
![[Copy+of+Amudhavan.jpg]](http://balhanuman.files.wordpress.com/2011/07/copy2bof2bamudhavan.jpg?w=600)
மறைந்த எழுத்தாளர் சுஜாதா தமிழ் எழுத்தாளர்களில் பன்முகம் கொண்டவர். இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய அவரது சிந்தனையும் எழுத்தும் அடுத்த நூற்றாண்டைத் தொட்டுப்பார்ப்பதாக இருந்ததுதான் நிறையப்பேர் வியக்கவும் விரும்பவும் காரணமாக இருந்தது. தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கு அவருடைய பங்கு எத்தகையது என்பது ஆய்வுக்குரிய விஷயம்.
-
தமிழில் விஞ்ஞானத்தை சுஜாதா அளவுக்கு எளிமையாகவும் அழகாகவும் வேறு யாருமே எழுதியதில்லை. விஞ்ஞானத்தைக் கட்டுரைகள் வாயிலாக மட்டுமல்லாமல் கதைகளிலும் புகுத்தி தமிழில் விஞ்ஞானக் கதைகளைப் பிரபலமாக்கியவரே அவர்தான். இந்த ஒன்றுக்காகவே தமிழ் நல்லுலகம் அவரை என்றென்றைக்கும் கொண்டாட வேண்டும்.
-
புதுடெல்லியிலிருந்து 1969 அல்லது 1970-ல் பெங்களூரில் குடியேறியதிலிருந்து 1993-ல் குமுதம் ஆசிரியராகப் பணியேற்று சென்னைக்குச் செல்லும் நாள்வரை அவர் பெங்களூர்வாசியாகத்தான் இருந்தார்.
-
அவர் மிகப்பெரிய எழுத்தாளராகவும் பிரமுகராகவும் உயர்ந்த வேளையில் அவரது வேர்கள் பெங்களூரில்தான் பதிந்திருந்தன. அந்த நாட்களில் அவருடன் எழுத்து, இலக்கியம், பத்திரிகை, சினிமா சார்பாகப் பேசிப் பழக பெங்களூரில் அவருக்குக் கிடைத்த ஒரே நபர் நான் மட்டும்தான்!
-
அந்த நாட்களின் படிப்படியான அவரது வளர்ச்சியை, மகிழ்ச்சியை, சில பொழுதுகளில் அவருக்கு ஏற்பட்ட வருத்தங்களை என்னுடன் மனம்விட்டுப் பரிமாறிக் கொண்டிருக்கிறார். அந்த நாட்களில் எல்லாம் நான் அவருடன் இருந்திருக்கிறேன் என்பது எனக்குக் கிடைத்த மிக அரிய வாய்ப்பு.
-
ஏறக்குறைய இருபத்தி மூன்று ஆண்டுகள் அவருடன் நெருக்கமாகவும் அவர் சென்னை சென்றபிறகும் கடைசிவரையிலும் தொடர்பு விட்டுவிடாமலும் பழகிய அந்த ஈர நினைவுகளை அந்த அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்திருக்கிறேன்.
-
நடிகர் கமலும் சுஜாதாவும் முதன்முதலாக சந்தித்த அனுபவத்தை ஏற்கெனவே என்னுடைய இந்த வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அந்த ஒரு கட்டுரைக்கே மிகுந்த வரவேற்பிருந்தது. சுஜாதா வாசகர்களும் கமல் ரசிகர்களுமாக மிகவும் ரசித்த அந்தக் கட்டுரையின்போதே சுஜாதாவின் நினைவலைகளை முழுவதும் புத்தகமாக எழுதப் போவதாகச் சொல்லியிருந்தேன். அதைப் படித்ததிலிருந்தே நிறைய இணைய நண்பர்கள் சுஜாதா பற்றிய புத்தகம் எப்போது வரப்போகிறது? எழுதிவிட்டீர்களா, எழுத ஆரம்பித்துவிட்டீர்களா என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
-
சுஜாதாவுக்கும் எனக்கும் இருந்த நட்பு பற்றி அறிந்த பெங்களூர் நண்பர்களும் சுஜாதா பற்றிய புத்தகம் எப்போது வரும் என்று கேட்டபடியே இருந்தனர்.
-
இதோ வந்துவிட்டது. விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.
-
‘சுஜாதா என்ற பெயர் தமிழ் வாசகர்கள் மறக்க முடியாதது. அகில உலகிலும் பரவி நிற்பது. தான் சுஜாதாவுடன் பழகிய நாட்களிலிருந்து சில நினைவு அலைகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூல் ஆசிரியர் அமுதவன்.
-
சுஜாதா மேடைப் பேச்சுக்குக் கூச்சப்பட்டது, இருந்தாலும் மேடைப்பேச்சில் தனக்கே உரிய கிண்டலைப் புகுத்தியது, ஏதோ கற்பனையில் உதித்ததை மாத்திரமே எழுதி விடாமல் க்ரைம் நாவலுக்காக மெனக்கெட்டு விஷயங்களைச் சேகரித்து அதைப் பாந்தமாகப் பொருந்தும் விதத்தில் புகுத்துவது………………………………………………..
