தென்னிந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டுக்காரர்களை மயக்கும் அம்சங்களில் இட்லியும் ஒன்று. என்ன மாயமோ தெரியவில்லை. தென்னிந்தியா தாண்டி வேறு எங்கேயும் இட்லியை இட்லியாக அவித்தெடுக்க முடியவில்லை. மல்லிப்பூ பதமும், வடிவமும், சுவையும் நம் மண்ணுக்கே உரித்தான கைப்பக்குவம்.
சகதிமணம் மாறாத தானியங்கள், தட்பவெப்பம், தண்ணீர், ருசி என இதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் ஏகப்பட்ட வரவேற்பு இருப்பதால் இட்லியை அவித்து, பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியுமா என்று பல கோடி ரூபாய் செலவில் தஞ்சாவூரில் உள்ள மத்திய அரசு உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள். சாத்தியமானால் ஊருக்கு ஊர் இட்லி தொழிற்சாலைகள் முளைத்து விடும்.
இட்லி விஷயத்தில் நம்மைவிட கர்நாடக மக்கள் ஏகப்பட்ட பரீட்சார்த்த
முயற்சிகளைச் செய்து பார்த்திருக்கிறார்கள். இலை இட்லி, பனையோலை இட்லி, கப் இட்லி என விதவிதமான இட்லிகள் அங்கே கிடைக்கின்றன. ரவா இட்லியும் அப்படியான ஒரு பரீட்சார்த்த முயற்சிதான்.
பெங்களூரு நகரில், லால்பாக் பூங்கா அருகில் உள்ள மாவெல்லி டிஃ பன் ரூம், மல்லேஸ்வரத்தில் உள்ள ஹல்லி மனே, பசவனக்குடி, புல் (Bull) டெம்பிள் சாலையில் உள்ள ஹல்லி திண்டி, இதே பகுதியில் உள்ள சௌத் திண்டி போன்ற பாரம்பரிய உணவகங்களில் இதை ருசிக்கலாம். கேரட்டும், கொத்தமல்லியும் மேலே வண்ணக்கோலமிட, பஞ்சுப்பொதி போல குவிந்திருக்கும் ரவா இட்லியை பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. தனியாகவே சாப்பிடலாம் போலிருக்கிறது.
ரவா இட்லியை அறிமுகப்படுத்தியது ‘மாவெல்லி டிஃபன் ரூம்’ தானாம். இந்த உணவகம் 1924-ல் தொடங்கப்பட்டதாம். கர்நாடகத்தின் மிகப் பழமையான உணவகம் இதுதான். இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் நாடெங்கும் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கக் கோதுமையை தூளாக்கி, அரிசிக்குப் பதில் அந்த ரவையைக் கொண்டு இட்லி அவித்து விற்பனை செய்துள்ளார்கள். இப்படித்தான் ரவை இட்லி பிறந்துள்ளது. சுவை வித்தியாசமாக இருக்கவே, காலப்போக்கில் ரவா இட்லி அந்த உணவகத்துக்கே தனிப்பட்ட அடையாளமாகி விட்டது.
ரவா இட்லி வெந்ததும் பரவுகிற வாசனையே பசியைத் தூண்டும். சூடாகச் சாப்பிடுவதே சுவை. கூடவே, தேங்காய்ச் சட்னியும், உருளைக்கிழங்கு குருமாவும் இருந்தால்.. பேஷ்.. பேஷ்..!
தேவையான பொருட்கள்:
ரவா - 1 கிலோ
உளுந்து - அரை கிலோ
கடலைப் பருப்பு – 50 கிராம்
புளித்த தயிர் – 100 மிலி
பச்சை மிளகாய் – 50 கிராம்
கேரட் – 2
கடுகு, உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவைக்கேற்ப
செய்முறை:
உளுந்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். ரவாவை, நிறம் மாறும் பதத்துக்கு வறுத்து, உளுந்து மாவோடு சேர்த்து, உப்புக் கலந்து கரைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட் சீவலைப் போட்டுத் தாளித்து, தயிரை ஊற்றிக் கலக்கி, கரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றிக் கொள்ளுங்கள். விரும்பினால் முந்திரித் துண்டுகளைச் சேர்க்கலாம். பின்னர் வழக்கம் போல இட்லித் தட்டில் ஊற்றி அவிக்க வேண்டியதுதான்.
