அங்கு ஒவ்வொரு மாதமும் நான்காவது வியாழக்கிழமை, காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை குறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
புகாருக்கான தீர்வுகள் முடிந்தவரை அன்றைய தினமே தீர்வு காணப்படுகிறது. இப்படியாக தொலை நோக்குப் பார்வை, நேர்மை, செய்நேர்த்தி என திட்டமிட்டுச் செயல்பட்டதன் மூலம் குஜராத்தை ஒளிரச் செய்திருக்கிறார் என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது.
மோடியின் குஜராத் : இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி, ஆசிரியர்: சரவணன் தங்கத்துரை, கிழக்கு பதிப்பக வெளியீடு, விலை: ரூ.100/- போன்: 4286 8126
–நன்றி கல்கி
மோடி அளவுக்கு வேறு எந்த அரசியல்வாதிக்கும் இந்தியா முழுதும் எதிர்ப்பு இருந்ததில்லை. ஆனால் அதே அளவுக்கு குஜராத்தில் மோடிக்கு ஆதரவு உள்ளது. இதற்குக் காரணம் என்ன?
குஜராத்தில் நரேந்திர மோடி கொண்டுவந்திருக்கும் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள்தான் காரணம் என்று எடுத்துக்காட்டுகளுடன் சொல்கிறார் நூலாசிரியர் சரவணன்.
அனைத்து அரசியல்வாதிகளும் ‘மின்சாரம், சாலைகள், குடிநீர்’ என்பதை அரசியல் கோஷங்களாக மட்டுமே வைத்துள்ள நிலையில் அதனைக் கடந்த பத்தாண்டுகளில் மிகச் சிறப்பாகத் தன் மாநிலம் முழுதும் செயல்படுத்தியுள்ள ஒரே முதல்வர் மோடி மட்டுமே என்று தைரியமாகச் செல்லமுடியும்.
இந்தியா எப்போதும் பின்தங்கிய நிலையிலேயேதான் இருக்கவேண்டுமா, நம் நாட்டுக்கு விடிவு காலம் எப்போது வரும் என்று மனம் வெதும்பிப்போயிருக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் இப்போது மோடியின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.
குஜராத்தில் ஒவ்வொரு துறை-யிலும் கடந்த பத்தாண்டுகளில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அவற்றால் மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது, நிர்வாகம் எந்த அளவுக்கு மக்கள் நலத்தை முன்வைத்து இயங்குகிறது, வளர்ச்சி எப்படி அடித்தட்டு மக்கள் வரை அடைந்துள்ளது என்று பலவற்றையும் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம்.
இந்தத் திட்டங்களும், மோடி போலவே, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஒரு முன்மாதிரி.
