Quantcast
Channel: Book Review – Balhanuman's Blog
Viewing all articles
Browse latest Browse all 178

2-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

$
0
0

இதன் முந்தைய பகுதி…

எனக்கு Western Music கிற்கு குருவாக அமைந்தவர் திரு. தன்ராஜ் மாஸ்டர் அவர்கள். அவரைப் பற்றி எவ்வளவு புகழ்ந்தாலும் அது அத்தனைக்கும் தகுதி உடையவர் அவர்.

அவர் யாரிடம் இசை கற்றுக் கொண்டார் என்பது எனக்குத் தெரியாது! அதை நான் அவரிடம் கேட்காமல் போய்விட்டேன்.

அவருக்கு Western Music-ல் அத்தனையும் அத்துப்படி. அத்துடன் இல்லாது தமிழிசையில் சிலப்பதிகாரத்தை ஓர் இசை நூல்தான் என்று ஆணித்தரமாக, அதில் அமைத்திருக்கின்ற வார்த்தைகளின் அர்த்தங்களைச் சொல்லியே வாதிட்டுக் குழப்பமின்றி விளக்கக் கூடியவர். பண் ஆராய்ச்சியிலே வரட்டுத்தனமான Theoretical விவாதங்கள் இல்லாமல் இசையின் இயல்பான தன்மையோடு விளக்கக்கூடிய விற்பன்னர்.

அதுமட்டுமின்றி, பன்னிரண்டு ராசிகளின் அமைப்பைப் படம் போட்டுக் காட்டி, அதில் பன்னிரண்டு சப்தஸ்வரங்கள் அமைந்திருக்கும் இடைவெளியை கனகச்சிதமாகக் குறிப்பிட்டு ஒவ்வோர் ஒலியசையும் (Frequency) எப்படி அமைந்திருக்கின்றன என்றும் எடுத்துச் சொல்லக் கூடியவர்.

அந்தக் காலத்தில் திரை இசைக்கு அதிகமான இசைக் கலைஞர்களுக்குப் பயிற்சி அளித்து திரை இசைக் குழுவிற்கு அனுப்பி வைத்தவர்.

Trinity College of Music, London‘, ‘Royal College of Music, London‘ போன்ற இசைக் கல்லூரிகளின் தேர்வுக்கு Practical, Theory இரண்டிற்கும் மாணவர்களைத் தயார் செய்து அனுப்பி, Individual Musician-களின் திறமையை வளர்த்து, அதிகப்படியான அளவில் வெற்றிபெற வைத்தார்.

திரை இசை அந்தக் காலத்தில் தரமானதாக இருந்ததால், முறையாகத் தயாரான சிறந்த இசைக் கலைஞர்கள் இசைக் குழுவில் இருக்கும்போது ஒன்றும் தெரியாமல் ஒருவர் இசையமைப்பாளராக வந்து விட்டாலும், இவர்களுடன் வேலை செய்யும்போது தங்களுடைய தவறை அறிந்து, ‘ஐயோ! நமக்கு இது தெரியாமல் போய் விட்டதே!’ என்று வருந்தி அவர்களும், ஏதாவது இதைப் பற்றித் தெரியாவிட்டால் பத்துப் பேர் முன்னால் தரக் குறைவாகிவிடும் என்று தம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் ஒரு முனைப்பு வருவதற்குக் காரணமாக இருந்தவர் மாஸ்டர் தன்ராஜ். விஷயம் தெரியாதவர்களும் எதாவது விஷயம் தெரிந்தவர்களாகத் தங்களை உயர்த்திக் கொள்ள நினைப்பார்கள்.

ஒவ்வொரு ஸ்டுடியோவிற்கும் தனி ஆர்க்கெஸ்ட்ரா இருக்கும். A.V.M.-ல் தனி ஆர்க்கெஸ்ட்ரா, தனி இசையமைப்பாளர், எல்லோருக்கும் மாதச் சம்பளம்.

ஜெமினி-வாஹினியில் தனித்தனி ஆர்க்கெஸ்ட்ரா, கோவை ஜூபிடர் பிக்சர்ஸிலும், சேலம் மாடர்ன் தியேட்டரிலும் தனி ஆர்க்கெஸ்ட்ரா என்று இசைக்கலைஞர்கள் நிறைய இருந்தார்கள்.

அதன்பின் வந்த மாற்றத்தால், நல்ல இசைக் கலைஞர்கள் மட்டுமே தங்களுக்கு வேண்டுமென்று பிரபலமாக வந்த இசையமைப்பாளர்கள் தங்கள் தங்களுக்கென்று தனியாக ஆர்க்கெஸ்ட்ரா வைத்துக் கொண்டார்கள்.

திரு.விஸ்வநாதன் ராமமூர்த்தி, திரு.கே.வி.மஹாதேவன், ஜி.ராமநாதன் இவர்களுக்குத் தனி ஆர்க்கெஸ்ட்ரா இருக்கும்.

இதில் ஒரு குறிப்பிட்ட வாத்தியக் கலைஞர்கள், அந்த வாத்தியத்திற்கென்று ஓரிருவர் மட்டும் இருந்தால், அவர்கள் மற்றும் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் சென்று வருவார்கள். அவர்களுக்கு எந்தக் கேள்வியும் இல்லை.

நான் சினிமாவில் நுழைந்த நேரமும் அந்த மாதிரியான நேரம்தான்! தனி இசைக் கலைஞர்களின் Standard of Playing மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தது.

ஒரு வாத்தியம் வாசிப்பவரை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவதே கஷ்டம். மிகவும் பயமாய் இருக்கும்.

வாசிக்கும்போது, யாராவது தவறு செய்துவிட்டால் முன்னால் இருப்பவர் திரும்பிப் பார்த்தால் தவறாய் இசைத்தவருக்கு சர்வ நாடியும் அடங்கிப் போய்விடும்.

நான் தன்ராஜ் மாஸ்டர் அவர்களிடம் மாணவனாகச் சேர்ந்தது 1969-ல் என்று நினைக்கிறேன். அதே வருடத்தில்தான் கர்நாடக சங்கீதத்திற்காக L.வைத்தியநாதன், L.சுப்ரமண்யன், L.சங்கர் அவர்களின் தந்தையிடம் மாணவனாகவும் சேர்ந்தேன்.

தொடரும்…

பால் நிலாப்பாதை



Viewing all articles
Browse latest Browse all 178

Trending Articles