-
சினிமாவில் சுஜாதா ஈடுபட்டதைப் பற்றி தமிழ் வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும் ஒரு படத்தில் அவர் நடித்தது அவரை நடிக்கவைக்க இவர்கள் அவரிடம் சொல்லாமலேயே கூட்டி வந்தது; ஒரு திரைப்படத்தை டைரக்ட் செய்யச்சொல்லி அவர் மேல் நம்பிக்கை வைத்து ஒரு தயாரிப்பாளர் அவரை வற்புறுத்தியது ஆகியவை வாசகர்கள் அறியாதவை. இந்தப் புது விஷயங்கள் வாசகர்களுக்கு விருந்து’ என்று முன்னுரையில் சொல்கிறார் விகடன் ஆசிரியர்.
-
இந்தப் புத்தகத்தை முடித்ததும் முதலில் படிக்கக்கொடுத்தது திருமதி சுஜாதா அவர்களிடம். “அப்படியே ஒரு முன்னுரையும் எழுதித் தந்துவிடுங்கள்” என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டோம். முழுவதும் படித்துப் பார்த்து “இந்த நூலில் என்னைப்பற்றியும் எழுதியிருக்கீங்க. என்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் நூலுக்கு நானே முன்னுரையும் தருவது நன்றாயிருக்காது” என்று சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார் திருமதி சுஜாதா. நூலை முழுவதுமாகப் படித்துப் பார்த்து ஒப்புதல் தந்த திருமதி சுஜாதா அவர்களுக்கு நன்றி.
-
பிரபல ஓவியர் மணியம் செல்வன் அவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது ‘சுஜாதா பற்றிய புத்தகம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னேன்.
-
“அப்படியா நான் கூட அவருடைய ஓவியம் ஒன்றை வரைஞ்சு வச்சிருக்கேன். அவரிடமே தரலாம்னு வரைஞ்சது. அதுக்கான சந்தர்ப்பமே அமையாமல் போய்விட்டது. அதுக்குள்ள மறைஞ்சிட்டார். இன்னமும் எந்தப் பத்திரிகைக்கும் அதைத் தரலை. பத்திரமா நானே வைச்சிருக்கேன். அவங்க துணைவியாரிடம் தரலாம்னு இருக்கேன்” என்றார்.
-
இந்த புத்தகம் முடிந்ததும் விகடனிடம் சேர்ப்பிக்கும்போது திரு மணியம் செல்வன் சொன்னதை விகடன் பிரசுரத்தின் முதன்மை உதவி ஆசிரியர் திரு அன்பழகனிடம் சொன்னேன். “அப்படியா இதுவரையிலும் பிரசுரமாகாத படம் அவரிடம் இருக்கா? அப்படின்னா அதையே வாங்கி அட்டைப்படமாப் போட்டுடலாம்” என்றார் அன்பழகன். சொன்னபடியே அந்த அழகிய ஓவியம்தான் முகப்புப் பக்கமாய் ஜொலிக்கிறது.
-
இந்த நூலில் எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது. சுஜாதா பத்திரிகை ஆசிரியர்களைப் பற்றிப் பேசும்போது குறிப்பாக மூன்றுபேரைத்தான் எந்த நாளும் குறிப்பிட்டுப் பேசுவார். ஒருவர் குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி, அடுத்தவர் விகடனின் முன்னாள் ஆசிரியரும் சேர்மனுமான எஸ்.பாலசுப்பிரமணியம், அடுத்தவர் ஆசிரியர் சாவி. இவர்களில் விகடன் முன்னாள் ஆசிரியர் திரு எஸ்.பாலசுப்பிரமணியத்தைப் பற்றிய தகவல்களை எழுதியபோது நிறையவே தயக்கம் இருந்து.
-
இவற்றை எல்லாமே அடித்துவிடுவார்கள்; எப்படியும் பிரசுரிக்கப்போவதில்லை எடிட் செய்துவிடுவார்கள் என்று நினைத்துத்தான் எழுதினேன். காரணம், நீண்ட நாட்களுக்கு விகடனில் அப்படியான நிலைமைதான் இருந்தது. நடிகர் சிவகுமாரே பல பேட்டிகளில், கட்டுரைகளில் திரு பாலன் அவர்களைப்பற்றிச் சொன்னதை அவர்கள் வெளியிட மறுத்துவிட்டார்கள். விகடன் நிறுவனர் எஸ்எஸ் வாசன் அவர்களைப் பற்றியும் திரு பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றியும் எந்தப் பாராட்டுக் குறிப்புகளும், புகழுரைகளும் வராமல் பார்த்துக்கொண்டார்கள். அதனால் இந்த நூலிலும் அதுதான் நடக்கப்போகிறது என்றுதான் நினைத்திருந்தேன். நல்லவேளையாக அப்படியெல்லாம் நிகழாமல் திரு பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றி சுஜாதா சொன்னதெல்லாம் வெட்டப்படாமல் வந்திருக்கிறது.
-
அந்த வகையில் எனக்கு இன்னமும் ஆச்சரியம்தான்.
-
சுஜாதா எழுதியதை நிறையப் படித்திருப்பீர்கள். சுஜாதாவைப் பற்றி இதில் படித்துப்பாருங்கள்.
-
விகடன் பிரசுரம் என்பதால் எல்லா புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.
![[Copy+of+Amudhavan.jpg]](http://balhanuman.files.wordpress.com/2011/07/copy2bof2bamudhavan.jpg?w=600)
